கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை மாற்றிய ஸ்மார்ட்போனும், இணைய வசதியும்! - வெற்றிக்கதை
digital sathi indian express |
கிராமத்தில் நுழையும் தொழில்நுட்பம்
ஓடிஷா மாநிலத்தைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள் இணையம் மூலம் கல்வி கற்று பல்வேறு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
ஒடிஷாவின் கியோன்ஜார் என்ற மாவட்டத்திலுள்ள கிராமங்களில் 2ஜி போன்கள்தான் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அவற்றையும் ஆண்கள் பயன்படுத்தலாம். பெண்கள் பயன்படுத்தக்கூடாது என்ற தடையே போடப்பட்டிருந்தது. யாராவது இந்த போன்களைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கிராமசபை நடவடிக்கை எடுக்கும்படி நிலைமை இருந்தது. 2019 அக்கிராம பெண்களுக்கு மிகவும் மோசமாக அமையவில்லை. 4ஜி வசதி கொண்ட இணையத்தை அங்குள்ள பெண்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதற்கு இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாட்டு மையம், கிராம தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு ஆகிய தன்னார்வ அமைப்புகள், கூகுளோடு இணைந்து மாற்றங்களை நிஜமாக்கியுள்ளன.
இன்று இக்கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் 14 முதல் 60 வயது வரை அனைவருமே இணையத்தில் வீடியோக்களைப் பார்க்கின்றனர். பதிவேற்றுகின்றனர். செய்திகளை பல்வேறு செயலிகள் வழியாக பகிர்ந்துகொள்கின்றனர். மேற்சொன்ன தன்னார்வ அமைப்புகள் இங்குள்ள நான்கு கிராமங்களில் 700க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதற்கான பயிற்சியை அளித்துள்ளனர். மரபான கட்டுப்பாட்டு கொண்ட இக்கிராமங்களில் ஆண்களை சம்மதிக்கவைத்து அவர்களின் மனைவி, மகள்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவது சாதாரண காரியமல்ல. இன்றுவரை இந்த அமைப்புகள் 16 லட்சம் பெண்களுக்கு திறன்பயிற்சிகளை(digital sathi) வழங்கியுள்ளனர்.
இணையத்தில் யூடியூபிலுள்ள வீடியோக்களைப் பார்த்தே சானிடைசர், மாஸ்க் தயாரிப்பு, நவீன விவசாய முறைகள் ஆகியவற்றை கிராமப்புற பெண்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பு புவனேஸ்வரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, கிராமப்புற பெண்கள் வாட்ஸ்அப் மூலம் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு இங்கிருந்து சரியான பதில்களை அனுப்பி உதவுகின்றனர். ஏராளமான குறு வீடியோக்களை விழிப்புணர்வுக்காக இந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. பெண்கள் அவசர உதவிக்காகவும் இந்த அமைப்பை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக