ஸ்வச் பாரத் என்பது மாயக்கனவு! - பெசவாடா வில்சன்
பெசவாடா வில்சன்
ஸ்வச் பாரத் கூட கழிவறைகளை கட்டுவதாகவே இருக்கிறது. ஆனால் அதனை இன்றுவரை சுத்தம் செய்பவர்களைப் பற்றி ஏதும் பேசுவதில்லையே?
சாதியும் சுத்தமும் இந்தியாவில் பின்னிப்பிணைந்துள்ளது. எனவேதான் கழிவறைகளை கட்டுபவர்கள், அதனை சுத்தம் செய்பவர்களை பற்றி மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி பேசக்கூட அவர்கள் தயாராக இல்லை. அரசு இதனைக் கவனத்தில் கொள்வது தலித்துகளின் மரணங்களைக் குறைக்கும்.
அரசு, மனிதக்கழிவு அள்ளுபவர்கள் என்று 54,130 பேர்களை அடையாளம் கண்டிருக்கிறதே?
அரசு கூறும் கணக்கு உலர் கழிவறைகளைச் சுத்தம் செய்பவர்களை மட்டுமே. பாதாளச்சாக்கடை மற்றும் கழிவுநீர் டேங்குகளில் இறங்கி சுத்தப்படுத்துபவர்களை அரசு இன்றுவரையும் கண்டுகொள்வதில்லை. உச்சநீதிமன்றம் கூறும் கருத்துகளை அரசு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வெறும் கருத்தாக சொல்வதை விட்டு குறிப்பிட்ட காலக்கெடு விதித்தால் நன்றாக இருக்கும்.
சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிர்களும் பலியாகாமல் இருக்கும். உண்மையில் எங்களுக்குத் தேவை நீதிமன்றங்களின் அனுதாபம் அல்ல. உறுதியான உயிர்களின் பலிகளைத் தடுக்கும் நடவடிக்கை மட்டுமே.
கேரள மாணவர்கள், கழிவுகளை அள்ளும் இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
இத்தனை கோடி மக்கள் இருக்கும் தேசத்தில் இதுபோன்ற முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். ஆனால் சாதி ஆதிக்க மனோபாவத்திலுள்ள அரசு இதுபோன்ற முயற்சிகளை சாத்தியப்படுத்த முன்வருவதில்லை. அரசின் சாதிய மனம் மாறாதவரையில் தொழிலாளர்கள் இறந்துகொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் இதுபோன்ற முயற்சிகளையும் தலித்துகளுடையதாகவே பார்க்கிறார்கள்.
இப்பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
மலமள்ளும் தொழிலாளர்களுக்கு அரசு இழப்பீடாக பதினைந்து லட்சம் தரவேண்டும். இதனை அவர்கள் கடனாக பார்க்க கூடாது. கழிவுகளை முறையாக சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் பற்றிய கண்டுபிடிப்புகளை செய்யாமல் ஸ்வச் பாரத் பற்றி பேசுவது மாயக்கனவாகவே இருக்க முடியும்.
ஆங்கிலத்தில் பலியத்
நன்றி- இந்தியா ஸ்பெண்ட்