இந்தியாவில் பிளாஸ்டிக் தடை! - என்ன ஆகும் மருத்துவத்துறை?






Image result for plastic


பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வருமா?

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மத்திய அரசின் தடை உத்தரவு, இந்திய மருத்துவத்துறையில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

அக்டோபர் 2 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சிரிஞ்சுகள், ரத்தப்பைகள், மருந்து பாட்டில்கள் என மருத்துவத்துறையில் பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களே நிறைந்து உள்ளன. 
இத்துறை சார்ந்த தயாரிப்பாளர்கள் இவற்றை உடனடியாக எப்படி மாற்றுவது என திகைப்பில் உள்ளனர். ”நாங்கள் இப்போது மருந்து வாங்கும் மக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வழங்குவதில்லை. ஆனால் தற்போதுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக கண்ணாடி பாட்டில்கள் தயாரிப்பு சரிவர நடைபெறவில்லை” என்கிறார் ஹைதராபாத்தைச்சேர்ந்த மருந்துகள் மற்றும் வேதிப்பொருட்கள் சங்க தலைவரான ரமேஷ் குப்தா. 

பருவகால நோய்கள் தொடங்கும் என்பதால் மருந்து தயாரிப்பாளர்கள் ஆறுமாதங்களுக்கு முன்னதாகவே மருந்துகளைத் தயாரிக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனால் அரசின் பிளாஸ்டிக் தடைக்கு முன்பாகவே சிரிஞ்சுகள், மருந்து பாட்டில்களின் உற்பத்தி தொடங்கிவிட்டது. ”அரசின் நடவடிக்கையை வரவேற்கலாம். ஏற்கெனவே ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவப் பொருட்களால் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் சதவீதம் அதிகரித்து வருகிறது” என்கிறார் மருத்துவத்துறையில் உள்ள வணிகராக சுனில் சுவர்னா. அரசின் நோக்கம் சிறந்தது என்றாலும் உயிர்காக்கும் மருத்துவத்துறைக்கு சிறிது கால அவகாசம் வழங்குவது அத்துறையினரை இழப்பிலிருந்து காக்கும். 

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு எட்டுமாதங்கள் ஆகின்றன. இன்றும் சில உணவகங்களில் சட்டவிரோதமாக உணவு பார்சல்களுக்காக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. “அரசின் தடைக்கு முன்னதாக ஆண்டுக்கு பத்து லட்சம் டன்கள் பிளாஸ்டிக் பைகள் விற்று வந்தன. தடைக்குப் பின்னும் கூட இந்த சதவீதம் பெரிய அளவுக்கு வீழ்ச்சி அடையவில்லை ” என்கிறார் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தலைவரான ஜி.சங்கரன். 

மட்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கை ஏன் உணவகங்கள் பயன்படுத்துவதில்லை காரணம் அதன் அதிக விலைதான். ஒரு கிலோ பிளாஸ்டிக் பைகளின் விலை நூறு என்றால், மட்கும் தன்மை கொண்ட உயிரி பிளாஸ்டிக் பைகளின் விலை ரூ.450 ஆக உள்ளது. எனவே, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பைகளைத் தயாரித்து அதனை கிலோ ரூ.150க்கு விற்று லாபம் சம்பாதித்து வருகின்றனர். 
தமிழக அரசு தடைவிதித்த போது, மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்தி பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றினர். இம்முறையில் மட்டும் 80 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்குக்கு மாற்றாக அரசு பரிந்துரைத்த பன்னிரண்டு பொருட்களின் விலை அதிகமாக உள்ளதும் பிளாஸ்டிக் பைகளின் வரவுக்கு காரணமாக இருக்கலாம். முடிந்தளவு துணிப்பைகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என மக்கள் உறுதியோடு இருந்தால் நிச்சயம் சூழல் மாறும். 

 நன்றி - டெக்கன் கிரானிக்கல் - யமுனா ஆர் - கனிழா கராரி