உண்மையைச் சொன்னால் கொல்வேன் - பாபி மிரட்டல்
அசுரகுலம்
பாபி ஜோ லாங்
1953 ஆம் ஆண்டு மேற்கு வர்ஜீனியாவில் பிறந்தவர் பாபி. பின்னர் தாயுடன் மியாமிக்கு இடம்பெயர்ந்தார். சிறுவயதிலிருந்து மேற்கு நாடுகளில் குழந்தைகளை தனியாக படுக்க வைத்து பழக்குவார்கள். அவர்களின் சுய ஆளுமைக்கு அது முக்கியம். ஆனால் பாபி, பதிமூன்று வயது வரை தாயுடனே தூங்கிப் பழகியவன். தாய் வெயிட்ரஸாக பணியாற்றியவர். அவர் தூங்கிய இடம் பின்னாளில் தாயின் காதலனுக்கு என்றானபோது பாபியின் மனம் உடைந்து போனது. அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மெல்ல தனியாக தூங்கத் தொடங்கினான். இதற்கிடையில் அவனது உடல்ரீதியான பாதிப்பு பெரியதாக தொடங்கியது. குறிப்பாக பள்ளியில். பாபி சிறுவனாக இருக்கும்போதே அவனுக்கு ஹார்மோன் குறைபாட்டால் மார்புக் காம்புகள் பெரிதாகி (Klinefelter syndrome) பெண்கள் போல வளரத் தொடங்கியது. சாதாரணமாக ஆண்கள் படிக்கும் பள்ளியில் லேசாக பெண் சாயலில் இருக்கும் பையன்களுக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பதும், மார்பைத் தடவுவதும், புட்டத்தைக் கிள்ளுவதுமாக இருப்பார்கள். இங்கு பாபி இப்படி இருந்தால் சும்மா விடுவார்களா? பட்டப் பெயர் வைத்து அழைத்தனர். தொட்டு தடவினர். மார்பை அழுத்தினர். பாபி தாயிடமிருந்தும் விலகியிருந்த நிலையில் என்ன செய்வான்? பல்லைக் கடித்தபடி அனைத்தையும் பொறுத்துக்கொண்டான். ஆனால் அவன் மனம் அத்தனை விஷயங்களையும் கேட்டுக்கொண்டது.
ஐந்து வயதில் பாபிக்கு தலையில் அடிபட்ட விஷயத்தை நான் உங்களுக்கு சொல்லவில்லை. இதனால் அவரது மனநிலை என்பது அடிக்கடி சடார் சடார் என ஆட்டோமேடிக் கியர் போல மாறி விழுந்து கொண்டிருந்தது. பின்னர் ராணுவத்தில் சேருவதற்கு அவர் தயாராக இருந்தபோது விதிபோல வந்த விபத்து அவரின் தடம் மாற்றியது. மோட்டார் சைக்கிளில் தெருவில் வந்தபோது எதிரே வந்த வாகனம் அடித்து தூக்கியதில் மீண்டும் தலையில் பாதிப்பு.
இம்முறை பாதிப்பு தீவிரமாக இருந்தது. அவரது வாழ்க்கையில் ஒரேயொரு மறுமலர்ச்சியாக இருந்தது பள்ளித்தோழி சிந்தியாதான். அவரையே 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பாபி. தலையில் ஏற்பட்ட பாதிப்பினால் செக்ஸ் மீது பின்னர் தீவிர வேட்கை தொடங்கியது.
“ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது கோபத்தில் என் தலையைக் கொண்டுபோய் டிவியில் அடித்தார். கழுத்தைப் பிடித்து நெரித்தார். ஆனால் அடுத்தநொடி என்னை மன்னிச்சிரு சிந்தியா, தெரியாம செஞ்சிட்டேன். டாக்டர்கிட்ட போவோமா? என்றார். அதற்கடுத்த நிமிஷம், இந்த விஷயத்தை யார்கிட்டேயாவது சொன்னீன்னா, உன்னை இங்கேயே கொன்னு புதைச்சிருவேன் ” என்று மாறி மாறி பேசினார் என்று பின்னாளில் பேட்டியளித்தார் சிந்தியா. 1980 இல் இந்த திருமண உறவு முடிவுக்கு வந்தது.
தொகுப்பும் எழுத்தும்
வின்சென்ட் காபோ