மதுத்தடை வளர்ச்சியை குலைக்கும் - சேட்டன் பகத்!
giphy.com |
நான் மதுத்தடை தவறு என்று சொல்வதற்காக வருத்தப்படவில்லை. முக்கியமான குறிப்பு, நான் மது அருந்துபவனல்ல. குஜராத்தில் இன்றும் மதுவுக்கு தடை உள்ளது. காந்தி போர்பந்தரில் பிறந்ததால் அரசு அவருக்கு மரியாதை செய்வதற்காக இத்தடையை நீக்காமல் அப்படியே பெயரளவுக்கு காப்பாற்றி வருகிறது. மணிப்பூர், மிசோரம், ஏன் கேரளத்தில் கூட மது தடை அமலாகி பின் கைவிடப்பட்டது.
இந்தியர்கள் பொதுவாக சிக்கலான பிரச்னைகளைப் பற்றி பேச மறுக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத சினிமாவை கையில் எடுத்துக்கொண்டு நட்பை வளர்க்கிறார்கள். நான் அதைக் குறையாக கூறவில்லை. முக்கிய விவகாரங்களில் அவர்கள் சரியான அதிரடி முடிவுகளை எடுத்தே ஆகவேண்டும்.
மது தடை என்ற முடிவை நான் எதிர்க்கிறேன். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானது என்று உறுதியாக நம்புகிறேன். உண்பது, உடுப்பது, வணங்குவது போன்ற விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்பது என் கருத்து. மது தடையால் குஜராத் அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை இழக்கிறது. இதற்காக மக்களின் தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இது தவறான முறைதானே? மது விற்பது என்பதும், அதனால் வருகிற உடல்நல பாதிப்புகளும் உண்மைதான். ஆனால் அதனை தடுத்தால் வருகிற பாதிப்புகளை குஜராத்தின் சுற்றுப்புறங்களில் நீங்கள் பார்க்கலாம். அமெரிக்காவில் 1920-33 ஆண்டுகளில் மது தடை கொண்டு வரப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.
நாம் முதிர்ச்சியான சமூகமாக வளர்ந்திருக்கிறோம். உண்பது பற்றிய சுதந்திரத்தை ஏன் நாம் கொண்டிருக்கவில்லை. மது என்பதை ஒருவர் தானே தேர்ந்தெடுத்து குடிப்பது, குடிக்காமலிருப்பது என சுய ஒழுங்குடன் இருந்தால் போதுமே?
புகையிலை தவறுதான். அரசு அதற்காக அதன் விளைச்சலை தடுக்கவில்லை. வாங்கும் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறது. இப்படித்தான் அரசு இருக்கவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மதுவுக்கு தடை என்று முடிவெடுத்தால் என்னாகும்? தொழில்துறை வளர்ச்சியே சரிவைச் சந்திக்கும் நிலை ஏற்படும். பார்ட்டி என்ற விஷயமே அங்கு நடக்காது.
அரசு தடை என்ற வார்த்தையை தன் நிர்வாகத்தில் கொண்டு வருவது இனி சாத்தியமில்லை. அப்படி கொண்டிருந்தால் அதனை நீக்கிக்கொள்வதே இந்தியா வளருவதற்கான வழி.
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது