நினைவுகளைத் தேடும் குற்றவாளி! - ரத்தப்படலம் காமிக்ஸ் அதிரடி!
ரத்தப்படலம்! 1-18
முத்து காமிக்ஸ்
ரூ. 200
அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வருவது எனும் போட்டியில் நடக்கும் பல்வேறு துரோகங்கள், கொலைகள் ஆகியவற்றை ஒட்டி உருவான கதாபாத்திரம்தான் பதிமூன்று. முதல் காட்சியில் தலையில் சுடப்பட்டு வயதான பெண்மணியால் காப்பாற்றப்படுபவர்தான் நாயகன். தான் யார் என்று அறிய முயற்சிக்கும்போது, அவர் யார் என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. இவரைக் கொல்ல சிஐஏ, எஃப்பிஐ, மங்கூஸ் எனும் கூலிக்கொலைகாரன் ஆகியோர் பலரும் தேடி வருகின்றனர்.
அதேசமயம், பதிமூன்று என்பவருக்கும் சிஐஏ தலைவரான ஜியோர்டினோ என்பவருக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. அவர் பதிமூன்றை ஏதோ ஒரு வழியில் துரத்திக்கொண்டே இருக்கிறார். அந்த உறவு என்ன? பதிமூன்று என தோளில் அச்சிடப்பட்டிருப்பதன் பொருள், அவர் மனைவியாக சொல்லப்படும் கிம் என்னவானாள், வாலி ஷெரிடன் கொலைக்கு காரணம் என அனைத்து மர்மங்களும் பதினெட்டு அத்தியாயங்களில் விடுவிக்கப்படுகிறது.
எந்த அத்தியாயங்களையும் படிக்காமல் உங்களால் இறுதிப்பகுதியை எட்ட முடியாது. எனவே எடுத்தவுடனே கிளைமேக்ஸை படிக்க முயற்சிக்காதீர்கள். சிலந்திவலை போன்ற காமிக்ஸ் இது. எந்த இடத்தில் தொட்டாலும் சிலந்திக்கு தெரியும் என்பது போல, அனைத்து சம்பவங்களிலும் பதிமூன்று என்ற நபரில் முடியும் முடிச்சுகள் பிரமிக்க வைக்கின்றன.
ஜாக் ஷெரிடன், ஜேசன் ப்ளை, மக்லேன், ஸீம்ஸ் ஓ நீல், ஸ்டண்ட்மேன் என ஏராளமான பெயர்கள் பதிமூன்றுக்கு உண்டு. இதில் எது தன்னுடைய அடையாளம் என தேடுவதுதான் கதை. அவனைச் சந்திப்பவர்கள் அவனது உதவியைப் பெற தனக்கேற்ற கதைகளைச் சொல்கிறார்கள். அதனை பதிமூன்று நம்புகிறான். மிஸ் ஜோன்ஸ், மரியா, டயானா ஆகியோர் இப்படியான ஆட்கள்தான்.
பதிமூன்று தலையில் சுடப்பட்டு மூளையில் ரத்தப்படலம் கட்டிவிடுகிறது. அவனை மதுபோதையால் மருத்துவர் அங்கீகாரம் இழந்த பெண்மணி காப்பாற்றுகிறார். அவளுக்கு அவன்மீது அளவற்ற காதல் ஏற்படுகிறது. இறுதியில் அவள் எழுதி வைத்துள்ள சொத்துதான் பதிமூன்றுக்கு இளைபாறுதலாக இருக்கிறது. யோசிப்பதற்கான இடைவெளி கூட. அதிலிருந்து ரத்தப்படலம் 2 தொடங்கலாம். இதிலுள்ள கிளைக்கதைகளை வைத்தே தனி காமிக்ஸ் நூல்களை எழுதலாம். ஜியார்டினோ, ஜெனரல் காரிங்டன், ஸ்டீவ் ராலண்டின் மனைவி கிம், மேஜர் ஜோன்ஸ் என அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. காமிக்ஸ் படிக்கும் த்ரில் உங்களுக்கு நீளவேண்டுமா? ரத்தப்படலம் வாங்கிப் படியுங்கள்.
கோமாளிமேடை டீம்