யூட்யூபில் கலக்கும் சீன ஷார்ட் டிராமாக்கள்! சூப் விற்று குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவரும் நாயகி!



 
சீன ஷார்ட் டிராமாக்கள்

முதல் கதை, இளம்பெண் படுக்கையில் விபத்துக்குள்ளாகி படுத்திருக்கிறாள். எழும்போதுதான் தெரிகிறது. அவளுடைய உடலில் நவீனகால இளம்பெண்ணின் ஆன்மா இடம்பெயர்ந்திருக்கிறது. காலப்பயண ஷார்ட் டிராமா

இந்த டிராமாக்கள் தரத்தில் சன்டிவி சீரியல்களைப் போன்றவை. மிகையான நடிப்பு, பொல்லாத வில்லத்தனம் ஆகியவை உள்ளவை.

இளம்பெண்ணுக்கு இரண்டு அண்ணன்கள் உண்டு. இருவருமே சம்பாதிக்க தெரியாதவர்கள். மணமானவர்கள் என்றாலும் தங்கையின் பேச்சை கேட்டு நடப்பவர்கள். அந்த இளம்பெண்ணோ, தான் காதலிப்பவனுக்காக அண்ணன் மனைவி வளர்க்கும் கோழி, ஆடுகளை கூட திருடிக்கொண்டு விற்று செலவழிக்கும் முட்டாள். இதை இளம்பெண் புரிந்துகொண்டு தனது குடும்பத்தை எப்படி செல்வம் கொண்டதாக வளர்த்து எடுக்கிறாள் என்பதே கதை.

இளம்பெண்ணுக்கு தான் வாழும் காலத்தை தாண்டிய எதிர்கால அறிவு உண்டு. எனவே, அதை வைத்து பணம் சம்பாதிக்க முயல்கிறாள். முதலில், பதினான்கு பேர் கொண்ட பெரிய குடும்பத்திற்கு சாப்பிடும் அளவுக்கு அரிசியோ, பருப்போ எதுவுமே இருப்பில் இல்லை. இல்லை என்றால் சம்பாதிக்கவில்லை என்றல்ல. அவர்கள் செய்த தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில்லை. வோன்டன் என்ற தின்பண்டத்தை தயாரித்து இளம்பெண்ணின் மூத்த அண்ணி விற்கிறாள். அது எதிர்பார்த்தபடி விற்பதில்லை.

விபத்துக்குள்ளாகி மீண்டெழுந்த தங்கை, தான் செய்த தவறுகளை புரிந்துகொள்கிறாள். அவள்தான் அண்ணன் மகன் கல்வி கற்பதை தடுத்து நிறுத்தியவள். இது அவளது மூத்த அண்ணிக்கு கோபத்தை ஏற்படுத்தி தீராத பகையை ஏற்படுத்துகிறது. அவளை கல்யாணம் செய்து கொடுத்தால்தான் நாம் நிம்மதியாக இருக்கமுடியும் என ஆவேசத்தோடு சொல்கிறாள். 30 டேல் நாணயத்தை நீ சம்பாதித்து கொடுக்கவேண்டும் அப்போது உன்னை நம்புகிறேன் என்றும் சவால் விடுகிறாள்.

மூத்த அண்ணிக்கு தெரியும், அவளது நாத்தனார். தொழில் செய்து பழக்கமில்லை. நிச்சயம் சவாலில் ஜெயிக்க முடியாது என நினைக்கிறாள். நாயகியான இளம்பெண் அதை ஏற்கிறாள். அவளுக்கு மணமாகி பெண் பிள்ளை இருக்கிறாள். அவளது கணவன் படித்தவன்.ஆனால் பண்பில்லாதவன். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான். மனைவியிடம் காசு கேட்டு தொந்தரவு செய்கிறான். அவனது வீட்டில் சொந்த பிள்ளையை வேலை செய்ய வைத்து அவளது பாட்டி நிம்மதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.அதை அறிந்து பிள்ளையை மீட்டுக்கொண்டு வருகிறாள்.

ஏற்கெனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தின்ன சோறு இல்லை. இனி தன்னுடைய சொந்த பிள்ளையை எப்படி காப்பாற்றுவது? இதற்காக அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதுதான் விஷக்கிழங்கு, கசாவா எனும் அந்த கிழங்கு கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டில் கிடைக்கிறது. அது பஞ்சகாலம். எனவே, மக்கள் பசி தாங்காமல் கிழங்குகளை விஷம் என தெரியாமல் சாப்பிட்டு அதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

நாயகிக்கு அந்த கிழங்கின் விஷத்தை எப்படி நீக்குவது என தெரியும். எதிர்கால அறிவுதான். எனவே, அந்த கிழங்கை சமைத்து அதை தானும் பிள்ளையுமாக சாப்பிட்டு பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். இப்போது வீட்டில் உள்ளவர்களின் பசியைப் போக்கவேண்டும். முதலில் வீட்டில் உள்ளவர்கள் அதை சாப்பிட மறுக்கிறார்கள். எப்போதும் போல மூத்த அண்ணன் தங்கையை நம்பி, கிழங்கை எடுத்து சாப்பிடுகிறான். அவனுக்கு ஒருமணிநேரம் கழித்தும் ஏதும் ஆகாத காரணத்தால் குடும்பமே கிழங்குகளை எடுத்து சாப்பிட்டு பசியாறுகிறது. நாயகியை பாராட்டி போற்றுகிறது. பசி தீர்ந்துவிட்டது. ஆனால், குடும்பம் பிழைக்க தொழில் வேண்டுமே....

சந்தைக்கு சென்று பல்வேறு கடைகளை பார்க்கும்போது சூப் கடை போட்டால் என்ன என்று தோன்றுகிறது. அதற்கான ரெசிபியும் நாயகிக்கு எதிர்காலத்தில் இருந்து கிடைத்திருக்கிறது. எனவே, தேவையான பொருட்களை கடைகளில் இருந்தும், மருந்துகடையில் இருந்தும் வாங்கி வருகிறாள். கூடவே, இறைச்சியையும் வாங்கி வந்து சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுகிறாள். காட்டில் இருந்து ஜின்செங் எடுத்து விற்று கிடைத்த காசு என்கிறாள். குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு உணவை சாப்பிடுகிறார்கள். வெகுநாட்களுக்கு பிறகு இறைச்சி சாப்பிடுகிறது அந்த குடும்பம். நாயகியின் அம்மாவுக்கும் மகள், மனம் திருந்தி குடும்பத்தை கவனித்துக்கொள்கிறாள் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாயகியும், பெண் குழந்தையும், தாயாரும் சேர்ந்து சூப் விற்கிறார்கள். அதில் அவர்களை வீழ்த்த போட்டிக்கடைகள் வருகின்றன. அவளது சூப் பார்முலாவைத் திருட முன்னாள் கணவன், மாமியார் முயல்கிறார்கள். இதெல்லாம் கடந்து பல்வேறு ஓட்டல்களுக்கு சூப்பை கொடுக்குமாறு கேட்கிறார்கள். அதையும் அவள் ஏற்கிறாள். வீட்டில் இருந்து திருடி விற்ற கோழிகள் நினைவுக்கு வர, சந்தையில் கோழி குஞ்சுகளை வாங்கி வருகிறாள்.
நாயகி சூப்பின் பார்முலாவை கேட்கும் ஓட்டல்காரருக்கு கொடுக்க மறுக்கிறாள். அதற்கான காரணத்தை அவளின் பெண் பிள்ளை சொல்வது நல்ல ஐடியா. நாயகியின் அம்மாவுக்கு உடனே பணம் கிடைத்தால் நன்றாக இருக்குமே, எதற்கு பெரிய ஆட்களோடு சண்டை போட்டுக்கொண்டு என யோசிக்கிறாள். ஆனால், நாயகி குடும்பத்தொழிலாக சூப்பை மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறாள்.

சூப் தொழிலை நடத்துவது முழுக்க பெண்கள்தான். அதில் வேலை செய்யும் பெண் பிள்ளை, தாயார், பங்களிக்கும் இரு அண்ணிகள் என அனைவருக்குமே உரிய சம்பளத்தை நாயகி கொடுக்கிறாள். அந்த உத்தி பயன் கொடுக்கிறது. இறுதியாக மூத்த அண்ணிக்கு 30 டேல் நாணயங்களை சம்பாதித்து கொடுத்தே விடுகிறாள். என் திருமணம் பற்றி நான்தான் முடிவெடுப்பேன் என்று சொல்லித்தான் கொடுக்கிறாள். அதேநேரம் போதுமான வருமானம் வருவதால், மூத்த அண்ணியின் பிள்ளையை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறாள். அவள்தான் அந்த பிள்ளையை செலவாகிறது என பள்ளியை விட்டு நிறுத்தினாள். இந்தமுறை அந்த அண்ணன்களின் பிள்ளைகளை படிக்க வைப்பது கல்விச்செலவு முழுவதும் தன்னுடையது என அறிவித்து விடுகிறாள். இறுதியாக தொடர் முடியும்போது, கல்வி பற்றி மூத்த அண்ணனின் பிள்ளையிடம் பேசுகிறாள்.

இது டிவி சீரியல் வகையறாதான். ஆனால், குடும்ப உறவு, அதிலுள்ள பிடிவாதமான பாசம், தொழிலுக்கு குடும்ப உறுப்பினர்கள் உதவுவது, அனைவரும் ஒன்றாக சேர்ந்து முன்னேறுவது, வருமானத்தை பகிர்வது, அனைவருக்குமான மரியாதையைக் கொடுப்பது, பெண்களை ஆண்கள் முழுமையாக நம்புவது ஆகிய கருத்துகளில் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

பெண்களுக்கு சமையல் மட்டுமல்ல குடும்பத்தை தொழிலை நிர்வாகம் செய்யவும் தெரியும். அவர்களுக்கு தேவையெல்லாம் ஊக்கமும் ஆதரவும்தான் என்பதை கூறுகிற ஒருமணிநேர ஷார்ட் டிராமா இது.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!