தந்தைகளுக்கிடையே உரிமைப் போராட்டம் - டாடிஸ் ஹோம் 1
டாடிஸ் ஹோம் -2015
ஆங்கிலம்
இயக்கம் - சீன் ஆண்டர்ஸ்
கதை - பிரையன் பர்ன்ஸ்
திரைக்கதை - சீன் ஆண்டர்ஸ், பிரையன் பர்ன்ஸ், ஜான் மோரிஸ்
இசை - மைக்கேல் ஆண்ட்ரூஸ்
அமெரிக்க குடும்ப முறையில் இருக்கும் சிக்கல்கள்தான் கதை. திருமணம் செய்து பிரிந்து மீண்டும் திருமணம் செய்து என பயணிக்கும் அவர்களின் திருமண முறையால், குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலை பேசுகிற படம் இது.
வில் ஃபெரல் படத்தில் நடிகராக பின்னி எடுத்திருக்கிறார். அதோடு படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். தன்னுடைய மனைவியின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாக நினைக்கிறார். ஆனால் அவர்கள் இவரை வெறுத்து ஒதுக்குகிறார்கள் அந்த மனநிலையை மாற்ற முயல்கிறார். அப்போது, அக்குழந்தைகளின் உயிரியல் தந்தை அங்கு வர, இரு தந்தைகளுக்குள்ளும் நடக்கும் முட்டல் மோதல்கள்தான் கதை.
மார்க் வால்பெர்க் உயிரியல் தந்தை என்ற பெருமிதம் காட்டினாலும், குழந்தைகளுக்கான செய்யும் வேலைகள், பொறுமை, நிதானம் என்று வரும்போது ஆஹா... என பேக்கடிக்கிறார். கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் தத்தளிக்கிறார். இவர்களின் கோபதாபத்திற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் லிண்டா. மோசமில்லை ப்ரோ.
காமெடி, குடும்ப உறவுகள், குழந்தைகளின் எண்ணம் என நிறைய மெனக்கெட்டிருந்தால் சீரியசான படமாக வந்திருக்கும். ஆனால் வில் ஃபெரல் காமெடியாக போனாலே போதும் என நினைத்திருக்கிறார். காமெடி, காதல், சந்தோஷம், வருத்தம் என அனைத்து உணர்ச்சிகளிலும் சாதித்து மனதில் நிற்கிறார்.
கோமாளிமேடை டீம்