ராப் இசையால் சமூக பிரச்னைகளைப் பேச முடியும்! - பரவும் ராப், ஹிப்-ஹாப் இசைக்குழுக்கள்
swadesi |
சமூகப் பிரச்னைகளை தீர்க்கும் இசை!
இன்று திரைப்படங்கள் சமூக பிரச்னைகள் பற்றி பேசுவது குறைந்துவிட்டது. அரிதாகவே சில முதுகெலும்பு உள்ள இயக்குநர்கள் பிரச்னைகளை சந்தித்து படங்களை வெளியிடுகிறார்கள். அவையும் பார்க்கப்படுவது மக்கள் கையில்தான் உள்ளது. ஆனால் தனியிசை பாடல்களாக இசைக்கலைஞர்கள் வெளியிடும் பாடல்கள் இணையம் வழியாக எளிதாக மக்களைச் சென்று சேர்கிறது. இதனை இந்தி திரைப்படம் கல்லி பாய் முதன்முதலில் தொடங்கி வைத்தது. இப்படத்தில் இசைக்கலைஞர் டிவைனின் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டது. மேல்நாட்டுப் பாடல்களை பார்த்தால் அழகான செட், ஃபெராரி காரில் வந்து தன்னை மறந்து போன காதலியைப் பற்றி பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்கள். இன்று அதற்கு மாற்றாக சமூக பிரச்னைகளைப் பற்றி பாடத்தொடங்கியிருக்கிறார்கள். தமிழில் அறிவு அப்படியொரு பணியை செய்துகொண்டிருக்கிறார்.
ahmer javed |
வட இந்தியாவில் தாராவி குடிசையில் பிறந்த வளர்ந்த ராப் பாடகர்கள் இனம், மத வேறுபாடுகள், ஏழைகளின் பிரச்னை, பாகுபாடு என்ற பல்வேறு விஷயங்களையும் அனைவரும் அறிய பாடி வருகிறார்கள். அஹ்மர் ஜாவேத், அர்ஷத் மாலிக் ஆகியோர் இவ்வகையில் இயங்கி வருகிறார்கள். ராப் பாடல்களின் தோற்றம் 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கியது. இது, ஆப்ரோ அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு வாழ்க்கை பற்றியே மையமாக கொண்டிருந்தது. இந்தியாவில் ராப் பாடல்கள் புகழ்பெறத்தொடங்கியது 2000இல்தான். இதன் வடிவம் மெல்ல மாற்றம் பெறத்தொடங்கியது அதன் பின்னான ஆண்டுகளில்தான்.
ராப் பாடல்கள் ஒருவரின் தினசரி வாழ்க்கையைத்தான் பேசுகிறது. அவரின் கஷ்ட நஷ்டங்கள், வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் வலி, விரக்தி ஆகியவற்றைத்தான் வெளிப்படுத்துகிறது என்கிறார் ஸ்வதேசி ராப் குழுவைச் சேர்ந்த யாஷ் மகிதா. இந்தக்குழு மும்பையில் இயங்கி வருகிறது. மராத்தி, இந்தி, வங்காளி, குஜராத்தி மொழியில் ராப் பாடல்களை எழுதி பாடுகின்றனர். 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக்குழு, செடாவ்னி என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர். இதில் ஜங்க், சாவ் டக்கா சாச் என்ற பாடல்கள் நாட்டிலுள்ள ஊழல், அரசியல் அமைப்புகளை பற்றி விமர்சித்து பேசி புகழ்பெற்றன. “அமெரிக்காவில் ஆப்ரோ அமெரிக்கர்கள் தங்கள் மீது வெள்ளையர்கள் நடத்தும் இனவெறித்தாக்குதலை சமாளிக்கவே ஹிப்ஹாப் இசைவடிவத்தை உருவாக்கினர்.” என்கிறார் சௌரப் அபயங்கர். இவர் ஸ்வதேசி குழுவைச் சேர்ந்தவர்தான்.
ahmer javed |
காஷ்மீரைப் பற்றிய இசை ஆல்பத்தை வெளியிட்டவர் அஹ்மர் ஜாவெத். இவர் காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகரில் பிறந்து டில்லியில் வாழ்ந்தது வருகிறார்.இவரின் லிட்டில் கிட் பிக் ட்ரீம் என்ற ஆல்பம் எட்டு பாடல்களைக் கொண்டது. இதற்குப்பிறகு இபி, இன்குலாம் என்ற ஆல்பங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். 25 வயதான இவர் தான் பிறந்து வளர்ந்த காஷ்மீரில் மக்கள் படும் துன்பங்கள், சிறப்பு சட்டங்களின் பிரச்னைகளை என அனைத்தையும் பாடல்களில் பாடியிருக்கிறார். “நான் பாடல்களை உருவாக்குவதன் காரணம், மொழி தெரியாதவர்கள் கூட இங்கு நடைபெறும் விஷயங்களை அறிந்துகொள்ளமுடியும் என்பதுதான்” என்கிறார் 25 வயதான அஹ்மர் ஜாவெத்.
ராப் இசையில் உள்ள இயல்பான தன்மைதான் பல இசைக்கலைஞர்களையும் ஈர்க்கிறது என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ராப் இசைக்கலைஞர் அர்சாக் மாலிக். இவர் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். தனது பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி பாடி வருகிறார்.
ராப், ஹிப் ஹாப் என்ற எந்தவடிவமாக இருந்தாலும் அதனை இந்திய மண்ணுக்கானதாக மாற்றினால் பாடல்களை மக்கள் எளிதாக ரசிக்கமுடியும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
முனிஃப் கான்
கருத்துகள்
கருத்துரையிடுக