கிராமத்தில் பெண் பித்தனான தந்தையைக் கொன்ற கொலைகாரனை தேடும் புலனாய்வு பத்திரிகையாளன்!
ட்ரூ
தெலுங்கு
இப்படத்தில் வில்லனும், நாயகனும் ஒருவரே. உளவியல் அடிப்படையிலான கதை. லண்டனில் பத்திரிகையாளராக வேலை செய்துகொண்டிருக்க கூடிய நாயகன், ஆந்திரத்திற்கு வருகிறார். அவரது அப்பா திடீரென மின்சார தாக்குதலில் இறந்துவிடுகிறார். அதற்காகவே அயல்நாட்டிலிருந்து வருகிறார். அவர் செய்யவேண்டியதை நெருங்கிய நண்பன் செய்து எரியூட்டிவிடுகிறான். இப்போது நாயகன் செய்வதற்கு வேலை ஒன்றுமில்லை. எனவே, அப்பாவின் இறப்பு கொலையா என துப்பறிகிறார். ஆதாரங்களை சேகரிக்கிறார். இறந்துபோன இடத்திற்கு சென்று ஆராய்கிறார். அப்போது அவரை சிலர் விசாரணை செய்யாதே என எச்சரிக்கிறார்கள். யார் அவர்கள் என தேடிப்போகிறார். அப்போது அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கிறது.
அவரை மிரட்டிய இளம்பெண், அவரது காதலி என்று கூறுகிறார். கூடவே வீடியோ ஒன்றையும் கொடுக்கிறார். அப்போதுதான் இறந்துபோனவர் பற்றிய இன்னொரு பக்கம் தெரியவருகிறது.
மலையாளத்தில் கிஷ்கிந்தா காண்டம் என்ற படம் வந்தது யாருக்கேனும் நினைவிருக்கிறதா? அதேபாணி.
நாயகனின் அப்பா கைத்தொழில் மன்னன். காம சூத்திர கண்ணன். வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அதற்கு வட்டியாக அக்குடும்பத்தில் உள்ள பெண்களோடு சுகம் அனுபவிப்பது அவரது வாடிக்கை. தினசரி ஒரு பெண் என அனுபவித்து மகிழ்கிறார். அவரது வீட்டுக்கு வரும் விருந்தினரான இளம்பெண்ணைக் கூட வல்லுறவு செய்யமுயல்கிறார். அவ்வளவு ஏன், வருங்கால மருமகளைக் கூட தோளில் இரு கைகளை வைத்து ஆசையாக தடவிக்கொடுத்து பேசி ஆசிர்வதிக்கிறார். எளிமையாக காம பிசாசு.
காமம் தீவிரமானால் கடன்வாங்கியவன் என்றாலும் கணவன் சும்மா இருப்பானா? அவர்களை கந்துவட்டிக்காரர் தனது ஆட்களை வைத்து தீர்த்துக்கட்டுகிறார். தனது அரசியல், காவல்துறை செல்வாக்கு வைத்து சமாளிக்கிறார். இப்படி கிராமத்தில் உள்ள அனைத்து இல்லை பதினைந்து முதல் ஐம்பது வயது வரம்பு உண்டு. அப்படியானவர்களை கட்டிலில் போட்டு கபடி விளையாடுகிறார். தெலுங்கு படங்களில் எப்போதுமே தீர்வுக்கு அவர்களே பாதிக்கப்பட்டவர்களே முனைய மாட்டார்கள். ஆகாயத்தைப் பார்ப்பார்கள். அங்கிருந்து நாயகன் வரவேண்டும். அப்படித்தான் லண்டன் நாயகன் வருகிறார்.
நாயகன் செய்த செயல் கிராமத்தினருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால், நாயகனுக்கு குற்ற உணர்ச்சியையும் மூளையில் சிக்கலையும் ஏற்படுத்துகிறது. இதனால் அவர் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகிறார். பிளே, ரீப்ளே மோடுக்கு போகிறார். அதுதான் பிரச்னை.
படத்தில் நாயகன் வெளிநாட்டுவாசி என்றால் நம்பமுடியவில்லை. அந்தளவு லோக்கலாக தெரிகிறார். தாடி, மீசை என எதுவும் அவர் படித்தது போல தெரியவில்லை. கூல் லிப் வைத்துக்கொண்டு கஞ்சா விற்பவர் போல தோற்றம். தயாரிப்பாளரின் மகனோ? இருக்கலாம்.
படத்தில் அதிக காட்சிகள் நாயகனின் அப்பாவின் சரச சல்லாபத்திற்கும், பெண்களுக்கும் செல்கிறது. மகிழ்ச்சி. அதுமட்டுமே பார்வையாளர்களுக்கு ஆறுதலாகிறது. மற்றபடி படம் கல்யாண வீடியோ போல எடுத்து வைத்திருக்கிறார்கள். கதையாக ஈர்க்கும் படம், திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாததால் மூச்சு வாங்கி அப்படியே நிற்கிறது.
நாயகன், நாயகி காதல் காட்சிகளெல்லாம்.... அப்படியொரு அபத்தம். சண்டைக்காட்சியில் சாக்குப்பையில் கண், வாய்க்கு கிழித்து விட்டுக்கொண்டு ஆட்கள் வருகிறார்கள். கிராமத்தில் இந்தளவு கிரியேட்டிவிட்டியோடு யார் சண்டைபோடுவார்கள்? துப்பாக்கி கையில் உள்ளது. அதை வைத்து சுடாமல் தூக்கிக்கொண்டு ஓடுவது எதற்காக, ஆறுபேர் சுட்டும் கூட நாயகனுக்கு தோல் மயிர் கூட சேதமில்லை. அதற்கு விறகு கட்டையை எடுத்து அடித்திருந்தால் கூட நாயகனை வீழ்த்தியிருக்கலாம்.
படத்தில் நாயகன் நடிப்பதை விட நிறைய புகைக்கிறார். அவரது அப்பா பாத்திரமும் புகைத்துக்கொண்டே இருக்கிறது. இருவருமே குணத்தில் மாறுபட்டவர்கள் கிடையாது. ஒரு பெண்ணை உண்மையை சொல்லு என மிரட்டும்போது, வல்லுறவு செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என நாயகன் மிரட்டுகிறார். அட பைத்தியமே.. அவன் அப்பா காம பிசாசு என்றால் இவன் சைக்கோபாத் என அந்த பெண் நினைத்திருப்பாள் அல்லவா?
அப்பன் பெண் பித்தன். ஒருவன் கூடவா அவரைப் பற்றி பேசாமல் இருப்பார்கள்? செத்துவிட்டாலும் செய்த அநியாயம் யாருக்கும் தெரியாமல் இருக்குமா என்ன? நாயகனுக்கு அப்பா பற்றி ஏதும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாமும் இதுபோல ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாதது போல இருப்பதே உத்தமமான காரியம்.
கோமாளிமேடை குழு


கருத்துகள்
கருத்துரையிடுக