அறிவியல் அமைப்புகளில் உள்ள பிராமணர்களுக்கிடையே ஏற்படும் போட்டி! - பொறுப்புமிக்க மனிதர்கள்
மெரினா புக்ஸ் |
பொறுப்புமிக்க மனிதர்கள்
மனு ஜோசப்
தமிழில்: க.பூரணச்சந்திரன்
எதிர்வெளியீடு
இந்த நாவல் சாகித்திய அகாதெமி
பரிசு பெற்ற நாவல். விருது என்ற விஷயம் இல்லாமலே நாவல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
முழுக்க அவல நகைச்சுவை சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.
அறிவியல் மையம் ஒன்றில்
பிராமண ஆராய்ச்சியாளர்களுக்குள் நடக்கும் நீயா? நானா போட்டிதான் கதை. அரவிந்த் ஆச்சார்யா
இயற்பியல் ஆய்வு மையத் தலைவர். அவர் பெருவெடிப்பு என்ற கொள்கையை மறுப்பவர். இவரது தலைமையின்
கீழ் மேம்பட்ட பிற நாடுகள் செய்யும் அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை. அத்தனையையும்
ஆச்சார்யா தேவையற்ற செலவு, வீண் ஆராய்ச்சி என்று தடுக்கிறார். அவரது கீழுள்ள நம்பூதிரி
அவர் சார்ந்த ஆதரவாளர்கள் அனைவரும் அரவிந்த் ஆச்சார்யாவை எதிர்க்கின்றனர். ஆனால் மத்திய
அமைச்சர் அரவிந்த் ஆச்சார்யாவை நம்புகிறார். ஆனாலும் ஆச்சார்யாவுக்கு சரிவு பெண்ணின்
மூலம் தொடங்குகிறது. மனைவி ஊருக்கும் சென்றிருக்கும் போது, ஆய்வு மையத்தில் உயிரியல்
தொடர்பான ஆராய்ச்சி செய்யும் இளம்பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார். பின்னாளில் குற்றவுணர்ச்ச
கொண்டு மனைவியிடம் அந்த விவரங்களை சொல்லிவிடுகிறார். அதேநேரம், தனது காதலையும் காதலியையும்
கைவிடுகிறார். இதனால் கோபமுறும் காதலி, அவர் நேசித்த அறிவியல் ஆய்வு பொய், காதல் காரணமாக
ஆய்வில் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டு என்பதாக போலியாக உருவாக்கிக் காட்டினேன் என்று
கூறிவிட்டு ராஜினாமா செய்துவிடுகிறாள். ஆச்சார்யாவின் காதல் கதையும், அவர் அந்த பெண்ணிடம்
கொண்டிருந்த உடல் உறவு விவகாரங்கள் மத்திய அமைச்சரவை வரை தெரியவர அவர் தற்காலிக பணிவிலக்கம்
செய்யப்படுகிறார். இறுதியில் அவர் வாழ்க்கை என்னவானது? என்பதுதான் இறுதிப்பகுதி..
மேற்சொன்னது நூலின் முக்கியமான
கதை. அடுத்த கதை, அய்யன் மணி என்ற தாழ்த்தப்பட்ட ஆச்சார்யாவின் உதவியாளர் தனது காது
கேட்காத மகனை எப்படி புத்திசாலி என ஊருக்கு காட்டுகிறார் என்பதை நுட்பமாக சொல்லியிருக்கிறார்.
இவரது பார்வையில்தான் உலகம் முழுக்க எப்படி இருக்கிறது என்று சொல்லும்போது நம்மை நாமே
உணர்ந்து சிரிக்கிறோம். இப்படி புன்னகையுடன் படிப்பது அய்யன் மணியின் பார்வையில் நடைபெறுகிறது.
ஏழைமக்களுக்கு அரசு கட்டிக்கொடுத்த குடியிருப்பில் அய்யன் மணி தனது மனைவியுடன் வசிக்கிறான்.
பள்ளியிலும் சரி வேறு இடங்களிலும்
சரி தனது மகனை பிறர் புத்திசாலியாக பார்க்கவேண்டும் என்று நினைக்கிறார் அய்யன்மணி.
இதற்காக இவர் செய்யும் நாடகம் இறுதியில் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ஏற்படுத்தும்
விளைவுகளும் இறுதிப்பகுதியில் முக்கியமானது.
நூல் முழுக்க ஏராளமான இயற்பியல்
தகவல்கள் சொல்லப்படுகின்றன. அறிவியல் சார்ந்த நாவலில் காதல், நெகிழ்ச்சி, சமூகம், தலித்தியம்
என பல்வேறு விஷயங்கள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு நிறுவனங்களின் பணிபுரியும்
தலித்துகளை அங்குள்ள உயரதிகாரிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் சிறப்பாக எழுதியிருக்கிறார்
ஆசிரியர்.
இந்தியாவில் அறிவியல் அமைப்புகள்
எப்படி செயல்படுகின்றன, அங்கு பணிபுரியும் உயரதிகாரிகள் சாதி சார்ந்து எப்படி பிறரைப்
பார்க்கிறார்கள் என்பதையும் சிறப்பாக காட்டுகிற நாவல் இது
பொறுப்பாக படிக்கவேண்டிய
நூல்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக