இந்தியா மின் வாகனங்கள் தயாரிப்பில் பின்தங்க என்ன காரணம் தெரியுமா?
மின்வாகன தயாரிப்பில் சுணக்கம்?
இந்திய
அரசு, சீனாவிலிருந்து பெருமளவில் மின் வாகன பாகங்களை இறக்குமதி செய்துவருகிறது. தற்போது
இருநாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னைகளால், அரசு வாகன பாகங்களின் இறக்குமதியைக்
குறைக்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக, மின்வாகனங்கள் தயாரிப்புத்துறை
தடுமாற்றத்தில் உள்ளது. தற்போது உலகளவில் மின் வாகனங்கள் தயாரிப்பில் முதலிடத்தில்
உள்ள நாடு, சீனா.
மின்
வாகனங்களுக்கு அரசு முன்னர் அளித்த வரவேற்பால், ஹைபிரிட் வகை வாகனங்களுக்கு கூட வரவேற்பு
குறைந்துபோனது. தற்போது, அரசு என்ன முடிவு எடுக்குமோ என வாகன தயாரிப்பு நிறுவனங்கள்
நகம் கடித்தபடி காத்திருக்கின்றன. ”சீனா இத்துறையில் 60 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
மின் வாகனங்களில் பயன்படுத்தும் கன்வர்ட்டர், இன்வெர்ட்டர், டிசி மோட்டார்கள் என பல்வேறு
பாகங்களையும் தயாரிப்பதற்கான உற்பத்தி திறன்களை அந்நாடு கொண்டுள்ளது” என்கிறார் துறை
வல்லுநரான சூரஜ் கோஷ்.
மின்வாகனங்களை
வாங்குவதில் உள்ள கடினமான விஷயம், அதன் விலைதான். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐசிஇ
(Internal Combustion engine) பயன்படுத்துவதற்கு முக்கியக் காரணம், எரிபொருட்கள் குறைவான
விலையில் கிடைப்பதுதான். மத்திய அரசு பேட்டரியில் இயங்கும் மின் வாகனங்களுக்கு முதலில்
ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் அதேசமயம், ஹைபிரிட், பிளக் இன் ஆகிய பிற மின் வாகனத்
தொழில்நுட்பங்களை கண்டுகொள்ளவில்லை. இந்த வாகனங்கள் மக்களால் விரும்பப்பட இரு அம்சங்கள்
தேவை. ஒன்று, மானிய விலை, அடுத்து, கார்பன் வெளியீட்டிற்கான கட்டுப்பாடுகள்.
ஏறத்தாழ
மாருதி, டாடா, ஹோண்டா, எம்.ஜி மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் முழுமையான மின்சார, ஹைபிரிட்
ரக வாகனங்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. அரசு, மின் வாகனங்களுக்கு ஆதரவளித்து ஜிஎஸ்டியை
5 சதவீதமாக குறைத்தும் எதிர்பார்த்தது போன்ற அதிக முதலீடுகள் இத்துறையில் கிடைக்கவில்லை.
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு முன்னர் 2030க்குள் மின் வாகனங்களின் சந்தைப்பங்களிப்பு
17 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டிருந்தது. அரசு, மின்வாகனத்துறைக்கு உதவினால் மின்வாகனங்கள்
தயாரிப்பு வேகம் பிடிக்க வாய்ப்புள்ளது.
தகவல்:
ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக