பாதி சிங்கம் பாதி நரி கால்வாசி எலி - நரசிம்மராவின் கதை!




Image result for narasimha rao
open


நரசிம்மராவ்
வினய் சீத்தாபதி
தமிழில் - ஜெ.ராம்கி
கிழக்கு

பம்மலப்பட்டி வெங்கட நரசிம்மராவ், இந்திய அரசியலில் இன்று மறக்கப்பட்ட முகம். காங்கிரஸ்காரர்கள் யாரும் அவருடைய பிறந்தநாள், நினைவுநாள் என எதிலும் பங்குகொள்வதில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தவிர காங்கிரஸ் முகங்கள் யாரையும் நினைவஞ்சலியில் பார்க்க முடியாது.
அரசியலில் சிங்கத்திற்கு வைக்கப்பட்ட பொறிகளை நரியாக கண்டுபிடித்து, முற்றுகையிடும் ஓநாய்களை சிங்கமாக மாறி விரட்டி ஆட்சி செய்த பிரதமர்.

ஆந்திராவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, வசதியாக வாழ்ந்தவர். குடும்பத்தில் அதிக மொழிகள் கற்ற புத்திசாலி. ஆங்கிலம் கற்பதற்கு முன்பே ஐந்து மொழிகள் கற்றவர்.
இவர் மீதான குற்றச்சாட்டாக பாபர் மசூதி இடிப்பு கூறப்படுகிறது. அக்காலகட்ட நிகழ்ச்சிகளை நேர்த்தியாக வினய் சீத்தாபதி பதிவு செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் ராவ் நேர்மையானவர். ஆனால், நேர்மையாக அரசியல் செய்தவரல்ல என்ற வரி போதும். ராவ் அரசியலில் குதிரை பேரங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலில் சூட்கேஸ் வாங்கிய குற்றச்சாட்டு ராவ் மீது களங்கத்தை ஏற்படுத்தியது.

தொலைநோக்கு பார்வையில் கல்வி, மருத்துவம் சார்ந்த திட்டங்களுக்கு நிதி அளிக்காதவர் என்று ஒரு பாராவில் கூறப்பட்டுள்ளது. அடுத்த அத்தியாயத்தில் ராவ், கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது பள்ளியில் குறைந்தபட்சம் இரு அறைகளை கட்டி அதனை நடத்த ஆணை பிறப்பித்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
Image result for narasimha rao
et
ராவின் வெளியுறவுத்துறை பற்றிய பக்கங்கள், அவரின் நேரு வழியிலான வெளியுறவு பாதையை சிறப்பாக பதிவு செய்துள்ளது. பாலஸ்தீன, இஸ்ரேல் உறவு, சோவியத் யூனியன், அமெரிக்கா உறவு, மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையேயான உறவு என அனைத்திலும் சிறப்பாகவே ராவ் செயல்பட்டுள்ளார். அதில் பயன்கள் அப்போது கிடைக்காவிட்டாலும் அந்தப்பாதையில் அடுத்து வந்தவர்கள் பயணிப்பதற்கான வழிகாட்டியாக ராவ் மாறினார். 



நூலைப் பற்றி பேசும்போது, ராவ் ஒரு துரோகி என பத்திரிகை நண்பர் கூறினார். காரணம், பாபர் மசூதி இடிப்பு நடந்தபோது, வட இந்தியாவில் பணிபுரிந்து வந்தவர் அவர்.  அவர் சொன்னதில் உண்மையும் இருக்கலாம். தாமதமாக முடிவெடுப்பது பற்றி ராவை கிண்டல் செய்கிறார்கள். ஆனால் சிறுபான்மை அரசாக தன்னைக் காப்பாற்றிக்கொண்டு செய்யவேண்டிய விஷயங்களைச் செய்ய வேண்டிய நிலையில் அவர் முடிவெடுக்கத் தடுமாறிவிட்டார்.

எதிர்க்கட்சிகள் என்றாலும், பாஜக வளர்வதற்கான சூழல் பாபர் மசூதி இடிப்பில்தான் தொடங்கியது. இன்றுவரையும் அக்கட்சி முடிவடையாத அயோத்தியில் ராமர் கோவில் என்பதில்தான் நிலைகொண்டு உள்ளது. 1995 இல் சாதித்த விஷயங்களை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க ராவுக்கு தெரியவில்லை. எனவே, தன்னை ஏமாற்றிய எதிர்க்கட்சி ஆட்கள், உள்கட்சி துரோகிகள் ஆகியோரை ஆதாரமில்லாத ஹவாலா வழக்கில் மாட்டிவிட்டார். ஆனால் அந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வெளியிலும் அவருக்கு பகையை மட்டுமே வளர்த்தது.

இதெல்லாம் தாண்டி, தகவல் தொழில்நுட்பத்துறையின், பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தையாக பி.வி. ராவைத்தான் கூறவேண்டும். ஆந்திரத்தின் சோஷலிசவாதியாக இருந்து பின்னர் ராவின் முரண்பட்ட அரசியல் தனிநபர் ஆளுமை என்பது யாருக்கும் புரிபடாது. அவரின் ஆளுமை அப்படித்தான். இதில் வெளிப்படையாக பேசப்பட்ட விஷயம், சத்யம்மா, லட்சுமி காந்தம்மா, கல்யாணி சங்கர் ஆகியோரின் உறவு. இதை மெலிதாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். அதற்கு முக்கியத்துவம், ராவ் முதல்வராகும்போதும், பிரதமராகும்போதும் ஏற்படுகிறது. ஆந்திரத்தில் லட்சுமி காந்தம்மாவும், டில்லியில் கல்யாணி சங்கரும் உதவுகின்றனர். இவர்களுக்கு ராவ் செய்த உதவிகள் பற்றி நூலில் எழுதப்படவில்லை.

ராவ் பற்றி போற்றி எழுதுவார்கள் என்று யாரும் கணிக்கலாம். ஆனால் ராவ், நம் அனைவரைப் போலவும் சரி, தவறுகள் கொண்ட சுயநலம் மிகுந்த மனிதர்தான். இதனால்தான் 1990களில் மட தலைவராகும் படி சோர்வாக இருந்தவர், பிரதமரானவுடன் உற்சாகமாக பணியாற்றி சாதனை செய்கிறார். காரணம், விட்டமின் பவர்தான்.

தேர்தலில் தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள ராவ் கடைபிடித்த ஹவாலா என்ற உத்தி, படுமோசமாக கட்சியையும், அவரையும் கீழே தள்ளியது. மேலும், உள்நாட்டுப் பாதுகாப்பு பணியாற்றிய உளவுத்துறையை கட்சியினரை உளவு பார்க்க வைத்தது நாட்டின் பாதுகாப்பை படுகுழியில் தள்ளியது. அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை எப்படி வைத்துக்கொள்வது என்பதை அறிந்தவர் ராவ்தான். எழுத்துப்பணியில் தன்னை ஈடுபடுத்தியதும்,  மெயின்ஸ்ட்ரீம் பத்திரிகையில் வெவ்வேறு பெயர்களில் கட்டுரைகளை எழுதியதும்  இப்படி நடந்த விஷயங்கள்தான்.
ராவ் நாம் அனைவரும் நினைப்பதுபோல் சிரிக்கத் தெரியாதவர்தான். ஆனால் ஆழ்ந்து சிந்திக்கத் தெரியாதவர் அல்ல.

அதனால்தான் நாம் அமெரிக்கா போன்களையும், தாய்லாந்து அழகு சாதனப் பொருட்களையும், ஜப்பானின் சோனி டிவியையும் வாங்க முடிந்தது. ராஜிவ்காந்தி, நேரு ஆகியோரை முன்னிறுத்தி செயல்களை செய்தாலும், ராவ் தன்னிகரற்ற புதிய பாதை போட்ட இந்தியாவின் நவசிற்பிகளில் ஒருவர். நேருவுக்குப் பிறகு சிறுபான்மை அரசைக் காப்பாற்றியபடி பொருளாதார சீர்திருத்தங்கள் செய்த சாதனையாளர் ராவ்தான்.

சமூக மாற்றங்களுக்கு ராவ் முயற்சித்தார். ஆனால் காங்கிரஸ் காழ்ப்புணர்ச்சியால் அவரைக் கைவிட்டது. இதனால் அவருக்கு டில்லியில் மணிமண்டபம் கட்டி, அவரின் சாதனைகளை தனக்கானதாக மாற்றிக்கொண்டது பாஜக. உண்மையில் அணுகுண்டு ஆராய்ச்சியை பாஜகவுக்கு அளித்த பெருந்தன்மை ராவினுடையது. சுயநலத்தையும் மிஞ்சி பலமுறை தேசத்திற்காக ராவ் யோசித்தார். அதனால்தான் இந்தியா இன்று மேற்குலகின் பொருளாதார பிரச்னைகளால் பாதிக்கப்படாமல் இருக்கிறது. 3000 கோடி அந்நிய செலவாணியை 51 ஆயிரம் கோடியாக மாற்றிய சாதனையை ராவ் தன்னுடையதாக விளம்பரப்படுத்தவில்லை. அதுதான் அவருடைய தன்மை. அவரை இருட்டடிப்பு செய்வதற்கும் அதுவே காரணமாகிப் போனது.


கோமாளிமேடை டீம்