வலியில்லாத அழகு சிகிச்சை வருகிறது!- மூலக்கூறு சிகிச்சை முறை!
வலியில்லாத அழகு சிகிச்சை!
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வலியற்ற முக அழகு சிகிச்சை முறையான மூலக்கூறு சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது.
நோய்க்கு இணையாக மக்கள் அறுவை சிகிச்சைக்கு பயப்படுகின்றனர். காரணம், இதிலுள்ள வலி, ரத்தப்போக்கு, தையல் ஆகியவைதான். தற்போது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வலியற்ற அழகு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். இதற்கு மோலிக்குலர் சர்ஜரி (molecular Surgery) என்று பெயர். உடலிலுள்ள திசுக்களின் வடிவத்தை மாற்றிச்செய்யும் இச்சிகிச்சை, அழகு சார்ந்த விஷயங்களுக்கானது.
”எளிமையாக அனஸ்தீசியா கொடுத்து ஐந்து நிமிடங்களில் இந்த மூலக்கூறு சிகிச்சையைச் செய்து முடிக்கலாம். இதன் செலவும் மிக குறைவானது” என்கிறார் மருத்துவர் மைக்கேல் ஹில். இம்முறையில் காது, மூக்கு ஆகியவற்றை சீர் செய்யலாம். சிறிய ஊசிகள், மின்சாரம், 3டி வடிவ பொருட்களை இதில் பயன்படுத்துகின்றனர்.
இதில் முகத்திலுள்ள குருத்தெலும்பில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை செலுத்தி வளையும் தன்மைக்கு மாற்றுகின்றனர். பின்னர், அதனைத் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கின்றனர். திசுக்களை அழிக்காமல் குருத்தெலும்பை வளைக்க பல்வேறு நுட்பமான விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் செய்கின்றனர். இம்முறையை முயலின் மீது சோதித்துப் பார்த்து வெற்றி கண்டுள்ளனர். தற்போது கண்களிலுள்ள திசுக்களுக்கும் இதனை செயற்படுத்திப் பார்க்க முயற்சித்து வருகின்றனர். இம்முறை வெற்றி பெற்றால் கண் பார்வைக் குறைபாடுகளுக்கும் மூலக்கூறு சிகிச்சை விரிவுபடுத்தப்படலாம்.
தகவல்: Science daily