உறக்கம் உயிரைப் பறிக்கிறதா? - இங்கிலாந்தில் அடிக்கிறது அலாரம்!



Confused Season 8 GIF by Showtime
giphy.com



 ஐரோப்பிய நாடுகளில் விரைவில் ஓட்டுநர்களின் உறக்கப் பிரச்னையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன.

ஐரோப்பிய யூனியனில் புதிதாக தயாரிக்கப்படும் கார்களில் விபத்தைக் குறைப்பதற்காக முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இவை 2022 இல் அமலுக்கு வரும்.  காரில் உறக்கத்தைக் கண்காணிக்கும் கருவி, கருப்புப்பெட்டி ஆகியவை இடம்பெறவிருக்கின்றன.
என்ன காரணம், அதிகரித்து வரும் விபத்துகள்தான். 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஐரோப்பாவில் 25 ஆயிரத்து 300 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் விபத்துகளால் படுகாயமுற்றுள்ளனர். இந்நாடுகளில் சாலை விபத்துகளில் பலியாகுபவர்களின் எண்ணிக்கையை  2030க்குள் 7 ஆயிரமாக குறைக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது.

இதற்காக ஓட்டுநருக்கான மேம்பட்ட உதவி அமைப்புகளை( ADAS) உருவாக்குவதற்கான அறிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரலில் உருவாக்கியது. இதில் 15 புதிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறவிருக்கின்றன. “நீங்கள் இந்த வசதிகளை காரில் முதன்முறையாக பாதுகாப்பு சீட்பெல்ட் அறிமுகமானது போலத்தான் பார்க்கவேண்டும்” என்கிறார் ஐரோப்பிய யூனியன் கமிஷனரான எல்ஸ்பீடா பியன்கோவ்ஸ்கா.

விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என பல்வேறு நாடுகளும் ஏற்பது ஓட்டுநர்கள் சாலைவிதிகளை மீறி இயங்குவதுதான். எனவே அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதோடு, கார்களை தானியங்கியாக இயங்க வைக்க முயன்று வருகிறார்கள். சாலைகளில் வரைந்துள்ள அடையாளக்குறிகளைத்  தாண்டாமல் செல்வது, எதிரிலுள்ள கார்களை நம் வாகனம் நெருங்கும்போது  தானியங்கியாக வேகம் குறைவது, வேக கட்டுப்பாடு நிலை என பல்வேறு வசதிகளை அடுக்குகிறார்கள்.

 ஐரோப்பிய யூனியனின் அறிக்கைப்படி பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கிய காரை, ஓட்டுநர்கள் ஓட்டிப்பழகிப் புரிந்துகொள்ள பயிற்சி தேவை. இதுபற்றி ஐயோவா பல்கலைக்கழகத்தில் செய்த ஆய்வில்  இருபதிற்கு ஒருவர்தான் புதிய அடாஸ் அமைப்புகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. ”புதிய அமைப்பு பற்றி ஒருவரிடம் எதுவும் கூறாமல் ஓட்டச்சொன்னபோது அவர் பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கைகளால்  குழம்பிப் போனார்” என்றார் மென்பொருள் பொறியாளரான மெக்டெர்மிட். கார்கள் புழக்கமாகும்போது எளிதாக இதனைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

கார் விபத்துகளைத் தடுக்க அமலாகவிருக்கும் கருப்புப் பெட்டி அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு அங்கு காப்பீட்டு கட்டணமும் குறைவாக வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே இதுவும் மக்களுக்கு பயனளிக்க கூடிய ஒன்றே. எதிர்காலத்தில் கார்கள் தொழில்நுட்பமயமாவது தவிர்க்க முடியாத ஒன்று. இதனை எளிதாக கொள்ளையர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என குரல்கள் எழுந்தாலும், அதை ஐரோப்பிய யூனியன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதில் புதிதாக உருவாக்கப்படும் வசதிகளில் ஐந்து வசதிகள் முக்கியமானவை. வேகக் கட்டுப்பாட்டு கருவி (Intelligent Speed resistence), மது சோதனைக்கருவி (Alcohol interlock system), உறக்கத்தைக் கண்காணிக்கும் கருவி (Drowsiness attention detection), சாலையைக் கண்காணிக்கும் கருவி (Lane keeping assistance), உரையாடல் பதிவுக்கருவி (Data recorder).
நன்றி: New Scientist