மக்கள் சேவகனையும், பொட்டீக் டிசைனரையும் ஒன்றாக சேர்க்கும் கோதாவரி! - கோதாவரி
கோதாவரி ஆற்றில் நடக்கும் மென்மையான காதல் கதை |
கோதாவரி 2006
இயக்கம்: சேகர் கம்முலா
ஒளிப்பதிவு விஜய் சி குமார்
இசை கே.எம். ராதாகிருஷ்ணன்
கோதாவரி ஆற்றில் படகில் பயணம் செய்யும்போது சந்திக்கும் இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் உருவாகும் உறவுதான் கதை.
1973இல் வெளியான அந்தால ராமுடு படம்தான் கோதாவரிக்கு இன்ஸ்பிரேஷன் என இயக்குநர் சேகர் கம்முலா கூறியிருக்கிறார். |
அமெரிக்காவில் பொறியியல் படித்துவிட்டு இந்தியாவுக்கு வருகிறான் ஸ்ரீராம். அவனுக்கு ஒரு விஷயம்தான் மனதில் உள்ளது. மக்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிவதில்லை. இதனால் அரசியல் கட்சியில் சேரலாம் என்று நினைக்கிறான். ஆனால் அவர்கள் இவனிடம் பணம் கேட்கிறார்கள். செல்வாக்கை நிரூபிக்க சொல்கிறார்கள். குழப்பத்தில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் விரும்பும் மாமன் மகள் ராஜிக்கு வரன் பார்த்து முடிவு செய்கிறார்கள். இது ராமுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபற்றி தன் மாமாவிடம் கேட்கும்போது, அவனது கருத்தும், லட்சியமும் வேலைக்கு உதவாது என்பதோடு அவனிடம் பணமும் கிடையாது என்று கூறிவிடுகிறார்.
ராஜி சொந்தக்காரன் என்று பேசினாலும் ஸ்ரீராமை விட திருமணம் செய்யப்போகிறவர் தன்னை வசதியாக பார்த்துக்கொள்வார் என்று ராமிடம் சொல்லுகிறார்கள். அவர்களின் திருமணம் பத்ராச்சலத்தில் நடக்க முடிவாகிறது. அங்கு செல்ல ராஜமுந்திரி டு பத்ராச்சலத்திற்கு ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். கோதாவரி ஆற்றைக் கடக்க கோதாவரி என்ற படகில் செல்ல முடிவாகிறது. தன் காதலி யின் திருமணத்தை தான் ஏன் பார்க்கவேண்டும் என்று வரமாட்டேன் என்பதை அடம்பிடித்து வரச்சொல்கிறாள் ராஜி.
அதே படகில் திருமணத்திற்கு முன்பு பத்ராச்சலம் கோவிலுக்கு சென்று வருகிறேன் என்று பயணம் செய்கிறாள் சீதா. தனியே டிசைனர் கடை வைத்து நடத்தும் சீதாவின் கடை இன்னும் பெரிதாக புகழ்பெறவில்லை. கடையின் செலவுகள் பயமுறுத்துகிறது. இந்த நிலையில் அவளுக்கு திருமண வரன் பார்க்கிறார்கள். ஏதோ காரணங்கள் சொல்லி தட்டிப் போகிறது சில வரன்கள்.
சீதா பிடிவாதமான கோபக்காரி. அவள் கோதாவரி ஆற்றில் ஸ்ரீராம் பயணிக்கும் ஆற்றில் பயணிக்க வருகிறாள். நிறைய பைகளை சுமந்துகொண்டு படகில் ஏற தடுமாறும்போது, ஸ்ரீராம் அவளை அப்படியே தூக்கி சுமந்து கொண்டு வந்து இறக்கிவிடுகிறான். இது சீதாவுக்கு ஈகோவைத் தூண்ட எப்படி தன்னைக் கேட்காமல் தன்னை தொடலாம் என்று சண்டை போடுகிறாள். அந்த பயணம் முடிவதற்குள் அவர்கள் இருவருக்குள்ளும் உருவாகும் உறவுதான் படம்..
சுமந்த், கமாலினி முகர்ஜி, தனிகெலா பரணி என எல்லோருமே நிறைவாக நடித்திருக்கிறார்கள். பாடல்களும் பிரமாதமாக இருக்கிறது. முழுக்க நீர்நிலையில் நடைபெறும் கதை, படத்தின் பெரிய பலம். அங்கு படகில் பயணிக்கும் மனிதர்கள், அவர்களிடையேயான உறவு என நெகிழ்ச்சியான படமாக வந்திருக்கிறது.
ஸ்ரீராம், சீதா இடையிலான உரையாடல் மிக இயல்பாகவும் அழகாகவும் உள்ளது. மெல்ல இருவரின் உணர்வுகளும் ஒன்றாகும் இடம் பிரமாதம். எதையும் முடிவு செய்ய முடியாத முன்கோபகாரியான ராஜிக்காக ஸ்ரீராம் தனது குண இயல்புகளை மோசமானவனாக காட்டிக்கொள்ள எடுக்கும் முடிவு நெகிழ்ச்சியானது. படத்தில் சிறுவனுடன் வரும் அனிமேஷன் நாய்க்குட்டி அட்டகாசம்.
பரவச பயணம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக