நாயிடம் இருக்கும் சூப்பர் பவர்! - என்ன தெரியுமா?
டாக்டர். எக்ஸ்
எலி, முயல், கிளி என நாம் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்துவிட்டோம். ஆனால் நம் கூடவே வளைய வரும் நம் குணங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நாய் பற்றி நாம் பெரிதாக கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை.
பெடிகிரி போட்டால் போதும். பால் சோறு வெச்சால் போதும் என்று இருந்தால் எப்படி? மனிதர்களுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்து பிழைத்து வரும் உயிரினங்களில் முக்கியமானவை நாய்கள்.
பொதுவாக ஒருவரை நமக்கு ஏன் பிடிக்கிறது? அவர் புத்திசாலி என்பதாலா அல்லது அன்பாக இருப்பார் என்பதாலா? புத்திசாலியாக இருந்தால் அவரைப் பற்றி தமிழ், ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதலாம். அதற்கே கூட அவரிடம் நீங்கள் பழக வேண்டும். மனிதர் தேள் போல கடித்துக்கொண்டே இருந்தால் அவரிடம் உங்களுக்கு பழகத் தோன்றுமா?
நாய் அப்படித்தான். பூனைகள் எஜமானர் போல நடந்துகொள்ளும். நாய் அடிமை போலத்தான் நடந்துகொள்ளும். பணம் வைத்திருக்கிறோமோ இல்லையோ, பிஸ்கட் போடுகிறோமோ இல்லையோ வீட்டிற்குள் நீங்கள் நுழைந்ததும் உங்களை ஆவலோடு ஆக்ரோஷமாக வரவேற்கும் அதனுடைய காட்டுத்தனமான பாசம்தான் அதன் விசேஷம்.
நாம் வாழ்வில் சிலரிடம் புகழையும் சிலரிடம் பணத்தையும் சிலரிடம் பாசத்தையும் எதிர்பார்ப்போம். இன்று உறவுகளால் கசந்தவர்கள் கூட தனியாக வாழ்வதை தவிர்க்க நாய்களை வளர்ப்பது அதிகரித்து வருகிறது. இதனை குறைசொல்லவில்லை. நம்முடைய வாழ்க்கையே கடந்த கால அனுபவங்களிலிருந்து அதன் தவறுகளிலிருந்துதானே தொடங்குகிறது.
சில அறிவுஜீவிகள் நாய்களுடன் செலவழிப்பது நேரவிரயம் என்று கூறலாம். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். நாய்களுடன் விளையாடும்போது அதன் கண்களைப் பாருங்கள். நேசத்தை அதிகரிக்கும் ஆக்சிடோசின் உங்கள் உடலில் உருவாகும் விந்தையை நீங்களே உணருவீர்கள்.
நாய், ஓநாய்களின் வம்சாவளி. இவை குழுவாக திரிபவை என்பதால், நாய் முடிந்தவரை மனிதர்களோடு ஒட்டி இருக்கவே விரும்பும். நீங்கள் கட்டில் போட்டு படுத்தால் நாய் ஓரமாக போய் படுக்காது. கட்டிலின் கீழேதான் படுத்திருக்கும். அதன் இயல்பு அது. காவலும் கூட.
பகலை விட இரவில் இந்த தன்மை அதிகமாக இருக்கும். பாரபட்சம் பார்க்காமல் பாசத்தை அள்ளி வழங்கும் விலங்கு நாய் என்பது மனதில் உறுதியாச்சா? இல்லையென்றால் மேலே உள்ள நூலை வாங்கிப் படியுங்கள்.