இந்தியாவில் மொபைல் போன் சேவையை மாற்றியமைத்த சாதனையாளர்கள்! மொபைல்சேவை@25



செல்போன் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன




தகவல்தொடர்பை வலுப்படுத்திய தலைவர்கள்!

இந்தியாவில் மொபைல்போன்கள் 1994இல் அறிமுகமாயின. அன்று அதனை வாங்க அதிக செலவு செய்யவேண்டியிருந்தது. மேலும் ஒரு நிமிடம் மொபைலில் பேச ரூ.18 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, பணக்காரர்களுக்கு மட்டுமேயான வசதியாக மொபைல் போன்ற கருதப்பட்டது. லேண்ட்லைன் எனும் வீட்டுபோன் கூட ஊரில் வசதியானவர்கள் வீட்டில் மட்டும்தான் இருக்கும். இதில் பேசும் கட்டணம் தவிர்த்து மாத வாடகையையும் சேர்த்து கட்டவேண்டும்.

இதனால் பலரும் இந்த இணைப்பை துண்டித்தனர். பின்னாளில் ரிலையன்ஸ் குறைந்த விலைக்கு மொபைல்போன்களை இந்தியா முழுக்க விற்று சாதனை செய்தது. வயர்லெஸ் முறையில் செயல்படும் போன்களையும் ரிலையன்ஸ்தான் ஜனரஞ்சகப்படுத்தியது. ஆனாலும் சந்தையில் தாக்குப்பிடிக்கமுடியாமல் தோற்றுப்போனது. வெற்றி தோல்வி தாண்டி மொபைல்போன், சேவை நிறுவனங்களின் கட்டணம், புதிய தொழில்நுட்பங்கள் நம் கைக்கு வர ஏராளமான அதிகாரிகள், அமைச்சர்கள் உழைத்துள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போமா?

சுக்ராம்

பி.வி.நரசிம்மராவின் அமைச்சரவையில் தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர். பின்னாளில் லஞ்சம் தொடர்பான வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டார். காங்கிரஸ் கட்சியே பேச மறுக்கும் தலைவரான பி.வி. நரசிம்மராவின் ஆட்சியில்தான் தேசிய தொலைத்தொடர்பு கொள்கை வகுக்கப்பட்டது. இதன்மூலம், வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்கு வரும்படி செய்ய திட்டமிட்டது. அந்த பணிகளை நிர்வாகம் செய்தவர் சுக்ராம்தான். இந்தப்பணியில் இத்துறையின் செயலரான பி.விட்டல் முக்கியமானவர். அவர்தான் கொள்கைகளை முழுமையான வடிவத்திற்கு கொண்டு வந்தார். அமைச்சர் சுக்ராம்தான் அந்நிய முதலீடுகளின் அளவை 49 சதவீதமாக உயர்த்தினார். தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட வழிவகுத்தார்.

 

 

சொலி சோரப்ஜி

இந்தியாவில் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உரிமத்தொகை, லாபம் ஆகியவற்றை தீர்க்கமாக வகுத்தார். லைசென்ஸ் வழங்குவதாக இருந்த அமைப்பை மாற்றி சேவை நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாயில் அரசுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்குமாறு மாற்றியது இவரது முக்கியமான சீர்திருத்தம். அக்காலகட்டத்தில் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார்.

எஸ்.எஸ். சோதி

அரசு நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் எளிதாக தனியார் நிறுவனங்களுக்கு சேவையை மாற்றிக்கொள்ளும் முறையை இவர் உருவாக்கினார். ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்தபோது சோதி, இந்த மாற்றங்களை உருவாக்கினார். ட்ராய் அமைப்பு சுதந்திரமாக செயல்படுவதற்கான பணிகளை செய்தவர்களில் சோதி முக்கியமானவர்.

பிரமோத் மகாஜன்

அமைச்சராக இவரது பணி பெரிதாக ஒன்றுமில்லை. ஜிஎஸ்எம் சேவையில் ரிலையன்ஸ் இன்போகாம் என்ற நிறுவனத்தை போட்டிக்கு புதிதாக உள்ளே கொண்டு வந்தார். இதனால் பிற நிறுவனங்களுக்கும் இவரது அமைச்சகத்திற்கும் கடும் கசப்பும், மோதலும் ஏற்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பிரமோத் ஒதுக்கிய அலைவரிசை பிரச்னை உச்சநீதிமன்றம் வரை சென்றது. இதனால் அனைத்து பத்திரிகைகளிலும் பிரமோத்தும், அவரது செயலருமான ஷியாமல் கோஷ் பெயரும் வெளித்தெரிந்து சிக்கலானது.

அருண் ஷோரி

இவர் வயர்லெஸ் போன்கள் சார்ந்த பிரச்னையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் பார்தி ஏர்டெல்லிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்த பெருமை கொண்டவர். ஆனால் இவர் ரிலையன்ஸ் மற்றும் டாடாவிற்கு சாதகமாக செயல்பட்டதாக ஊடகங்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.

 

தயாநிதி மாறன்

தமிழ்நாட்டிலிருந்து திமுக கட்சி மூலம் டில்லிக்கு சென்று அங்கு சாதனைகள் புரிந்தவர். இவரது செயல்பாடுகளைப் பற்றி அறியும் முன்னர் பலரும் அறிந்த விஷயம், தயாநிதிக்கு இந்தி மொழி தெரியும் என்பதுதான். இவர் பல்வேறு தொலைத்தொடர்பு வட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களை தொடங்க அனுமதி வழங்கினார். பல்வேறு நிறுவனங்களின் ரோமிங் கட்டணங்களை குறைத்தார். உலக அளவில் முக்கியமான நிறுவனங்களான ஏடி அண்ட் டி, வெரிசோன், டெல்ஸ்ட்ரா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் வந்து சேவையை வழங்க இவரே வழிவகுத்தார்.

அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்தினார். இதெல்லாம் செய்தார்தான் என்றாலும் கூடுதலாக கற்ற வித்தையை மிரட்டலுக்கு இறக்கியதுதான் இவரது புகழை பாதாளத்தில் சரித்தது. ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் என்ற நிறுவனத்திற்கு விற்க வற்புறுத்தினார் தயாநிதி. மேக்சிஸ் நிறுவனரான அனந்த கிருஷ்ணன் இவரது நண்பர் என்ற செய்தி வெளியாக, இந்தியில் பேசி சமாளித்தும் கூட கறையை, களங்கத்தை மறைக்க முடியவில்லை.

சுனில் பார்தி மிட்டல்

ஏர்டெல் ஓனர் என்று சொன்னால் உலகமே அறியும். இப்போது ப்ளூஜீன்ஸ் என்ற பெயரில் வீடியோ கான்பரன்ஸ் வசதியை உலகிற்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். தன் பயணத்தை பீட்டில் போன்களை பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்று தொழில் செய்து வந்தார். சுபயோக சுபதினத்தில் சம்பாதித பணத்தை தொலைத்தொடர்பு சேவையில் முதலீடு செய்தார். ஏர்டெல் நிறுவனம் உருவானது. ஐடியா, வோடபோன், டாடா டோக்கோமா, ஜியோ என இவர் சந்திக்காத நிறுவனங்களே கிடையாது. இன்று சந்தையின் நம்பர் 1 நிறுவனமான ஜியோவுடன் மோதிக்கொண்டிருக்கிறார்.

முகேஷ் அம்பானி

சிடிஎம்ஏ போன் தொழிலில் படுதோல்வி அடைந்தார். பின்னர் தொடங்கிய ஜியோவில் இணைய திட்டங்களை முன்னிலைப்படுத்தி இன்று வென்றுவிட்டார். பொதுத்துறை நிறுவனங்களின் டவர்களை அடித்து பிடிங்கி மக்களுக்கு 4ஜி தர சேவையைத் தந்துகொண்டிருக்கிறார்.அடுத்து 5 ஜி நோக்கி பாய்ந்துகொண்டிருக்கிறார். குறைந்தவிலை, அதிக டேட்டா என இந்தியர்களை பேராசைக்காரர்களாக மாற்றி இணையத்தில் இணைந்திருக்க வைத்த பெருமை அம்பானியையே சேரும். இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, சில்லறை விற்பனை கடைகள், சிறப்பங்காடிகள், பெட்ரோலிய நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் என இவர் வளைத்து போடாத நிறுவனங்களே கிடையாது. இன்றைய பொருளாதார மந்த நிலையிலும் கடன்களே இல்லாமல் வளர்ச்சியில் சென்றுகொண்டிருக்கும் ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தான்.

நன்றி பிஸினஸ் ஸ்டாண்டர்டு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்