தூய இந்தி மொழி சாத்தியமில்லை! - சேட்டன் பகத்



Schitts Creek Comedy GIF by CBC




டில்லியில் புதிய அரசு எப்போது ஆட்சி அமைத்தாலும் இந்தி சார்பான ஆதரவை எப்போதும் காட்டுவார்கள். காங்கிரஸ் முதல் பாஜக வரை இந்தி பிரசார சபையில் நின்று மொழி வீரம் பேசுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் இவர்கள் என்ன சாதிக்கிறார்கள் என்று இதுவரையிலும் புரியவில்லை.

இந்தியா பன்மைத்துவமான தேசம். அரசு கூறும் புள்ளிவிவரங்களில் இந்தி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து, தெலுங்கு, மராத்தி, தமிழ் என இடம்பெறுவது மாறவே இல்லை. பின் எதற்கு இந்தி படி என்று காட்டுக்கத்தல் வட இந்தியாவிலிருந்து எழுகிறது.

காரணம், ஆட்சியில் உள்ளவர்கள் பிராமணர்கள் என்ற காரணம்தான் தேடினால் தட்டுப்படுகிறது. பாஜக நேரடியாக சமஸ்கிருதத்தை நோக்கி பயணித்துவருகிறது. இந்தி என்பது சமஸ்கிருதம் எனும் லட்சியத்தை அடைய உதவும் படகுதான். பிறகு இந்தியை கைவிட்டு விடுவார்கள். இன்றைய இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா முதற்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் வரை இந்தி விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்போதும் இந்தி பேசுகிறார்கள் என்பதை அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களே சொல்லுகின்றன. பின் என்ன? எதற்கிந்த ஆவேசமான பிறமொழி புறக்கணிப்பு, இந்திக்கு க்ரீடம் சூட்டுதல் நடக்கிறது?

இந்திமொழி,  பழைமையான வடிவில் வேண்டும் என்கிறார்கள் அரசியல் வாதிகள். இன்று நான் பேட்டி பச்சாவோ என்று ஆங்கிலத்தில் எழுதினால் அதனை யாரும் படிக்க முடியும். இதை ரோமன் எழுத்து முறை எனலாம். இதை தேவநாகரியில் எழுதினால் குறிப்பிட்ட மொழி அறிந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும். இம்முறை எப்படி எனக்கு தகவல்தொடர்புக்கு உதவும்?

வாட்ஸ்அப் முதல் டெலிகிராம் வரை மக்கள் புழங்கி வருகிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் மொழி என்பது இன்று சுருங்கி ரோமன் எழுத்துமுறை பாதிப்பில் இருக்கிறது. அல்லது ஐகான்களான இமோஜிகளாக மாறியிருக்கின்றன.

இந்த மாற்றங்களை புரியாத பெருசுகள், தூய இந்திவாதம் பேசி பன்மைத்துவ நாட்டில் தேவையில்லாத விரோதம் சம்பாதிக்கிறார்கள். இந்தியைத் தூக்கிப்பிடித்துப் பேசி தமிழகத்தில் பாஜக, உரம்போட்டாலும் வளர முடியாத இந்திக்காரன் கட்சியாக இருக்கிறது.

தகவல் தொடர்பு எங்கே உதவும், எப்படி வெற்றியடைகிறது? நான் சொல்லுவது உங்களுக்கு புரியவேண்டும். அப்போதுதான் செய்தி புரிகிறது. அதிலுள்ள பகடி புரிந்து புன்னகைக்கிறார்கள். நான் பள்ளிக்கூட மாணவன் ஒப்பிப்பது போல எனது தாய்மொழிக்கு விசுவாசமாக பேசினால் எதிரே உள்ளவருக்கு என்ன புரியும்? எனக்கு வேண்டியதை நான் எப்படிப் பெறுவது என சொல்லுங்களேன்.

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டிய தொன்மையான மூளைகளைக் கொண்டவர்களின் கருத்துதான் தூய இந்தி என்பது. அதனால் இம்மியளவும் பயன் கிடையாது. இன்று நான்  ரோமன் எழுத்துமுறையில் பேட்டி பச்சாவோ என்று எழுதினால், அதனை இந்திய மாநிலங்கள் அனைத்திலும் பிரசுரிக்க முடியும். நான் சொல்ல வருவதை மக்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள். அரசுக்கும் சரி, வணிகர்களுக்கும் சரி மக்களுக்கு தாங்கள் என்ன சொல்கிறோம் என்று புரிவதுதானே முக்கியம்.

இது உலகமயமாக்கல் உலகம் ஐயா. அரசியல்வாதிகளே உங்களது காலம் சென்ற, காலாவதியான குப்பைகளை சிந்தனை என்ற பெயரில் உளறி வைக்காதீர்கள். காலம் விரைவில் உங்களைத் தூசுபோல துடைத்தெறிந்துவிடும். மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்களின் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் ஏதேனும் உருப்படியான விஷயங்களைச் செய்யப் பாருங்கள்.

சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது.