மாற்றங்களும் சீர்திருத்தங்களும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது! - ஃபிராங் ஸ்னோடன்
ஃபிராங் ஸ்னோடன்
யேல் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர்
ஆங்கிலத்தில்: ருத்ரநீல் சென்குப்தா
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்
கடந்த ஆண்டு பேராசிரியர்
ஸ்னோடன், எபிடெபிக் அண்ட் சொசைட்டி என்ற நூலை எழுதினார். இதில் மனிதர்களை பலிவாங்கிய
நோய்களின் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை என்பதுதான் விசேஷம்.
உலகிலுள்ள மக்களைத் தாக்கிய ஒவ்வொரு நோய்த்தொற்றுமே அதனளவில் தனித்துவம் வாய்ந்தவை.
அவை அன்றைய சூழல் பிரச்னைகளை நமக்கே அடையாளம் காட்டியவை என்று கூறுகிறார்.
கடந்த ஆண்டு நோய்த்தொற்று பற்றிய நூலை எழுதி வெளியீட்டீர்கள்.
இந்த ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு மக்களை பலிவாங்கி வருகிறது. இதுபற்றி எப்போதேனும்
யோசித்திருக்கிறீர்களா?
கடந்த ஆண்டு வெளியிட்ட நூலுக்கான
ஆராய்ச்சிப்பணியின்போது, அடுத்த நடக்கவிருக்கும் நுண்ணுயிரி ரீதியிலான தாக்குதலுக்கான
அறிகுறிகளை எச்சரிக்கைகளை அடையாளம் கண்டேன். நாம் நுண்ணுயிரிகளின் உலகில் அவற்றோடுதான்
வாழ்ந்து வருகிறோம். நுண்ணுயிரிகளில் தாக்குதலால் ஏற்படும் பெருந்தொற்று இந்தளவு தீவிரமாக
வேகமாக நம்மைத் தாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கரீபியன் நாடுகளில் வாழ்பவர்களுக்கு
புயல் பற்றி எச்சரிக்கை கொடுத்தாலும் யாரும் அதனைப் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள்.
மேலும் புயல்களை வைத்தே அங்கு மக்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. நோய்தடுப்பியலாளர்கள்
இப்படி பெருந்தொற்று ஏற்படப்போகிறது என்று சொன்னாலும் மக்கள் உஷாராக இருந்திருப்பார்கள்
என்று சொல்ல முடியாது. காரணம், அதற்கு அவர்களிடம் என்ன ஆதாரங்கள் இருக்கிறது? நாம்
அறிகுறிகளை அடையாளம் காணத் தவறிவிட்டோம் என்றுதான் நான் கூறுவேன்.
நான் கடந்த அக்டோபரில் என்னுடைய
நூலை வெளியிட்டேன். டிசம்பரில் கோவிட் -19 நோய்த்தொற்று தொடங்கியது. அப்போது நான் ரோமில்
ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். நானும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு
இருந்தே மீண்டேன். அப்போது அங்குள்ள சந்தைக்கு சென்றபோது மக்கள் வரிசையில் நின்று பொருட்களை
வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், ஏதோ உலகப்போர் நடந்தது போல அல்லவா இருக்கிறது
என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அங்குள்ள உள்ளூர் செய்தித்தாள் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளில்
ரோமானிய மக்கள் இந்தளவு ஒழுக்கமாக நடந்துகொண்டதே இல்லை என்று குறிப்பிட்டு கட்டுரை
எழுதியிருந்தது.
நோய் பரவுவதற்கான விஷயங்களை நாம் முன்னமே உருவாக்கி வைத்திருந்தோம்
என்று எப்படி குறிப்பிடுகிறீர்கள்?
பத்தொன்பதாம் நூற்றாண்டு
தொழில்துறையினர் இதுபோன்ற விஷயங்களை செய்து வைத்திருந்தனர். அந்தக்காலத்தில் எளிதாக
மக்களுக்கு காலரா, டைபாய்டு ஆகியவை நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் பரவியது.
மக்களும் சரியான சிகிச்சையின்றி பலியானார்கள். சரியான முன்தயாரிப்பு அப்போது கிடையாது
என்பதே முக்கியக் காரணம். அப்போது ஐரோப்பிய நாடுகளில் கூட தூய்மையான குடிநீர் வசதி,
கழிவுநீர் கால்வாய்களை அமைக்கப்படவில்லை. இதன் விளைவை அக்கால மக்கள் அனுபவித்தனர்.
நோய்கள் வேகமாக பரவி மக்களை பலிகொண்டன.
இன்று கோவிட் -19 உலகமெல்லாம்
பரவுகிறது என்றால் இயற்கையை பாதிக்குமளவு மனிதர்களின் செயல்பாடுகள் இருக்கிறது என்றே
அர்த்தம். மேலும் நாம் சூழல்களை பாதிப்படைய செய்து விலங்குகளை நம்மோடு வசிக்குமளவு
செய்திருக்கிறோம். தொழிலாளர்கள் நகரங்களைச் சார்ந்தே வாழ்கிறார்கள். இதன் காரணமாக,
நோய்த்தொற்று மிக எளிதாக பரவுகிறது. மெர்ஸ், சார்ஸ், எபோலா போன்றவை இப்படித்தான் பரவின.
கோவிட் -19 உலகம் முழுக்க பரவியது இம்முறையில்தான். இன்று ஜகார்த்தாவில் காலையில் ஒரு
நோய்த்தொற்று பரவியது என்றால் இரவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நோய்த்தொற்று பாதிப்பு
இருக்கும். உலகம் இப்படித்தான் ஒன்றுக்கொன்று இறுக்கமாக இணைந்துள்ளது.
இதனை முன்கூட்டியே நம்மால் தடுக்க முடியாதா?
அனைத்து நாடுகளையும் பாதிக்கும்
நோய்த்தொற்றை தடுப்பதற்கான திட்டங்களை அரசுகள் இன்று மட்டுமல்ல, எப்போதும் தீட்டியதில்லை.
அதனால்தான் நோய்த்தொற்று பரவி பெருந்தொற்றாக மாறும்போது ஆராய்ச்சிக்கு பணம் ஒதுக்கவேண்டும்
என குரல்கள் கேட்கும். நிலைமை சீரானதும் அந்த குரல்களுக்கு எந்த மதிப்பும் வழங்கப்படமாட்டாது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இங்கு நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
சின்னம்மைக்கு நாம் கண்டுபிடித்த
தடுப்பூசி என்ன செய்தது? ஆயுளுக்குமான அந்நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது
அல்லவா? அந்த தன்மையை கோவிட் -19 தடுப்பூசி மருந்து உருவாக்கவேண்டும். இந்த தன்மை இல்லையெனில்
மக்கள் பலியாவதை தடுப்பது கடினம். சூழலின் தன்மையை ஒழுங்கு செய்வது, நாம் வாழும் நகர
அமைப்பின் தன்மையை மாற்றுவது இதில் முக்கியமானது. இவற்றையெல்லாம் செய்யாமல் நம்மால்
மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்,
பிரேசில் அதிபர் பொல்சனாரோ போன்றவர்கள் நோய்த்தடுப்பு செயல்பாட்டை முடுக்கிவிடாமல்
தோற்றுவிட்டனர். மக்கள் இவர்களை நம்புவதை விட தம்மைத்தானே காத்துக்கொள்ள தன்னிச்சையாக
முன்வரவேண்டும். நாம் பிழைத்திருக்க வேறுவழி கிடையாது.
பெருந்தொற்று காலகட்டத்தில் அரசியல் மாற்றங்கள் ஏதேனும் நடந்துள்ளதா?
ஏனெனில் இக்காலகட்டங்களில் அரசின் கைகளில் முழுமையான அதிகாரம் குவிகிறது?
நீங்கள் கூறியது போல வரலாற்றில்
நிகழ்ச்சிகள் நடக்காமல் இல்லை. ஸ்பானிஷ் ப்ளூ ஏற்பட்டபோது ஆண்டு 1918. இந்த காலகட்டத்தில்
உலகப்போர் தொடங்கியிருந்தது. ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்ட காலகட்டம் கூட இதுதான். அரசின் கை ஓங்கியிருக்கும் காலம் இது.
மேலும், ஹைதி நாட்டில் மஞ்சள் காய்ச்சல் பரவி மக்கள் பாதிக்கப்பட்டபிறகுதான் அங்கு
சுதந்திரத்திற்கான குரல்கள் கேட்கத் தொடங்கின.
மக்கள் ஒன்றுதிரண்டு நின்றால்
மட்டுமே மாற்றங்களும், சீர்திருத்தங்களும் சாத்தியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக