மின் வாகனங்களுக்கு அரசு உதவி! - நாம் என்ன செய்யவேண்டும் ?
மின் வாகனங்களை வாங்குவதற்கு இந்திய அரசு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு அளிப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது
பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்பி இருப்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்ற வகையில் இதனை வரவேற்கலாம். தற்போது சந்தையிலுள்ள நிறுவனங்கள் இதனை எதிர்கொள்ள மறுத்தாலும் பின்னாளில் நிலை மாறும். அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கும்போது, மின் வாகனங்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அரசு, ஜிஎஸ்டி வரியிலிருந்தும் 5 சதவீதம் விலக்கு அளித்துள்ளது சிறப்பம்சம்தான்.
தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிட்டால், மின் வாகனங்களுக்கு தவணையில் வாங்கும் வசதிகள் என்பது குறைவுதான். ஆனால் அரசின் மானியங்கள் வழங்கப்பட்டால் மின் வாகனங்களை வாங்கும் விலை, மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அதேசமயம், மின் வாகனச்சந்தையில் இந்தியா இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. வாகனச்சந்தையில் வேலை இழப்புகளைத் தடுக்க மின் வாகன பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது ஒரே தீர்வு. இல்லையெனில் பேட்டரி, பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம்.
இச்செயற்பாட்டையும் இந்தியா மின்வாகனச்சந்தையில் வலுவாகும்வரை செய்யலாம். ஏனெனில் பேட்டரிகள் சந்தையிலும், இருசக்கர வாகனங்களின் சந்தையிலும் சீனாவை வீழ்த்துவது கடினமாகவே இருக்கப்போகிறது. இன்று ஜெர்மனி, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படும் பேட்டரிகள் சிறந்தவையாக உள்ளன. இந்தியாவில் மின்வாகனங்களின் விற்பனை அதிகரித்தால் மட்டுமே, பேட்டரிகளின் தயாரிப்பும் தரமும் உயர வாய்ப்பு உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் கடினமாகி வருகின்றன. ஆனால் இந்தியாவில் அந்த நெருக்கடிகள் இன்றி அரசின் மானியங்கள், சலுகைகள் மூலமாகவே நாம் மின் வாகனங்களுக்கு 2035க்கும் மாறிவிட முடியும்.
அரசு மானியங்களை அளித்தாலும், அதற்கான தொகையையும் மக்கள் வரியாக கட்டும் நிலை உள்ளது. எனவே, ஐ.நா கூறியுள்ளபடி கரிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட வரி விதிக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் நிதியை சேகரித்து மின் வாகனங்களை மேம்படுத்த, வாங்குவதற்கான மானியங்களை அளிக்கலாம். பிறநாடுகளைவிட இந்தியாவில் 20 ஆண்டுகளில் மின்வாகனங்களை பரவலாக்கலாம். அரசின் கொள்கைகளோடு மக்களும் இணைந்து மனது வைத்தால் மாற்றம் சாத்தியம்தான்.
தகவல்:TheHindu