தமிழர்கள் தம்மை கண்டறிய ஓர் நூல்! - கீழடி - வரலாற்று பொக்கிஷம்!



Image result for கீழடி புத்தகம்



கீழடி

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை


மதுரை மற்றும் சிவகங்கை அருகிலுள்ள எல்லைப்பகுதியான கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் பற்றிய விரிவான நூல் இது. தொல்லியல் துறை கமிஷனரான உதயசந்திரன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஊக்கத்துடன் ஆராய்ந்து, பல்வேறு தொன்மைப் பண்பாட்டு எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதை நூல் முழுக்க அடிக்கடி சொல்கிறார்கள். இதற்குப் பின்னணியில் அதை மறுப்போரின் குரல்கள் அழுத்தமாக இருக்கலாம்.

அன்றைக்கு வாழ்ந்த மக்களின் கட்டடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள்,  பானைத் துண்டுகள் என பலவற்றையும் பிரமாதமாக புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். டிரோன் விமானங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நண்பர் கூறினார்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் தமிழர்கள் கல்வி அறிவு பெற்றார்கள் என்பதை தகர்ப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை முக்கியமாக கொண்டால் வரலாற்று நூலை நாம் திருத்தி எழுத வேண்டும். அதை நோக்கி நகர்வதற்கு கீழடி ஆய்வு முக்கியமானது.

மத்திய அரசின் தலையீட்டால் ஆய்வை மத்திய தொல்லியல் துறை கைவிட்டு விட்டது.  2016 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை கீழடி ஆய்வைச் செய்து வருகிறது. அதிலும் உதயச்சந்திரன் தலைமைக்கு வந்த பிறகு ஆவணப்படுத்தும் வேகம் கூடியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

நூலின் அட்டை, நூல் வடிவமைப்பு என எங்கும் கதிர் ஆறுமுகத்தின் அழகியல் அசரடிக்கிறது. இதுபோன்ற நூல்களில் வடிவமைப்பாளருக்கு இருக்கும் பணி சலிப்பு ஏற்படுத்தாமல் படிக்க வைப்பதுதான். அந்த வகையில் இந்த நூல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் ஆவணப்படுத்தலில் அலட்சியமானவர்கள் என்ற களங்கத்தைப் போக்க இதுபோன்ற நூல்களை தரமாக வடிவமைத்து விற்கலாம். அல்லது அரசு தொல்லியல் துறை வலைத்தளத்தில் இலவச பீடிஎஃப் கோப்பாக வழங்கலாம். இதன்மூலம் இதைப்பற்றி பத்திரிகையாளர்கள் எழுத முடியும். அவர்கள் வழியாக மக்கள் அறிய வழிபிறக்கும்.

நல்ல முயற்சி. உதயச்சந்திரன் விகடன் இதழிலும் கீழடி பற்றி எழுதி வருகிறார் என்பது சிறப்பான செயற்பாடு. கீழடி நூல் படிக்க எளிமையாகவும் தேவையான தகவல்களையும் கொண்டுள்ளது. இதனை அறிமுகமாக எடுத்துக்கொண்டு பிற விஷயங்களை நாம் தேடலாம் தொகுக்கலாம் ஆவணப்படுத்தலாம். அதற்கு இந்த நூல் முக்கியமானதும் கூட.

கோமாளிமேடை டீம்






பிரபலமான இடுகைகள்