பட்டாசுக் குப்பைகளை என்ன செய்வது?
பங்குனித்தேர் விழாவின் போது மயிலாப்பூரில் சோறு எப்படி மூலைக்கு மூலை சிதறிக் கிடக்குமோ, அதைவிட அதிகமாக பட்டாசு குப்பைகள் இன்று தமிழகம் முழுக்க கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது.
சென்னை நகரம் இந்த தீபாவளிக்கு 82 டன் குப்பைகளை உற்பத்தி செய்திருக்கிறது. இதிலும் அடையாறு, ராயபுரம் பகுதி பட்டாசு குப்பைகளை உற்பத்தி செய்த தில் முன்னிலை வகிக்கும் பகுதிகள். இதனை தூய்மை செய்யும் பணியில் 19 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இடையே மழை வேறு பெய்வதால், பணியாளர்களுக்கு பதிலாக குப்பைகளை அதுவே ஓரங்கட்டி விடுகிறது. பட்டாசுக் குப்பைகளில் வேதிப்பொருட்கள் இருக்கின்றன என்பதால், அதனை திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியிலுள்ள திடக்கழிவு நிலையத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். இங்கு ஆபத்தான திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர்.
கடந்த ஆண்டு உருவான பட்டாசு குப்பைகளின் அளவு 90 டன்கள். தூய்மை பணியாளர்கள் வேலைக்கு முன்னதாகவே வந்து பணிகளை செய்துள்ளனர். சாதாரண நாளில் சென்னையில் 5250 டன்கள் குப்பை உருவாகிறது.
மாநகராட்சி வீட்டுக்கழிவுகள் மற்றும் பட்டாசுக்குப்பைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து குப்பைத் தொட்டியில் போடாதீர்கள் என மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. காரணம், எளிதாக பிரிக்க முடியாது என்பதுதான். பகுதி வாரியாக குப்பைகளை பிரித்து மாநகராட்சி கும்மிடிப்பூண்டி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. போன ஆண்டு உருவான பட்டாசு குப்பைகளை அகற்ற அரசுக்கு மூன்று நாட்கள் பிடித்தன. ஆனால் இம்முறை ஒருநாள்தான் தேவைப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.