பல்லவ வம்சத்தினரை வேரறுக்கத் துடிக்கும் மல்ல எதியின் கொலைவெறித்தாண்டவம்! - அத்திமலைத்தேவன் 3





அத்திமலைத் தேவன் - 3








அத்திமலைத்தேவன் 3

காலச்சக்கரம் நரசிம்மா

வானதி பதிப்பகம்

ப. 745

இந்த நாவலில் பல்லவர்கள் வம்சம் முடிவை நெருங்குவதற்கான அனைத்து விஷயங்களும் நடைபெறுகிறது. அவனிசிம்மன் வித்யுகா என்ற நடனபெண்மணியுடன் உறவு கொண்டு மகனை பெறுகிறான். ஆனால் அரியணை என்று வரும்போது பிரிய நாயகியின் மகன், மகேந்திர பல்லவனுக்கு வாய்ப்பு என்று நினைத்து வித்யுகாவை கொல்ல ஏற்பாடு செய்கிறான். இதனால் கோபம் கொல்லும் அவன் மகன் குணபரன், பல்லவ வம்சத்தை பழிவாங்க சபதம் செய்கிறான். இதைத் தாண்டி அவனை ஆதரிக்கும் குடும்பத்திற்கும், அவன் தங்கையாக நினைத்த பெண்ணுக்கும் அரச குடும்பம் இழைக்கும் அநீதி அவன் ரத்தத்தை கொந்தளிக்க வைக்கிறது. இதனாலும் பிரக்ஞதாரா செய்த சில நுட்பமான தந்திரங்களாலும் பல்லவ வம்சத்தில் ஏராளமான மரணங்கள் நடக்கின்றன.

இந்த நூலில் சிங்க மல்லன் எப்படி தேவ உடும்பரத்தை பெறுகிறான் என்பதை காலச்சக்கரம் நரசிம்மா அழகாக விவரித்துள்ளார். அத்திமலையான் கோவிலில் நவரத்ன பல்லவி தற்கொலை செய்துகொண்டுள்ள இடத்திலிருந்து, புதிர்கள் விடுபடத் தொடங்குகின்றன. ஜெயவர்மன் ஒலைச்சுவடியை கொடுத்துச் சென்ற அஞ்சில் அணங்கு குடும்பத்திலிருந்து வந்த பெருந்தேவியும், ராஜவர்மன் மனைவியுமான ராஜஸ்ரீயும்தான் பல்வேறு புதிர்களை விடுவிக்கின்றனர்.  இந்த பாகத்தில் அவர்கள்தான் கதையை முக்கியமான இடங்களுக்கு நடத்திச்செல்கின்றனர்.

இதில் முக்கியமான கதாபாத்திரங்களின் திருப்பங்கள் வருகின்றன. அவை இறையா என்ற புலிகேசி மன்னனின் எழுச்சி, மல்ல எதி என்ற மகேந்திர மல்லனின் முக்கிய எதிரியின் விஸ்வரூபம் அதிர செய்கிறது. புலிகேசி, மகேந்திரன் இவர்களை காதலால் அலையவைக்கிறாள் சைந்தவை இளவரசி அவந்திகா. இதனால் நடந்த முக்கியமான கலாபூர்வ நன்மை வாதாபி சிற்பங்களும், மாமல்லபுர சிற்பங்களும்தான்.

அரச மகுடத்திற்கும் அரியணைக்கும் ஆசைப்படும் அரசு உறவுகளின் சதிகளும் நாவலில் ஏராளமான உள்ளன. அஸ்வத்தாமாவின் இரண்டு மகன்களாக பல்லவர்களும், காம்போஜர்களும் இருந்தாலும் அரசாட்சி என்று வரும்போது, பெரும் பிரச்னைகள் ஏற்படுகிறது. இறைவழிபாடு, நிலப்பரப்பு ரீதியான வேறுபாடு என்ற நிறைய விஷயங்கள் அடுத்தடுத்த பாகங்களில் ஏற்படவிருப்பதை சில அத்தியாயங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒன்பது நவரத்தினங்கள் எனும் புதிர்களை விடுவித்து தேவ உடும்பர அத்திநாதனை சிங்கமல்லன் பெறுகிறான். ஆனால் அவனுக்கு வரும் கனவு அனைத்தையும் குலைத்து போடுகிறது. இதன் காரணமாக தேவராஜனாக வீற்றிருக்கும் வேண்டிய அத்திமலைத்தேவன் நீருக்குள் வைக்கப்படுகிறான். ஆனாலும் அங்கிருந்தும் அவன் காணாமல் போகிறான். அதிலும் பல்லவ குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த அநீதியான ஒரே செயல்தான், நிம்மதியில்லாமல் இருக்க வைக்கிறது. மேலும் பல்லவம் நிலைக்காது என்பதைச் சொல்வதைப் போல வெள்ளம் பெருகுகிறது. தான் செய்த தவறை மன்னர் உணர்ந்தாலும் விதி வேறுவிதமாக இருக்கிறது. நாவலில் ஏராளமானோர் தேவராஜனை கண்டுபிடிப்பதாக சொல்லுவதும், கண்டுபிடிக்க முடியாமல் இறப்பதும், அடுத்த தலைமுறைக்கு லட்சியத்தை கடத்துவதும் நடைபெறுகிறது.

ஜெயவர்மன் காலகட்ட கருப்பு ஆடு யார் என்பதை சிங்கமல்லன் தெரிந்துகொள்கிறான். ஆனால் தன்னை வெளிப்படுத்திய அந்த துரோகியை யார் என்று அறிந்தும் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை. அந்தளவு உறவுகளுக்குள் நெருக்கமாகி நிற்கிறான் அந்த துரோகி.

ஆனாலும் முக்கியமான விஷயம் அவனுக்கு கிடைக்கிறது. அது சித்ர ஹஸ்த நாளில் அத்திமலையானுக்கு சாற்றப்படும் ஸ்ரீதளமணிதான். அதனை இப்போது வடிவத்தை மாற்றி உக்ரோதயமாக மாற்றி இருக்கின்றனர்.

ஏறத்தாழ இறைவனுக்கு சாற்றி வழிபடும் இந்த அணிகலன்தான் பல்வேறு மரணங்களுக்கு காரணமாக இருக்கப்போகிறது. பல்லவ வம்சத்தை முடித்து வைக்கப்போவதும் கூட இந்த அணிகலன்தான் எப்படி என்பதை நரசிம்மா அடுத்த பாகத்தில் விவரிப்பார்.

நூல் முழுக்க தான் எழுதும் சம்பவங்கள், வரும் இடங்கள், தற்போதைய அதன் பெயர், கோவில்களின் பெயர்கள், இடங்கள் என ஏராளமான தகவல்களை கொடுத்துள்ளார் ஆசிரியர். படிக்க சுவாரசியமான வரலாற்று புதினம் இது.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்