மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு சென்ற ஆசிரியர், விடுதலையாகி தனது மகன், மகளைத் தேடி அலையும் கதை!

 



 சீக்ரெட் ஆப் பியர்ல்ஸ்
துருக்கி டிவி தொடர்
யூட்யூப்

36 அத்தியாயங்களை தாண்டிப்போனாலும் நாயகனது பிளாஷ்பேக் கதையை சொல்லாமல் இழு இழுவென இழுத்துவிட்டார்கள். அதெல்லாம் கடந்து தொடர் கொஞ்சமேனும் பார்க்கும்படி இருக்கிறதென்றால் அதற்கு துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வரும் நாயகனின் நடிப்பையே அடையாளமாக சுட்டிக்காட்ட வேண்டும்.
வயதானவரை நாயகனாக வைத்து டிவி தொடர் எடுத்து அதை எப்படி வெற்றிகரமாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அசீம் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் உடல்மொழி, முக உணர்வு, வசனம் என அத்தனையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அசீம், அவரது மனைவி ஹண்டேவைக் கொன்றதாக குற்றம்சாட்டி சிறையில் பல்லாண்டுகள் தள்ளப்படுகிறார். தண்டனை முடிந்து வரும்போது அவரின் ஆண், பெண் என இருபிள்ளைகளும் அரசு விதிகள்படி காப்பகத்தில் இருந்து தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அசீம் கண்டுபிடிப்பதே மீதிக்கதை.

மேற்சொன்ன கதை மட்டுமே வைத்துக்கொண்டாலே கதையை உணர்ச்சிகரமாக கொண்டு செல்லமுடியும். ஆனால் இயக்குநர், அதோடு சேர்ந்து அசீம் தங்கும் மலிவான குறைந்த விலை விடுதியில் நடனக்காரி தில்பர், அவளின் உறவினன் செர்ரே, தில்பரின் வன்முறை குணம் கொண்ட ரவுடிக் கணவன், விடுதியில் வேலை செய்யும் தொல்லியல்துறை மாணவன் இசாட், அசீமின் நண்பர்களான காசிம், நெர்கிஸ் இணையர், அசீம் துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் பட்டன் தொழிற்சாலை அதிபர், அவரது மகள் அக்கா, அந்த வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஹாட்டிஸ், கார் ஓட்டுநர் நியாஸ், தொழிலதிபரின் உதவியாளரான சிபெல் என நிறைய பாத்திரங்கள் அடுக்கடுக்காக உள்ளன. அவர்களின் வாழ்க்கை பிரச்னைகள், ஆசை, பேராசை, துயர், வெற்றி, வேதனை என அனைத்தும் தொடரில் நீரோட்டம் போல கூறப்படுகிறது.

தொடரில் நெர்கிஸ் என்ற வேதியல் ஆசிரியை தவிர மற்ற பெண் பாத்திரங்கள் அனைத்தும் சுயநலமான நோக்கங்களைக் கொண்டவையாகவே உள்ளன. தில்பர் பாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். அவள் முதலில் அசீமை ரிசப்ஷனில் பார்க்கிறாள். அவர், அப்போதே செர்ரேவை கழுத்தை அழுத்தி பட்டன் கத்தியை பயன்படுத்த முடியாமல் செய்து மிரட்டிக்கொண்டிருப்பார். அதைப் பார்த்த தில்பர், அவரோடு நெருக்கமாக நெருங்க முயல்கிறாள். அசீமுக்கு அவள் தனது பெண்ணைப் போல தோன்றியிருக்கலாம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் என பின்னர் புரிந்துகொள்கிறார். அவரை கவசம் போல பயன்படுத்தி தனது வன்முறைக்கணவனிடமிருந்து தப்பிக்க நினைக்கிறாள். காதலிப்பதாக முதலில் சொன்னவள், கணவன் இருப்பதையோ, அவன் மூலமாக பிள்ளை இருப்பதையோ அசீமுக்கு கூறுவதில்லை.

அந்த பொய்கள், அவளை அவரிடமிருந்து தூரமாக்குகிறது. தில்பர் ஒரு சிக்கலான பாத்திரம். ஆண்கள் யாரையாவது அண்டி, கொஞ்சம் நேர்மையானவனை அண்டி பிழைத்துக்கொள்ள முடியுமா, அடிக்காமல் உதைக்காமல் இருப்பானா என ஏங்குகிற பாத்திரம். அதற்காக அவள் பொய் சொல்லி அசீமை ஏமாற்றுகிறாள். அதன் விளைவாக தில்பரின் கணவன் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அசீமை தெருவில் அடித்துப்போடுகிறார்கள். அதற்கு அடுத்தநாளே சென்று தில்பரின் கணவனை அடித்து உதைக்கிறார் அசீம். பிறகு தனது மாணவன் கேப்டன் என்பதால், அவனை வைத்து கணவனை கட்டுக்குள் கொண்டு வருகிறார்.

அசீம் ஒரு ஆசிரியர். அதேசமயம் அவர் தில்பரை காதலிக்கிறாரா என்றால் உடல் ரீதியாக அல்ல மனரீதியாக என்று கூறலாம். பெரிதாக அவர் தனது காதலை வெளிப்படுத்துவதில்லை. பொய் சொன்ன விவகாரத்திற்கு பிறகு, ஹனி, டியர், காதலே என்று கூட சொல்வதில்லை. அதை தில்பர் உணருகிறாள். அதேசமயம், அவளுக்கான பாதுகாப்பு அசீம் மட்டும்தான் என நம்புகிறாள். அசீம் தவறுகளை பொறுப்பதில்லை. விடுதி காப்பாளனாக உள்ள இசாட்டைக் கூட நேசிக்க கூடியவர்தான். அவனை காயப்படுத்தினான் என்பதற்காக தில்பரின் கணவனுக்கு கையில் டிஷ்யூ பேப்பரைக் கொடுத்து மூக்கை உடைத்து விட்டு வருவார்.

இசாட்டிடம் ஒருமுறை நான் விரும்புகிறவர்களிடத்தில் எந்த உத்தரவும் போடுவதில்லை என்பார். தொடரின் நிறைய இடங்களில் மெல்லிய கிண்டல், கேலி, கொண்டதுபோல பேச்சை உருவாக்கியிருக்கிறார்கள். அது சூழலுக்கும் பொருந்திப்போகிறது. அசீம், கோபம் கொள்கிறவர்களை அரவணைத்து தேற்றும் குணம் கொண்டவராக இருக்கிறார். மாணவி அக்கா, பட்டன் தொழிலதிபரின் குடிகாரத் தம்பி, தில்பர், மகன் ஜிகானின் வளர்ப்பு அம்மா என நிறையப் பேர்களைக் கூறலாம்.

ஆசிரியர் என்பதால் துருக்கி கவிஞர்கள், பாடகர்கள் என நிறையப்பேர்களை தொடர் நெடுக அசீம் பாத்திரம் கூறிக்கொண்டே வருகிறது. நல்ல முயற்சி. இந்த வகையில் துருக்கி இலக்கியங்கள் பரவலாகும். மது விடுதியில் வரும் தில்பர் நடனம் ஆபாசமானது என்று சொல்லலாம். பொழுதுபோக்குக்கானது என நம்பலாம். பாடல்களை பெரிதாக வெட்டாமல் அப்படியே பாடவிட்டிருக்கிறார்கள். பாடல், நடனம் என இரண்டையுமே ரசிக்கலாம். அசீம் சில பாடல்களை அவராகவே பாடுகிறார். அதன் அர்த்தம் புரியும் நமக்கும் கண்களில் கண்ணீர் தளும்புகிறது.

அவர் கையில் கோர்க்கப்படாத முத்துக்களை வைத்திருக்கிறார். ஏன் அந்த முத்துக்களை கோர்க்கவில்லை என்பது தொடரில் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். தொடரில் நிறைய இடங்களில் நாம் உணர்ச்சிப்பூர்வமாக உருகும் கட்டங்கள் உள்ளன. அப்பா - மகன் உறவு என்பது அதிக இடத்தைக் கொண்டதாக இருந்திருக்கலாம்.

அசீமை கோபம் கொள்ள வைக்கும் வசனம் உங்கள் பெயர் என்ன? மறந்திட்டேனே என்றால் எரிச்சலாகி கேலியாக பதிலடி தருவார். சட்டப்படி நடந்துகொள்வேன். மகளைப் பற்றிய தகவலை தரமாட்டேன் என்று கூறும் அரசு அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டியபடியே பேசும் காட்சி சிறப்பாக உள்ளது. அவர் சந்திக்கும் பணக்காரர்கள், அரசு அதிகாரிகள் பலரும் அவரது பெயரை மறந்துவிடுகிறார்கள். அதை அவரிடமே கூறி பெயரைக் கூறச்சொல்லுகிறார்கள்.

அசீம் யாருடைய பெயரையும் மறப்பதில்லை. ஆனால் அவரை விட வயது குறைந்தவர்கள் பணக்காரர்கள், அரசு அதிகாரிகள். அந்த ஒரு காரணத்தாலேயே எளிதாக பெயரை மறந்துவிடுகிறார்கள்.  

மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவர், மாஃபியா ரவடியான ஜிகானை எப்படி காதலிக்கிறாள், ஏன் என்று புரியவில்லை. அடுத்து, பட்டன் தொழிலதிபரிடம் காதல் சமிக்ஞைகளை அசீம் காட்டுவதில்லை. நட்பாகவே பழகுகிறார். அதை ஏன் அவர் காதலாக மாற்ற முயல்கிறார்? இத்தனைக்கும் அந்த பட்டன் தொழிலதிபரின் குடும்பமே, அவரின் கோபத்தால் உடைந்து நொறுங்கிக்கொண்டிருக்கிறது. அவரின் மகள் அக்காவும் கூட பாதிக்கப்பட்ட தரப்பு எனலாம். சிபெல் என்ற பாத்திரம் தவிர அந்த வீட்டில் உள்ளவர்கள் யாருமே குட்மார்னிங் சொன்னால் கூட அதை சொல்லாமல் வேலை செய்யும் மன இறுக்கம் கொண்டவர்கள்.
இப்படியான வீட்டில் அசீம் மட்டுமே அவர்களை மனிதர்களாக மாற்றுகிறார். சிரிக்க வைக்கிறார். தவறுகளை உணர வைக்கிறார். இத்தொடரில் துருக்கி இசை ஒரு பாத்திரம் போலவே வருகிறது. அதை சமயத்தில் ஒருவரை கொண்டாட வைக்கிறது. பெரும்பாலானா நேரங்களில் தனிமையை துயரை நமக்கு மட்டுமே தெரிந்த இறந்த கால புண்களை யோசிக்க வைக்கிறது.

அசீம் மீது இருபெண்கள் அன்பு செலுத்துகிறார்கள். நடனக்காரி தில்பர். அவளுக்கு அவளுடைய பையனை காக்கவேண்டும். அதற்கு அசீமை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறாள். அசீம், அவளை சமூகத்திலுள்ள பிறர் போல விலைமாது, வேசி என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.தவறாக அனுமதி இன்றி அவளை தொடுவது கூட இல்லை. தோளில் சாய்த்துக்கொள்வது, அணைத்துக்கொள்வதுஅவ்வளவுதான். அவளை நடன விடுதியில் அவலமாக இழிவாக நடத்தும்போது விடுதி உரிமையாளனோ, தில்பரின் உறவினனோ உதவிக்கு வருவதில்லை. அசீம் மட்டும்தான் அதை தவறு என்று சொல்லி சண்டைபோடுகிறார்.

இன்னொருபக்கம் பட்டன் தொழிலதிபர். இவருக்கு தனது பெண் பிள்ளையைப் பார்த்துக்கொள்ள ஒரு தாதி வேண்டும். அதேசமயம் தன்னுடைய தொழிலுக்கு உதவும் வகையில் வல்லுநராக இருந்தாலும் நன்றாக இருக்குமே என நினைக்கிறார். அசீம் துருக்கி மொழியைக் கற்பிக்கவே அந்த வீட்டுக்கு வருகிறார். பின்னாளில், பட்டன் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு செமினார் எடுக்கும் வகையில் முன்னேறுகிறார். தொழிலதிபர் பெண்கள் வன்முறை பற்றி பேச உரை ஒன்றை எழுதிக் கொடுக்கிறார். செய்யும் வேலைக்கு காசு வாங்கிக்கொள்கிறார். மற்றபடி தொழிலதிபரை காதலியாகவோ, வேறு ஆதாயத்திற்கோ பயன்படுத்துவதில்லை. ஒரு தோழியாக பார்க்கிறார். பணம் நிறைய வைத்திருக்கும் தோழி. தொழிலதிபருக்கு, ஆசிரியர் நேர்மையானவர். சிறந்த குணங்களைக் கொண்டவர், ஆனால், அவரைப் பற்றி, குடும்பம் பற்றி தெரியவில்லை. அதை தெரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறார். அதுதான் இருவருக்குமான உறவுச்சிக்கலுக்கு கொண்டு செல்கிறது. இதில் அசீமுக்கு பெரிய வருத்தம் ஏதுமில்லை. மாணவிக்கு பாடம் நடத்திவிட்டு அம்மாவைப் பார்த்து செல்வது வழக்கம். அவர் நன்றாக பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி. அசீம் அவர் பாட்டிற்கு சென்றுவிடுகிறார். அவருக்கு மகள் நெகிரை தேடும் வேலை உள்ளது.

நெகிர் போதைப்பொருட்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிறகு காணாமல் போனவள்.அவளை போதைப்பொருள் பயன்படுத்தும்படி செய்தவர்களை அசீம் தேடிக்கொண்டிருக்கிறார். அதேவேளையில் மகளைப் பற்றிய விவரங்களையும் தேடி அலைகிறார்.

அப்பா - மகன் உறவை சொல்ல வந்த கதை ஒருகட்டத்தில் நிறைய பாத்திரங்கள் உள்ளதால் க்ரைம் திரில்லராக மாறுகிறது.

அசீமின் குற்றம், தண்டனை காரணமாக அவரின் வட்டாரத்திலுள்ள நட்புகள், குடும்ப உறவுகள், புதிதாக ஏற்படும் உறவுகள் ஆகியோருக்கு இடையிலான ஏற்ற இறக்கமான உணர்ச்சி கொந்தளிப்பான இயல்புகளே கதையாக பயணிக்கிறது.

கோமாளிமேடை குழு
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!