பத்திரிகையாளர் மீது ஒடுக்குமுறை! - நைஜீரியாவில் நடக்கும் அநீதி







நைஜீரியாவைச்சேர்ந்த பத்திரிகையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஓமோயெலே சோவோரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நைஜீரியத் தேர்தலிலும் போட்டியாளராக இருந்தார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாடு தழுவிய ரிவல்யூசன் நவ் என்ற போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். உடனே அரசின் மாநில சேவைகள் துனை சோவோரேவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டும் சிறையில் இருந்து விடுவிக்க அரசுக்கு மனம் வரவில்லை.

அரசு இப்போராட்ட அழைப்பை தன்னைக் கவிழ்க்கும் முயற்சியாக பார்க்கிறது. ஆகஸ்ட் எட்டாம் தேதி, சோவோரோவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 45 நாட்கள் அனுமதி கொடுத்தது. உடனே வெகுண்ட சுதந்திர ஊடகங்கள் அமைப்பு, ஐ.நா அமைப்பிடம் சோவோரோவை விடுவிக்க மனு கொடுத்தது. அவரைக் கைது செய்தது மனித உரிமை மீறல் என்று இந்த அமைப்புகள் புகார் தெரிவித்தன.

அரசு ஒருவரைக் கட்டம் கட்டிவிட்டால் சும்மா விடுமா? 45 நாட்கள் கழிந்தபின்னர் அவரை விடுவிக்க வேண்டுமே? உடனே இணைய மோசடி, பண மோசடி வழக்குகளை சோவோரே மீது பதிந்தது. சோவோரே, சகாரா ரிப்போர்டர்ஸ் என்ற இணைய பத்திரிகையை 2006 முதல் நடத்தி வந்தார். இதன்பேரிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புரட்சியைக் கிளப்பி நைஜீரிய அதிபரை பதவியிறக்கம் செய்ய முயல்கிறார் என்பது அரசு தரப்பில் முக்கியமான குற்றச்சாட்டு.

அரசு சேவைகள் துறை கோர்ட்டின் ஆணை தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். சோவோரே வின் வழக்குரைஞர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

குளோபல் வாய்ஸ்