வேறுபாடுகளை மறப்போம்! - சேட்டன் பகத்



Image result for godhra riot





நான் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை நினைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஏன் இப்போது திடீரென அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. காரணம், இந்துக்கள் எரித்துக்கொல்லப்பட்ட அடுத்தடுத்த நாட்களில் முஸ்லீம்கள் அதேபோல தாக்கி கொல்லப்பட்டார்கள்.

இதற்கான பழி இருதரப்பிலும் போடப்பட்டது. வசைமாரி தூற்றப்பட்டது. இன்றுவரையிலும் இதற்கான காரணம் இவர், அவர் என ஆட்காட்டி விரல்கள் மாற்றி மாற்றி காட்டப்பட்டு வருகிறது. இந்த சொற்களும் ஆவேசமும் எனக்கு உறுதிப்படுத்துவது நாம் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் ஏராளமான பிளவுகளைக் கொண்டு ஒற்றுமையாக இல்லை என்பதுதான்.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நான் நிச்சயம் ஏற்பதில்லை. சில விஷமிகள் இன்று சாப்பிடும் உணவைப் பற்றிக்கூட சர்ச்சையாக்கி ஒருவரை தாக்கி கொல்லமுடிகிறது என்றால் வெறுப்பு எப்படி தீயாக பரவுகிறது பாருங்கள். எளிமையான மேடைப்பேச்சு இதனை கிளறி விட போதுமானது. அப்படியென்றால் நமது மனதில் இதுபற்றிய கருத்தும், அதற்கான பதிலடியும் தயாராகவே இருக்கிறது. கண்ணுக்கு கண் என்ற பழிக்குப்பழி வெறி நம்மை மதம் சார்ந்த ஒற்றைத்தன்மைக்குள் தள்ளும். இதன் விளைவாக இந்தியா பன்மைத்துவமான சகோதரத்துவமான நாடாக இருக்காது.

இன்றும் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா வருவது தாஜ்மகால் எனும் கிரானைட் மாளிகையை பார்க்கத்தானா? அல்ல. பல மதங்கள் எப்படி ஒன்றுகூடி இங்கு வாழ்கிறார்கள் என்பதையும்தான். இது அவர்களுக்கு புதுமையான ஒன்று. வேறுபாடுகள் இருந்தாலும் அதை நாம் சகித்து பிறருக்கான நம்பிக்கைகளையும் மதித்து நடக்கிறோம். உலக அரங்கில் இந்தியா வல்லரசாக மாறலாம் மாறாமல் போகலாம். நம் மகத்தான தலைவர்கள் இந்த இயல்பை இந்தியாவுக்கானதாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

தேர்தல் ஓட்டுக்காக யார் காலையும் நக்கத் தயங்காத, வெறுப்பை வளர்க்க முயலும் பகை கும்பல்களின் பேச்சை மக்கள் கேட்ட மாத்திரத்தில் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும். மனதில் அதுபோன்ற துரோகப்பேச்சுகளுக்கு, பழிவாங்கும் முயற்சிகளுக்கு இடம் கொடுக்க கூடாது. ரத்தம் என்றுமே இழப்புக்கான பதிலீடாகாது என்பதை மறக்காதீர்கள்.

சட்டப்பூர்வமான வழியை நாடுவது கூட தவறுக்கான தண்டனை, அதற்கான வருத்தம் என்பதாகவே இந்தியாவில் உள்ளது. யாரையும் நாம் நேரடியாக தூக்கு கயிற்றில் அல்லது அமெரிக்காவில் உள்ளது போல மின்சார நாற்காலியில் இருத்துவதில்லை. காரணம், தவறுக்கு வருந்தி திருந்துபவர்கள் சமூகத்தில் வாழவேண்டுமென நம் முன்னோர்கள் நினைத்தார்கள். அதையே வலியுறுத்தினார்கள். நாம் கீழைதேய நாடுதான். சிந்தனையில் உயர்வானர்கள். அதை என்றுமே மறக்காதீர்கள்.

இனவாத, மதவாத சிந்தனைகளுக்கு என்றுமே புத்தியை விட்டுக்கொடுக்காதீர்கள். இடது, வலது என்ற சிந்தனைகளே வேண்டாம். நாம் மனிதநேயத்தின் பக்கம் நிற்போம்.  பழைய வரலாறுகளைப் படிப்போம். பாடம் கற்போம். தேவாலயங்களும், மசூதிகளும் இடிக்கப்பட்டது வருத்த த்திற்குரிய செய்திதான். அதற்கான காயங்களை இன்று கிளறுவது என் நோக்கமல்ல. இவற்றைத் தீர்ப்பது நமது சகிப்புத்தன்மை கொண்ட செயல்பாடுகள்தான். மன்னிக்க கற்பது முக்கியமான குணம். அது மனப்புண்களை ஆற்றும் சக்தி கொண்டது. அதுதான் இன்றைய தேவையும் கூட.