ஆல் இந்தியா ரேடியோவின் சிக்னேச்சர் ட்யூன் இசையமைப்பாளர்!
ஆகாசவாணியின் சிக்னேச்சர்
ட்யூனை உருவாக்கிய ஜெர்மனி அகதி!
இந்தியாவின் முதல் வானொலியான ஆகாசவாணியை எப்போது
ட்யூன் செய்தாலும் வரும் சிக்னேச்சர் ட்யூன் யாராலும் மறக்கமுடியாத ஒன்று. ட்யூனின்
இனிமையால் எங்குகேட்டாலும் மிகச்சரியாக ஞாபகப்படுத்தி சொல்லும் நமக்கு அதனை உருவாக்கியவர்
யாரென்றால் உதட்டை பிதுக்குவோம். வரலாற்று பொக்கிஷமாக இன்று மாறிய அந்த சிக்னேச்சர்
ட்யூனின் பிரம்மா, ஜெர்மன் அகதியாக இந்தியாவுக்கு வந்த இசையசைப்பாளர் வால்டர் காஃப்மன்.
இசையின் தொடக்கம்!
ஜெர்மனியின் கார்ல்ஸ்பாத் நகரில் 1907 ஆம்
ஆண்டு பிறந்த வால்டர் காஃப்மன் 1930 ஆம் ஆண்டு பெர்லினில் உள்ள Staatlich Hochschule für Musik கல்லூரியில்
இசை கற்றார். பிராக்கிலுள்ள ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் மியூசிக்காலஜியில் முனைவர் படிப்பை
தேர்ந்து படித்தவர், இவரின் வழிகாட்டி ஆசிரியர் குஸ்டாவ் பெக்கிங் நாஸியின் இளைஞர்பிரிவு
உறுப்பினர் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்று, முனைவர் பட்டத்தை பெற மறுத்துவிட்டார்.
பின் பெர்லினில் 1927-1933 வரை பெர்லின், கார்ல்ஸ்பாத், ஈஜெர் நகரங்களில் ஓபரா நாடகங்களுக்கு
இசையமைத்து வந்தார். பின்னரே அரசியல் நிர்பந்தங்களால் இந்தியாவுக்கு வந்தார் வால்டர்
காஃப்மன்.
ட்யூன் பிறந்த கதை!
பதினான்கு
ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த வால்டர் 1936 ஆம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவுக்கான சிக்னேச்சர்
இசைக்குறிப்பை எழுதினார். வயோலா, வயலின், தம்புரா, செல்லோ உள்ளிட்ட இசைக்கருவிகளின்
ஒருங்கிணைப்பில் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த இந்த இசை, ஆல் இந்தியா ரேடியோவின் தொன்மை,
பாரம்பரியம் மற்றும் சிறப்பை இன்றுவரை நம் மனதில் பதியவைத்துள்ளது. பாம்பே இசை சங்கத்தில்
இணைந்த வால்டர் காஃப்மன் பியோனோவும் எடிஜியோ வெர்கா(செல்லோ), மெகில் மேத்தா(வயலின்)
ஆகியோர் வாரந்தோறும் வியாழன் அன்று வில்லிங்டன் ஜிம்கானாவில் இசைநிகழ்ச்சியை நடத்திவந்தனர்.
இந்தியர்களுக்கான இசை!
இசைஆர்வலர்களுக்கு இச்சங்கத்தில் உறுப்பினராக
மாதம் ரூ.15, மாணவர்கள், பெண்கள், கிறிஸ்துவ மிஷனரி சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ.
5 என கட்டணம் வசூலித்தனர். ஏன் இந்தியாவை தேர்ந்தெடுத்தீர்கள்? என்ற கேள்விக்கு, இந்தியாவுக்கு
விசா எளிதில் கிடைத்தது என குறும்பாக பதில் கூறிய இசை ஆளுமை வால்டர் என தகவல் தெரிவிக்கிறது
Jewish Exile
in India: 1933-1945 என்ற நூலிலுள்ள அகதா ஷிண்ட்லரின் கட்டுரை.
முதலில் இந்திய இசையைக்கேட்ட வால்டர் அதன்
மீது பெரிதாக ஈர்க்கப்படவில்லை.
பல்வேறு இசைவடிவங்களை கேட்டுப்பழகிய பின்னரே வால்டர்
இந்திய இசை மீதான தன் கருத்தை மாற்றிக்கொண்டு, அதன் மீது ஈர்க்கப்பட்டார். "வெறும்
மூளையால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவான இசைக்கு ரசிகர்களாக பல லட்சம் மக்கள் இருப்பதை
அறிந்து பின்னரே இந்திய இசை பற்றிய என் கருத்தை மாற்றிக்கொண்டேன்" என தன் கடிதங்களில்
எழுதியுள்ள வால்டர் வட இந்தியா, தென் இந்தியா இசைவடிவங்களைப் பற்றிய நூல்களை(The Ragas
of North India, The Ragas of South India : A Catalogue of Scalar Material and Musical Notations of the Orient:
Notational Systems of Continental, East, South and Central Asia)
படித்து தெளிவாகியதோடு ஆல் இந்தியா ரேடியோவில் கர்நாடக சங்கீத கலைஞர்களுடன் பணிபுரிந்தும்
ஆசிய இசையில் அனுபவங்களை பெற்றிருக்கிறார்.
1937-46 காலகட்டப் பணியில் 'அனுசுயா' எனும்
இந்தியாவின் முதல் ரேடியோ இசைநாடகத்துக்கு பணியாற்றி சாதனை செய்தார் வால்டர். மேலும்
பவ்னானி ஃபிலிம்ஸ் மற்றும் அரசு செய்திகளுக்கும் இசையமைத்துள்ளார் வால்டர் காஃப்மன்.
"மேற்கத்திய இசையை கிழக்கத்திய மனங்களுக்கு ஏற்ப மாற்றிய ஜெயித்த இசையமைப்பாளர்"
என வால்டருக்கு அன்றே புகழாரம் சூட்டியது டைம்ஸ் நாளிதழ்.
இசையில் பல்வேறு நவீன பரிசோதனைகளை முயற்சித்த
வால்டர் காஃப்மன் 1938 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடா, இங்கிலாந்து என பயணித்தவர் 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ப்ளூமிங்டனிலுள்ள இந்தியானா
பல்கலையில் இசை ஆசிரியராக பணிபுரிந்து 1984 ஆம் ஆண்டு காலமானார். இசையலைகளில் இறவாமல்
வாழ்கிறார் அகதி இசைக்கலைஞர் வால்டர்!