முகேஷ் அம்பானியின் படைத்தளபதிகள் இவர்கள்தான் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெற்றி ரகசியம்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, தொட்டதெல்லாம் துலங்குகிற காலகட்டம் இது. பலரும் பெருந்தொற்று
காரணமாக தொழில் முடக்கமாகி சோற்றுக்கு கையேந்துகிற நிலையில், கடன்சுமையிலிருந்து விடுதலை
பெற்றுள்ளார் முகேஷ் அம்பானி. இவரது தம்பி அனில் கடன் வழக்குகளில் சிக்கிக்கொண்டு சிதைந்து
கொண்டிருக்க, முகேஷ் ஃப்யூச்சர் குழுமத்தை வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறார்.
ஏறத்தாழ அந்த விற்பனை பேரத்திலும் வெற்றிபெறுவார் என நம்புவோம். இவர் வெற்றிபெறுவதற்கு
பின்னிருந்து உதவுபவர்கள் இவர்கள்.
மனோஜ் மோடி
ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும்
ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் இவர்தான். முகேஷ் அம்பானி பொறிய்யல் கல்லூரியில் படித்தபோதிருந்தே
நண்பர். எனவே நட்பு இவரை தொழிலுக்கும் அழைத்து வந்திருக்கிறது. ஜாம்நகர் பெட்ரோகெமிக்கல்
நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். இன்று ரீடெய்ல் தொழிலில் ரிலையன்ஸ் முன்னணி
நிறுவனமாக இருக்கிறது என்றால் அதற்கு மனோஜ் மோடியின் திறமையான நிர்வாக முடிவுகளே காரணம்.
நிகில் மேஸ்வானி
முகேஷ் அம்பானியின் உறவினர்
மகன். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடிப்படையான வணிக ஆதாரம், பெட்ரோலியம் சுத்திகரிப்பு.
இவர், பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தில் லாபம் எகிறியதோடு அதன் மதிப்பையும்
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரிக்க செய்தார். 1988ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ்
நிறுவனத்தில் போர்டு நிறுவன உறுப்பினராக இருக்கிறார்.
ஹிடல் மேஸ்வானி
இவர் நிகில் மேஸ்வானியின்
தம்பி. 1995களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினரானார். தொண்ணூறுகளில் நிறுவனத்திற்கு
பணிபுரிய வந்துவிட்டார். எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்பான அனைத்து பணிகளுக்கும் இவர்தான்
பொறுப்பு.
அலோக் அகர்வால்
இவர்தான் ரிலையன்ஸின் பொருளாளர்.
உலகில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், விளைபொருளின் விற்பனை விலை ஆகியவற்றினால் விற்பனையும்
பாதிக்கப்படக்கூடாது. இந்த கருத்தில் உறுதியாக நின்று கம்பெனியை வளர்த்து வருகிறார்.
ஐஐஎம்மில் படித்த பட்டதாரி. பேங்க் ஆஃப் அமெரிக்காவில் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.
பிஎம்எஸ் பிரசாத்
இவர் திருபாய் அம்பானியின்
குழுவில் இருந்த ஆள். 1981ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிசெய்கிறார். எண்ணெய் மற்றும் எரிவாயு
வணிகத்தை முழுக்க மேற்பார்வை செய்கிறார். திட்டங்களை தீட்டுவது, அதனை பிறர் பாராட்டும்படி
செய்வது ஆகியவற்றில் வித்தகர்.
இந்தியாடுடே
கருத்துகள்
கருத்துரையிடுக