வியாபார மனிதர்களும் - மாறி வரும் காலமும்- மயிலாப்பூர் டைம்ஸ்!





Image result for spar hypermarket



மயிலாப்பூர் டைம்ஸ்!


சென்னைக்கு வந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தால் நம்பவே முடியவில்லை. அப்போது இங்கே எனது சகோதரர் பணிசெய்துகொண்டிருந்தார். குறைந்த சம்பளம்தான் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் கம்பெனி பெத்த கம்பெனி. அவர் கொடுத்த குருட்டு தைரியத்தில் நான் இங்கே வந்தேன். அதிலும் முடிவெடுப்பது என்பதில் இந்தியர்கள் பெரும்பாலும் மட்டம்தான்.

நான் பெரும்பாலும் முடிவெடுப்பது வரும்போது அந்த வாய்ப்பை பிறருக்கு வழங்கி கௌரவப்படுத்துவது வழக்கம். இதனை கையில் எடுத்துக்கொண்ட சகோதரர் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவருக்கு கிடைத்த சம்பளம் போதவில்லை. நான் கூட வந்தால் வீட்டிலிருந்து பணம் அனுப்புவார்கள் இல்லையா அதனை பயன்படுத்தி சொகுசாக இருக்க நினைத்தார். அப்படித்தான் இருந்தார்.

அப்போது மயிலாப்பூரில் கோலவழி அம்மன் கோவில் அருகே தூத்துக்குடிகாரர்  வைத்திருந்த கடை இருந்தது. இன்று அவர் சில மோசடி ஆட்களால் ஏமாற்றப்பட்டு, சிரமப்பட்டு  கடையை மாற்றிக்கொண்டு வேறுபக்கம் சென்றுவிட்டார். ஆனால் அன்று இருந்த இறுமாப்பு அந்தப்பக்கம் இருந்த கடைக்கார ர்களிடம் இன்று வெகுவாக குறைந்துவிட்டது. பின்னே 9 ஆண்டுகள் அல்லவா?

முதலில் நிறைய விஷயங்கள் செய்து வந்த கணேஷ் அண்ணன், இன்று இதய ஆபரேஷன் செய்து நடக்கவே தள்ளாடி வருகிறார். முன்னர் அவரின் வேகம் என்னை ஆச்சரியம் செய்தது. துல்லியமாக கணக்கு போட்டு சில்லறையை வைத்து விட்டு அதை எண்ணுவதற்குள் அடுத்த ஆளைப் பார்ப்பார்.

இன்னொரு மாற்றம், சமையலுக்கு தேவையான தேங்காயை உடைத்து தருவது என்பது குறைந்துவிட்டது. முடிந்தளவு தேங்காயை வாங்கிவந்து நீங்களே உடைத்து பயன்படுத்தினால்தான் சட்னி கிடைக்கும். இல்லையெனில் வேறு ஆப்சன்களைப் பார்க்க வேண்டியதுதான்.

 பெரும்பாலும் பாக்கெட்டாக விற்கும் பொருட்கள்தான் இன்று கடையில் கிடைக்கின்றன. பால் என்றால் ஆரோக்கியா, தயிரென்றால் ஹட்சன் தயிர் என இப்படித்தான் விற்கிறார்கள். குறிப்பிட்ட பால் மட்டுமே கடையில் கிடைக்கும். ஆவின் பால் இனி எப்படி விற்குமோ? தயிர் ஒன்று வாங்கிப்பார்த்தால் 200 கி. 14 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். எண்ணெய் பசையே இல்லை. எப்படி பயன்படுத்துவீர்கள்.

Image result for லெஜண்ட் சரவணா ஸ்டோர்!

அடுத்து எண்ணெய் வாங்குவது? அனைத்தும் பாக்கெட்தான். போசி கொண்டுபோய் வாங்குவது எங்கள் ஊரில் புழக்கத்தில் இருந்தது. கோமுட்டி செட்டியார் கடையான தண்டபாணி ஸ்டோர் சென்றால், எண்ணெய் அளவு சொல்லி வாங்கிக்கொள்ளலாம். இன்று அவர்களும் போட்டியைச் சமாளிக்க சுதந்திர சுயசேவைக்கு மாறிவிட்டார்கள். ஆனால் பொருட்களில் பிரச்னை என்றால் தாராளமாக கொண்டு வந்து மாற்றிக்கொள்ளலாம் என்ற தன்மையை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை. அதுதான் அந்த கடையில் ஸ்பெஷல்.

இங்கு சொல்ல வேண்டியது, 2010இல் இருந்த வணிக நிலைமைகள் வேறு. இன்று வேறு. வியாபாரங்கள் பெரியதாக மாறிவிட்டன. தங்கள் கடையில் பொருட்களை வாங்குபவர்களிடம் நடந்துகொள்ளும் முறை அலட்சியமாக மாறியுள்ளது. நீ இல்லாவிட்டால் இன்னொருவன் வாங்குவான் என்று இறுமாப்புடன் திரிகிறார்கள்.

பொருட்களை நாம் எடுக்கும் முன்பே தூக்கி எறிகிறார்கள். நிறைய விஷயங்களுக்கு பணம் கொடுத்தால் போதும். கிடைத்துவிடுகிறது என வாங்குபவர்களும் கடைக்கார ர்களுக்கு பெரிய மதிப்பு அளிப்பதில்லை. இதற்கு நண்பர் சொன்ன காரணம் முக்கியமானது. முதலில் செட்டியார்கள் வியாபாரம் செய்துவந்தார்கள். பின்னர் நாடார்கள் உள்ளே வந்தனர். அதன்பின்னர்தான் வியாபாரத்தின் மீதான மரியாதை கெட்டது. வாடிக்கையாளர்களை யாரும் மதிப்பதில்லை என்று சொன்னார். சொன்னவர் இதனை முகநூலில் நிலைத்தகவலாக பதியவில்லை. அப்படி சொல்லியிருந்தால் சாதிச்சண்டையே வந்திருக்கலாம்.

எனக்குத்தெரிந்து அப்படி நடந்துகொள்கிற தன்மை சிலருக்கு, இருக்கலாம். இன்றும் எங்கள் ஊரில் உள்ள நெல்லை ஸ்டோரில் உள்நாட்டு குளிர்பானங்களே போதும் என வெளிநாட்டு கோலாக்களை விற்காமல் சமாளிக்கும் நாடார் சகோதரர்கள் உண்டு. அப்படி முடிவு எடுத்தீங்கன்னா, சேல்ஸ் கிடைக்காதே என்றேன். நான் வணிகர் சங்க தலைவராயிட்டேன். நாம் எடுக்கிற முடிவை நாமே மதிக்கலீன்னா எப்படிப்பா? எங்களோடு கடையில உள்நாட்டு கம்பெனி பொருட்கள்தான் இனி விற்கப்போறோம். அதுல கிடைக்கிற காசே போதும் என்றார். எனவே நாம் முற்றாக யாரையும் நிராகரித்து அப்படித்தான் என்று சொல்ல முடியாது.

இதில் பிக் பஜார் வைக்கும் லாபம் வேறு. அண்ணாச்சி கடை லாபம் வேறு. இதில் ஆஃபரும் கொடுப்பார்கள். எதுதான் உண்மை விலை என குழப்பம் கவனித்து வாங்குவோருக்கு ஏற்படும். அதை நாம் ஆயுள் முழுக்க பொருட்களை வாங்கினாலும் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. சொன்ன விலைக்கே பொருட்களை விற்பது என்பது இன்று நீல்கிரிஸ் கடைகளில் உண்டு. ஆஃபர் அரிது. ஆனால் பொருட்கள் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அதே மார்ஜின் ப்ரீ என்ற அண்ணாநகர் கடையில் அனைத்து பொருட்களையும் அவர்கள் எம்ஆர்பிக்கு குறைவாக கொடுக்க முடிகிறது. இதில் உங்களுக்குத் தேவையான விஷயங்களை எங்கு வாங்குவது என நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

கடையில் பொருட்கள் வாங்குவது என்பது உறவு, நம்பிக்கை என்பதாக இருந்து இன்று அந்த எண்ணம் குறைந்துவிட்டது. சர்வீசுக்கு கேட்டால் கூட பில்லில் எண் இருக்கும் அழையுங்கள் என்கிறார்கள். அதாவது திரும்ப இக்கடைக்கு வந்து அதைக் கொடுக்க முடியாது. குறிப்பிட்ட நிறுவனத்தின்  சர்வீஸ் சென்டருக்கு போகச்சொல்கிறார்கள். இதன் பொருள், பொறுப்புத் துறப்புதான். நாங்கள் பொருட்களை விற்போம். வாங்குங்கள். ஆனால் பிரச்னை என்றால் எங்களிடம் வராதீர்கள் . இந்தப்போக்கு ஸ்பார் போன்ற ஹைப்பர் மார்க்கெட்களிடம் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்கள் மனதில் இடம்பெற நிறைய விஷயங்கள் செய்யவேண்டும். இல்லையெனில் விற்பனை செய்யும் கடை என்ற நிலையில் மட்டுமே அவர்கள் இருப்பார்கள். மக்கள் அவர்களிடமிருந்து தூர விலகி இருப்பார்கள்.

சிறிய கடைகள் கூட பல்நோக்கு கடைகளாக மாறி வெஜ் ப ப்ஸ் கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். காரணம் மக்களின் எதிர்பார்ப்புதான். அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று மயிலாப்பூரிலுள்ள மருந்தகங்களில் பார்த்தால் பிரிட்டானியா பிஸ்கெட்டுகளையும் விற்று வருகிறார்கள். அது என்ன மருந்தா? பசிக்கு மருந்து என்ற சமாளிப்பார்கள். வளர்ச்சிக்கான வேகத்தில் நாம் கைவிடப்படக்கூடாது என்று அனைவரும் ஓடுகிறோம். கைவிட்டது நாம் மக்களுக்கு விற்கும் பொருட்களுக்கான அக்கறையைத்தான்.


கா.சி.வின்சென்ட்