மன்னருக்காக உயிர் துறப்பது மக்களின் கடமையா? - நந்தாவிளக்கு - பாலகுமாரன்




ராஜராஜ சோழன் தமிழ்ப்பற்று ...




நந்தா விளக்கு

பாலகுமாரன்



சோழர்காலத்தில் வேளாளர் குடும்பம் நரிப்பள்ளம் எனுமிடத்தில் வசித்து வருகிறது. இவர்களின் வாழ்க்கை, சுக, துக்க வேதனைகளை சோழ அரசின் போர்ப்பின்னணியில் பாலகுமாரான் விவரித்துள்ளார். 

முக்கியமான கதாபாத்திரம் உமையாள். இவளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசன் வெற்றி பெற்று வந்தால், தங்களது தலையை வெட்டி இறப்பதாக சபதம் செய்கின்றனர். இப்படி அரசனுக்காக தன்னைத்தானே இழந்து குடும்பத்திற்கான நலன்களைப் பெற்றுக்கொள்கின்றனர். பிறரது நிலத்தில் விளையும் பொருட்களுக்கு வரி உண்டு. ஆனால் உமையாள் குடும்பத்திற்கு வரி கிடையாது. நாட்டுக்காக தன் உயிரை இழந்த குடும்பம் என்ற கனிவு அரசருக்கு இருக்கிறது. 

ஆனால் ஊரில் உள்ளவர்களுக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது. நமக்கு இப்படி நலன்களைப் பெறத் தெரியவில்லையே என்று. ஆனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண் இறந்துபோனதை அவர்கள் கருத்திலேயே கொள்ளவில்லை. அந்த ஊர்க்கார ர்களே உமையாளுக்கு பொன் தர்மன் என்ற வீரனை கல்யாணம் செய்து வைக்கின்றனர். அவன் குழந்தை பிறக்கும் நேரம், நான் அரசர் உயிரோடு வந்தால் எனது உயிரை அவருக்கு காணிக்கை ஆக்குவேன் என்று பிரதிக்ஞை செய்கிறான். இதனால் உமையாளுக்கும் பொன்தர்மனுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. உமையாளுக்கு தனது குடும்பத்தில் அரசருக்காக உயிரிழந்த சம்பவமே மறக்க முடியாத வேதனையைத் தருகிறது. இதில் தன்னுடைய கணவனே முட்டாள்தனமாக அரசருக்காக எனது உயிர் என்று சிவனிடம் பிராத்தனை செய்தால் அவள் மனது என்ன பாடுபடும்?

இதனால் ஏற்படும் பிரச்னையால் பொன்தர்மன், உமையாளை விட்டு விலகுகிறான். உமையாள் அரசர் கொடுத்த நிலத்தை வைத்து மகனை ஆளாக்குகிறாள். பின்னாளில் பொன்தர்மன் சமண மதத்தை தழுவுகிறான். அவன் அடுத்தமுறை ஊருக்கு வரும்போது அவனது மகன் ஓலைச்சுவடிகளை எழுதுபவனாக இருக்கிறான். நகருக்கு சென்று வாழ்கிறான். அவனது அம்மா உமையாள் நரிப்பள்ளத்தில் உள்ள விளைநிலங்களை கவனித்தபடி வாழ்கிறான். அங்கு அவளுக்கு இறுதிக்காலத்தில் நேரும் பிரச்னைகளைப் பற்றியது இறுதிப்பகுதி

பெரிய நாவலில் வரும் கிளைக்கதை போன்று எழுதப்பட்டிருக்கிறது. இதற்கான கல்வெட்டு ஆதாரங்களையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். 

போர், வாழ்க்கை, துறவு, போகம், வன்முறை, பேராசை, கள்ளம், இச்சை என பல்வேறு விஷயங்களை 123 பக்கங்களில் நீங்கள் வாசித்து புரிந்துகொள்ளமுடியும். எளிமையான வார்த்தைகளால் நன்றாக எழுதியுள்ளார் பாலகுமாரன்

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்