லிவ் இன் உறவிலிருந்து திருமணத்திற்கு டேக் ஆப் ஆகும்போது ஏற்படும் காமெடி களேபரங்கள்! - லூகா சுப்பி 2019
லிவ் இன் உறவும் அதன் பக்க விளைவுகளும்தான் கதை |
லூகா சுப்பி
இயக்கம்: லக்ஷ்மண் உடேகர்
எழுத்து: ரோகன் சங்கர்
ஒளிப்பதிவு: மிலிந்த் ஜோக்
பின்னணி: கீட்டன் சோதா
பாடல்கள் தனிஷ்க் பக்ஷி, அபிஜித் வகானி, வொய்ட் நாய்ஸ்
கல்யாணம் செய்துகொள்ளாமல் லிவ் இன் உறவில் சேர்ந்து வாழும்
இருவர், முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று தீர்மானிக்கும்போது அவர்களின் குடும்பத்தில்
நடக்கும் களேபரங்கள்தான் கதை.
ஒருவரையொருவர் எப்படி புரிந்துகொள்வது? |
மதுராவில் உள்ள லோக்கல் டிவியில் ஸ்டார் ரிப்போர்டராக இருக்கிறான்
வினோத் குட்டு குமார் சுக்லா. அவனுக்கு அனைத்து சர்வரோக பிரச்னைகளையும் தீர்த்து வைப்பவன்
கேமராமேன் அப்பாஸ் ஷேக். அங்கு, இன்டர்ன்ஷிப் செய்ய வருகிறாள் பழமைவாத அரசியல்வாதி
விஷ்ணுவின் மகள் ரேஷ்மி. அவளைப் பார்த்ததும் படத்தின் ரீமிக்ஸ் பாடல் பின்னணியில் ஒலிக்க,
பெப்சி பாட்டிலை திறந்தது போல குட்டுவுக்கு காதல் பொங்குகிறது. ரேஷ்மி உன்னை காதலிக்கிறேன்தான்
ஆனால் கல்யாணம் எல்லம் ஓவர். சேர்ந்து வாழ்வோம் பிடித்திருந்தால்தான் கல்யாணம் என லிவ்
இன் உறவை ரிப்பன் வெட்டி தொடங்குகிறார்கள். அதற்கேற்ப டிவியில் இதற்காகவே திட்டம் ஒன்றை
போட்டு குவாலியர் அனுப்பி வைக்க அங்கு இருபது நாட்கள் தங்கியிருந்து ஒருவரையொருவர்
புரிந்துகொள்ள நினைக்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் சும்மா இருப்பார்களா? கேபிள் கனெக்ஷன்
வீட்டுக்காரம்மா, இவர்கள் இருவரையும் பார்த்து கல்யாணம் செய்யாத குஜால் பேர்வழிகள்
என்று தெரிந்துகொண்டு அவர்களை விரட்ட முயல்கிறாள். இதை முன்னமே தெரிந்துகொண்ட குட்டு,
புகைப்படங்களை ரெடி செய்து வைக்கிறான். இந்த நேரத்தில் அவனது அண்ணன், ரேஷ்மியையும்
குட்டுவையும் ஒன்றாக பார்த்து ஷாக் ஆகிறான். இருவரையும் பின்தொடர்ந்து வந்து இருவருக்கும்
கல்யாணம் ஆனதாக புரிந்துகொண்டு மொத்த குடும்பத்தை அங்கு வரவழைக்கிறான்.
திருமணம் செய்துகொள்ள முயலும்போது ஏற்படும் குழப்படிகள் |
அவர்கள் இருவரையும் திருமணம் ஆனதாக நினைத்துக்கொண்டு பெண்
வீட்டாருக்கு சொல்ல விஷ்ணு, தன் மகளே தான் எதிர்க்கும் லிவ் இன் உறவை ஏற்றுக்கொண்டாளே
வேண்டாவெறுப்பாக ரிசப்ஷன் வைத்து அவளை புகுந்து வீட்டிற்கு அனுப்புகிறார்.
ரேஷ்மிக்கு, அப்போதுதான் அவளைச் சுற்றியுள்ள குடும்பத்தினரின்
அன்பு புரிகிறது. எனவே எப்படியாவது முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய் என
குட்டுவை நச்சரிக்கிறாள். இதற்காக குட்டு செய்யும் கல்யாண ஏற்பாடுகள் அவனது குடும்பத்தினருக்கு
தலைவலியாக மாறுகிறது. ரேஷ்மி, குட்டு இருவரும் முறைப்படி நெருப்பை சுற்றி வந்து கல்யாணம்
செய்துகொண்டார்களா இல்லையா என்பதுதான் இறுதிக்காட்சி.
படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
கார்த்திக் ஆர்யன், அபர்சக்தி குரானா, வினய் பதக் ஆகியோரின் நடிப்பு அசத்தல். அதனால்தான்
படம் 25 கோடியில் எடுக்கப்பட்டு 128 கோடி வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்தும்
ரீமிக்ஸ்தான். ஒரிஜினல் பாடல்கள் இல்லாமலே முழு ஆல்பமும் ஹிட்டான இந்திப்படம் இதுதான்
என்று சொல்லலாம்.
கலாட்டா கல்யாணம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக