தற்கொலையில் சிறந்த அமெரிக்கா - சிதையும் இளைஞர்கள்!
giphy.com |
அமெரிக்காவை உள்ளிருந்து உடைக்கும் பிரச்னையாக தற்கொலை மாறி வருகிறது. ஆண்டுக்கு தோராயமாக 47 ஆயிரம் பேர் அங்கு தற்கொலை செய்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள குடும்ப அமைப்பாகவும் இருக்கலாம். ஆனால் தற்கொலைகள் நடந்து வருவது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இரண்டாம் உலகப்போர் சமயங்களில் நடந்த இறப்புகளை விட தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை அதிகம். அதுவும் குறிப்பாக 10 -24 வயது பிரிவில்தான் அதிகளவு தற்கொலை மரணங்கள் ஏற்படுகின்றன. ஏறத்தாழ 2007-2017 வரையில் 56 சதவீதம் தற்கொலைகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.
தற்கொலை ஏன் செய்துகொள்கிறார்கள் என்று டக்கென கூறிவிடமுடியாது. ஏதாவது நிராகரிப்பு, தோல்வி, விரக்தி, ஹிக்கிகோமெரி போல சாதிக்க எதுவுமே இல்லையென்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். உளவியல் பிரச்னை என்றாலும் அமெரிக்கர்கள் உடனே நரம்புகளை அறுத்துக்கொண்டு செத்து விடுவதில்லை. 83 சதவீதம் பேர் மருத்துவர்களைச் சென்று சந்திக்கிறார்கள். பின்னரே தற்கொலைகளை சந்திக்கிறார்கள். அல்லது அதிலிருந்து மீள்கிறார்கள்.
அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள சென்டர்ஸ்டோன் மனநல மருத்துவ மையம் இதில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ச்சியானதாக மாற்றி, இப்பகுதியில் தற்கொலை மரணங்களை 64 சதவீதம் குறைத்துள்ளனர். நோயாளிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில், அழைப்புகளைச் செய்து அவர்களின் மனநிலையை டிஜிட்டல் பதிவேடாக பராமரித்து வருகின்றனர். இதில் அல்காரிதம் முறையை பயன்படுத்தி யார் தற்கொலை எண்ணம் கொண்டவர்களாக அம்முயற்சி செய்வார்கள் என ஊகிக்கும் வசதி உண்டு. இம்முறையில் அவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்த முடிகிறது.
அமெரிக்காவில் இன்னும் சில ஆண்டுகளில் தற்கொலை சார்ந்த சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட வாய்ப்புகள் உண்டு. அதற்கான கொள்கை, மசோதா விஷயங்கள் தற்போது பேசப்படத் தொடங்கியிருக்கின்றன.
நன்றி - டைம்