கலைச்செல்வத்தை அரசிடம் சேர்க்கும் ஜோன்ஸ் - இந்தியானா ஜோன்ஸ் 4!
இந்தியானா ஜோன்ஸ்!
1981 ஆம் ஆண்டு வெளியான தி ரெய்டர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க், இந்தியானா ஜோன்ஸ் பிரிவில் வந்த முதல் படம். ஜார்ஜ் லூகாஸ் எழுதிய கதையை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கினார்.
Raiders of the Lost Ark
இந்த படம் அமெரிக்கா, நேபாளம் தொடங்கி எகிப்துக்குச் சென்று முடிகிறது. நேபாளத்தில் மதுபானக்கடை வைத்திருப்பவர், ஜோன்ஸின் முன்னாள் காதலி. அவரிடம் ஒரு பதக்கம் இருக்கிறது. அவர் தந்தையிடமிருந்து மகளுக்கு வந்த அகழாய்வு சேமிப்பு. அதை ஜோன்ஸ் கேட்கிறார். காதலி அதை தரமாட்டேன் என்று கூறி அதனோடு தானும் ஜோன்சுடன் புறப்படுகிறார். இவருக்கு 2008 ஆம் ஆண்டு கிரிஸ்டல் ஸ்கல் படத்தில் ஜோன்சுடன் திருமணம் நடைபெறுகிற தகவல் கொசுறாக சொல்லி விடுகிறோம்.
லாஸ்ட் ஆர்க் என்பது ஒரு சவப்பெட்டி. அதிலுள்ள பொக்கிஷங்களை அடைவதே நாசி ஆட்களின் லட்சியம். ஆனால் அது எப்படி விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை.
ஏறத்தாழ இந்த படம் தொடங்கி அனைத்து படங்களிலும் நாசிக்கள்தான் வில்லன்கள். எப்படி? படத்தின் கதை 1931 ஆம் ஆண்டு நடக்கிறது என்பதுதான் காரணம்.
படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக முடிந்தளவு செக்ஸை தவிர்த்து விட்டார்கள். அதிகபட்சமாக முத்தம் கொடுக்கும் காட்சியே அதிகம்தான். அதிலும் களப்பணி காரணமாக முத்தம் கொடுக்கும்போதே தூங்கிப்போகும் ஜோன்ஸ், பரிதாபம். தேசியவாதம் பேசும் கதாபாத்திரத்திற்கு பிரமாதமாக பொருந்தும் வேடம் ஹாரிசன் போர்டிற்கு, பிரமாதப்படுத்தி விட்டார்.
பகுதிநேரமாக பேராசிரியர் பணி. முழுநேரம் அகழாய்வுப்பணி என இருக்கிறார். இல்லையெனில் அரசு அவரை வேலை கொடுத்து நாடுவிட்டு நாடு துரத்துகிறது. படம் கடுமையான உழைப்பைக் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு என அனைத்துமே பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.
Indiana Jones and the Temple of Doom -1984
இந்தக்கதை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஜோன்ஸ் வரக் காரணமாகிறது. இங்குள்ள கிராமத்தினரிடமிருந்து பூசாரி ஒருவர் புனிதக்கல் ஒன்றைத் திருடிக்கொண்டு சென்றுவிடுகிறார். கூடுதலாக, கிராமத்திலுள்ள சிறுவர்களை தொலைந்த புனிதக் கற்களை தேடும் பணியில் ஈடுபடுத்துகிறார். இதற்கு அங்குள்ள மன்னர் ஒருவரையும் பூசாரி பயன்படுத்திக்கொள்கிறார். இதிலிருந்து எப்படி ஜோன்ஸ் அவர்களை மீட்கிறார் என்பதுதான் கதை.
இந்திய மக்களை ஏறத்தாழ பழங்குடிகளாக சித்தரித்து உள்ளனர். குறிப்பிட்ட ரத்தத்தை குடிக்க கொடுத்து ஒருவரை அடிமையாக்கும் நுட்பத்தை பூசாரி கடைபிடிக்கிறார். இவரோடு குட்டி சீனப்பையன், கிளப் பாடகி ஒருவரும் வருகிறார்கள். எப்படி வருகிறார்கள் என்றால் சீனாவில் அட்வென்சர் ஒன்றை நடத்திவிட்டு வரும்போது இந்தியாவிற்குள் விமானம் விழுந்து விடுகிறது. கதை தொடங்குகிறது.
ஓம்பூரிதான் பூசாரி. பூஜை நடத்தும் காட்சி பீதி தருகிறது. மற்றபடி பிற காட்சிகள் எதிர்பார்த்தபடியே நடக்கிறது. இதிலும் ரொமான்ஸ் செய்ய ஜோன்சுக்கு நேரம் லேது. முழுக்க தன் உயிரையும் தன் காதலி, நண்பன் ஆகியோரின் உயிரைப் பாதுகாக்கவே மெனக்கெடுகிறார்.
இந்தியர்களை கிண்டலடிக்கும் நிறைய காட்சிகள் இருக்கின்றன. அதனை ஃபேன்டஸியாக எடுத்துக்கொள்வதா, இல்லை சீரியசாக எடுத்துக்கொள்வதாக என்று குழப்பமாக இருக்கிறது.
Indiana Jones and the Last Crusade -1989
இளமையான இண்டியான ஜோன்சை அறிமுகப்படுத்தி, அவரின் அப்பாவை தேட வைத்திருக்கிறார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.
சாகாவரம் தரும் சுனை ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும் என்று தேடிப்போகிறார்கள். அப்பணியில் ஜோன்ஸ் சீனியரை முன்னமே கடத்திக்கொண்டுபோய் விடுகிறார்கள். அவரைக் கண்டுபிடிக்க என்று ஜோன்ஸ் ஜூனியரின் நண்பர் அவரை இப்பணியில் ஈடுபடுத்துகிறார். அப்புறம் என்ன படம் வேகம் பிடிக்கிறது. இறுதியில் நண்பரின் துரோகம் கண்டுபிடித்து, நாசிக்களை போட்டுத்தள்ளி பேராசை பிடித்த காதலியை கைவிட்டு அப்பாவின் உயிரைக் காப்பாற்றினால் ....ம் ஒன்றுமில்லை படம் முடிந்துவிடும்.
அப்பாவாக சீன் கானரி அப்பாவி அகழாய்வாளராக நடித்துள்ளார். கிளைமேக்ஸில் கிண்ணத்தை விட உயிர் முக்கியம் கையைக் கொடு என்று சொல்லும்போது அட்டகாசம். சீனியர் தன்னை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நிரூபித்திருக்கிறார். இதில் ஜோன்சிற்கு படுக்கை அறை காட்சி உண்டு. ஆனால் பரிதாபமாக அதுவும் பாதியில் புட்டுக்கொள்கிறது. விடுங்கள். நாட்டைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்.
இம்முறையில் நாசிக்களின் குமட்டில் குத்தி அவர்களை வீழ்த்துகிறார். டாங்கியில் ஜோன்ஸ் செய்யும் சண்டை அபாரம். சீரியசான காட்சிகளுக்கு இடையில் ஜோன்ஸ் செய்யும் காமெடியும் சூப்பர்.
Indiana Jones and the Kingdom of the Crystal Skull (2008)
ஜார்ஜ் லூகாஸ் ஏலியன்களை மனதில் வைத்து எழுதிய கதை. கிரிஸ்டல் மண்டையோட்டை எடுத்துக்கொண்டுபோய் அதனுடைய இடத்தில் பொருத்துவதுதான் கதை.
இதிலும் நாசிக்கு பதிலாக ரஷ்யாவின் ஸ்டாலினின் அமானுஷ்ய சக்தி படை துரத்துகிறது. ஜோன்ஸ் அவர்களை சமாளித்து கிரிஸ்டல் தலையை சரியான இடத்தில் கொண்டுபோய் சேர்க்கிறார். இப்போராட்டத்தில் தன் முன்னாள் காதலி, மகனைச் சந்திக்கிறார். போராட்டத்தின் இடையே சண்டை போட்டுக்கொள்வதோடு தன் நீண்டநாள் நண்பரான பேராசிரியரையும் மீட்கிறார்.
சிறிது நவீனமான ஜோன்ஸ் இதில் ஸ்டைலாக இருக்கிறார். அவருக்கு மகன் வேறு உண்டு. ஜோன்ஸ் இதில் கிளாசிக்காக மாறிவிட அவருடைய தொப்பி அணியும் ஸ்டைல் இதில் தனித்து தெரிகிறது.
கிராபிக்ஸ், கதை என இரண்டுமே நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் படம் பார்ப்பது புதிய அனுபவமாக மாறுகிறது. ஹாரிசன் போர்டு நான்கு படங்களிலும் பின்னி எடுத்திருக்கிறார். அநாயசமான உழைப்பு அத்தனை படங்களிலும் தெரிகிறது. கலாசாரம் பற்றிய பேச்சு வரும் இச்சூழலில் இப்படங்கள் பார்ப்பது இந்தியாவில் கொள்ளையிடப்பட்ட கலாசார பொக்கிஷங்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது.
கோமாளிமேடை டீம்