சீரியல் கொலைகாரர்களுக்கான வரையறை!
unspalsh.com |
அசுரகுலம்
ரத்த தடங்களைத் தேடி
சீரியல் கொலைகார ர்களுக்கும் மற்றவர்களுக்கு என்ன தொடர்பு என முதலில் நாம் தெளிவாக வேண்டும். குடும்பத்திலுள்ள உள்ளவர், தன்னுடைய ரத்த சொந்தத்தைக் கொல்கிறார். என்ன காரணம், சொத்து என போலீஸ் முடிவு செய்து உள்வட்ட விசாரணையில் கேசை மூடிவிடும்.
ஆனால் சைக்கோ கொலைகாரர்கள் விஷயத்தில் யோசிப்பதே வேறுவிதமாக இருக்கவேண்டும். அமெரிக்க அரசின் எஃப்பிஐ, சீரியல் கொலைகார ர்களுக்கு மூன்று கொலைகள் செய்யவேண்டும் என்ற வரையறையை வைத்திருக்கிறது. இன்று அவை மாறிவிட்டன என்றாலும், குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று கொலைகள் என்பது சீரியல் கொலைக்காரர் என அடையாளப்படுத்துவதற்கான முதல் பாய்ன்ட். பின்னர் கொலை எப்படி நடந்தது, பாலியல் வல்லுறவு, சித்திரவதை ஆகியவை இதில் சேர்க்கப்பட்டன.
அமெரிக்காவில் இப்போது இனவெறி தூண்டுதலாக துப்பாக்கியை எடுத்து பள்ளிகளிலோ, தியேட்டர்களிலோ சென்று சுடும் பழக்கம் இருக்கிறது. அதனை திரள் கொலைகள் என வகைப்படுத்தலாம். இதில் சீரியல் கொலை என்ற பதம் உதவாது. ஒருவருக்கு மனநலம் பாதித்து அதன் விளைவாக நிறையப் பேரை கொல்கிறார். தனக்கு சரியான சமயத்தில் உதவாத உலகை, உறவுகளை தண்டிக்க நினைப்பவரின் வெளிப்பாடு. துப்பாக்கித் தோட்டாக்களாக, வெடிகுண்டாக வெளிப்படுகிறது.
மற்றொரு உதாரணமாக கனடாவின் பால் பெர்னார்ட், கார்லா ஆகியோரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் மூன்று கொலைகளைச்செய்துள்ளார்கள். ஆனால் சீரியல் கொலைகார ர்கள் என வகைப்படுத்தப்படவில்லை. ஆனால் கார்லா, தன் கணவனது பாலியல் வெறிக்கு தனது சகோதரியையே பலியாக்கினாள் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? எஜமான் அடிமை என்ற உறவில் பால், கார்லா இருந்தனர்.
சீரியல் கொலைகாரர்களின் வாழ்க்கையை நீங்கள் அசுரகுலத்தில் இதுவரை படித்து வந்திருப்பீர்கள். அதில் முடிந்தளவு அவர்களது தரப்பின் நியாயத்தை கூற முயன்றுள்ளோம். காரணம், அமெரிக்காவில்தான் அதிக மனநலம் பாதித்த ஆட்கள், சீரியல் கொலைகார ர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்களது சமூக அமைப்பு.
பிற விலங்குகளைப் போல இன்றி, மனிதர்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் அங்கீகாரத்திற்கும் ஆயுள் முடியும் வரை ஏங்குபவர்கள்தான். இதனால்தான், பெற்றோர் பிரிவு அவர்களின் மனதை உடைக்கிறது. பெற்றோரின் ஆக்ரோஷம், அவமதிப்பு, கண்டிப்பு கூட இளம் மனங்களை நொறுக்கிவிடுகிறது. தேக்கி வைத்த வெறுப்பின் விஷம், சுதந்திரம் கிடைத்தவுடன் வெளியே வருகிறது. சமூகத்தின் மேல் பாய்கிறது என புரிந்துகொள்ளலாம்.
மூளைக்கோளாறு, மரபணு பிரச்னை என மருத்துவர்கள் கூறினாலும் உறுதியான ஆய்வுகள் இல்லை. எஃப்பிஐயின் ராபர்ட் ரெஸ்லர், ஜான் டக்ளஸ் ஆகியோர் சீரியல் கொலைகார ர்களின் வழக்குகளை ஆராய்ந்த முக்கியமான ஆட்கள். இவர்களின் கருத்துகள் குற்றத்துறையில் இன்றும் பின்பற்றப்படுகிறது. இவர்களைப் பற்றிய விஷயங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.
தொகுப்பும் எழுத்தும்
வின்சென்ட் காபோ