அனைத்து விஷயங்களும் நம் நினைவில் இருந்தால்....
டாக்டர் எக்ஸ்
கடையில் பொருட்களை வாங்க போகிறோம். கடைக்காரர் என்ன என்று கண்களை நிமிர்த்து பார்க்கும்போது சொல்ல முடியாமல் போகிறது. மனைவி படித்துப் படித்து சொன்ன பொருட்கள்தான். ஆனால் ஏதோ சிக்கலில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தூள், கறிவேப்பிலை மறந்துபோய்விடுகிறது. மனைவி தாளித்து கொட்டி அர்ச்சனை செய்தாலும் வயசாகுதில்ல என்று சமாளிக்கலாம். ஆனால் உண்மையில் மறப்பது என்றால் என்ன நம் மூளையின் திறன் குறைவு என்று பொருள் கொள்ளலாமா?
பதில் - ஆலிவர் ஹார்ட், மெக்ஹில் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்.
இல்லை. மறதி, ஒன்றை முழுக்க நினைவிலிருந்து அழிப்பது என்பது குறைபாடு அல்ல. அது இயல்பாக இயற்கையாக மூளையில் நடப்பது. நான் செய்து வரும் ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளேன்.
நாம் எப்படி சில குறிப்பிட்ட விஷயங்களை படிக்கிறோம். அதனை மீட்டிங்கில், ஐடியா சொல்லுவதற்காக மனதில் குறிப்பிட்ட வித த்தில் கீவேர்டுகள் போட்டு சேமித்து இருப்போம். குறிப்பிட்ட விஷயங்களை பேசும்போது உடனே மூளைக்கு சிக்னல் கிடைக்க அந்த விஷயங்களை எடுத்துப் பேசுவோம். இதேபோல நாம் சேர்த்து வைத்த நினைவுகளை அழிக்கும் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனை ஆக்டிவ் ஃபார்கெட்டிங் மெக்கானிசம் என்று கூறலாம்.
மூளை எப்படி குறிப்பிட்ட சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து அழிக்கிறது என்பதை இன்னும் அறிய முடியவில்லை.இதற்கான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. பொதுவாக, குறிப்பிட்ட சம்பவத்தை நினைவில் சேமித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாம் கூறும்போது மட்டுமே அது நினைவில் பதிகிறது. பின்னாளில் அதனை நினைவுகூர்வதும் எளிதாகிறது.
ஆழமான தூக்கத்தில்தான் பெரும்பாலும் நினைவுகள் அழிக்கப்படுகின்றன. ஒருவர் பூமியில் வாழ்வதற்கான அடிப்படையான நினைவுகள் எப்போதும் மறக்காது. உங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான விஷயங்கள் மூளையில் ப்ரீ இன்ஸ்டாலாக இருக்கும். கூகுள் ஆண்ட்ராய்டு போனில் எப்படி பிளே ஸ்டோர் அப்ளிகேசனை நம்மால் அழிக்க முடியாதோ அப்படி இருக்கும். செயலிழந்த நிலை போல இருந்தாலும் அவை தேவையானபோது உயிர்ப்பிக்கப்படும். நீர், பாம்பு, நாய், தீ, இயற்கை பேரிடர்களின்போது இயல்பாகவே நம் சிந்தனை நம்மை பற்றி மட்டுமல்லாது பிறரையும் காப்பாற்றுவது பற்றி யோசிக்கும்.
இவற்றை முக்கியம் என நாம் மூளையில் சேமிப்பதில்லை. ஆனால் இயல்பாகவே இந்த எண்ணங்கள் நம் மூளையில் இருக்கும். பிற விஷயங்களை நீங்கள் முக்கியம் என லேபிள் ஒட்டி மூளையில் வைக்கவில்லையென்றால் பின்னாளில் அது இருக்காது. முற்றாக அழிக்கப்பட்டு விடும்.
நன்றி - பிபிசி