பல்லவ நந்தியின் கழுத்து அறுக்கப்பட்டது - அத்திமலைத்தேவனின் திருவிளையாடல் - அத்திமலைத்தேவன் 4





அத்திமலைத் தேவன் பாகம் 4 ...
அத்திமலைத்தேவன் 4 - உடுமலை



அத்திமலைத்தேவன் 4

காலச்சக்கரம் நரசிம்மா

வானதி பதிப்பகம்

ப.460

இந்த பாகத்தில் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு மன்னர் தேடி அலைந்து நந்திவர்மன் என்பவனை காம்போஜ நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். இவனை வேட்டையாட சாளுக்கியர்கள், பாண்டியர்கள் என அனைவரும் ஆட்களுடன் காத்திருக்க இவர்களை பல்லவ நாட்டு விசுவாசிகள் காப்பாற்றுகின்றனர். அரச பரம்பரை என்றாலும் யோசிப்பது, செயலாற்றுவது ஆகியவற்றில் நந்திவர்மன் சாமர்த்தியசாலி அல்ல. இதனை உணர்ந்த குந்தள நாட்டு அரசன் வயிரமேகன் மகன் உதயச்சந்திரன், பல்லவ அரசனுக்கு அரியணை கிடைக்க உதவுகிறான்.

ஒரு கட்டத்தில் பல்லவ நாட்டு தளபதி உதயச்சந்திரன் மக்களிடம் பெரும் புகழ் பெற, நந்திவர்மனுக்கு பொறாமைத்தீ வயிற்றில் மூள்கிறது. ஏறத்தாழ பல்வாளத் தேவனுக்கும் பாகுபலிக்குமான போர் போலவேதான். பல்லவ மன்னனைச் சுற்றியுள்ள காம்போஜ நாட்டுக்குழு அவனை உதயச்சந்திரனை விலக்கி வைத்து அல்லது கொன்றுவிட யோசனை கூறுகிறது. ஆனால் பல்லவ மன்னர் அப்படி செய்தால் மக்கள் புரட்சி செய்து அரசை கலைத்துவிடுவார்கள் என்பதால் சாதுரியமாக தளபதி பதவியிலிருந்து இறக்கி நாடு கடத்துகிறார்கள்.

இந்த நேரத்தில் அத்திராஜனின் சிலை இறந்துபோன நவரத்ன பல்லவியின் பிரவாள மாளிகை புகைபோக்கியில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அதனை முன்பே மீட்க மல்ல எதி கொடுத்த புதிர்களை சிம்ம வல்லன் விடுவித்திருந்தால் போதும். ஆனால் அவன் உயிர்பிழைக்கும் அவசரத்தில் அதனை கவனிக்காமல் விட, தேவ உடும்பர தேவன் பல்லவ அரசர்களின் கையில் சிக்காமல் கபடி விளையாடிக்கொண்டே இருக்கிறான். தந்தி வர்மன் காலத்திலேயே பல்லவம் சுருங்கிவிடுகிறது. இந்த மன்னன் காலத்திலேயே பல்லவத்தின் அழிவுக்கான அத்தனை அறிகுறிகளும் தோன்றிவிடுகின்றன. முக்கியமான ஆறான பாலாறு வறண்டுவிடுகிறது. உக்ரோதயத்தை உதயச்சந்திரன் மீட்டு வந்தாலும் கூட அதனை அணிவிக்க தேவராஜனின் பிரதிமை கிடைக்கவில்லை.

இந்நிலையில் கம்பவர்மன், நிருபதுங்கன் என இருவருக்குமான நாடாக தென்பல்லவம், வடபல்லவம் என பல்லவ நாடு இரண்டாக கிழிபடுகிறது. கம்பவர்மனின் மகன் அபராஜிதன் தனது பெரியப்பாவை கொன்று பல்லவ நாட்டை ஒன்றாக்கி அரசராக நினைக்கிறான். இதற்கு ஆதித்த சோழன் உதவுகிறான்.  ஆதித்த சோழன் வேறு யாருமல்ல, உதயசந்திரனின் மகன் ஜெயாதித்தனின் பெயரன்தான். ஆதித்தன் உக்ரோதயத்தை அணிந்து பார்த்து புத்தி பேதலிக்கிறான். அப்போது நடக்கும் தடுமாற்றத்தால் தனது நண்பன் அபராஜிதனை படுக்கையறையில் வெட்டிக்கொள்கிறான். உடனே சாதுரியமாக செயல்பட்டு பல்லவ நாட்டின் காஞ்சி நகரையும் படையுடன் கைப்பற்றுகிறான் சோழன். அவனால் கொல்லப்படுவதற்கு முன்னர் அபராஜிதனின் மனைவி தனது பெண் குழந்தையோடு தப்பிச்செல்கிறாள். இவளது கையில்தான் பிரவாளி மாளிகையில் உள்ள அத்திமலைத்தேவனின் பிரதிமை உள்ள ரகசியச்சுவடி கிடைக்கிறது. மல்ல எதியின் சமையல்கார கிழவி பதுக்கி வைத்த சுமைதாங்கி கல்லிடமிருந்து சுவடி கிடைக்கிறது.

நாவல் முழுக்க பல்லவத்தின் வீழ்ச்சி பற்றியே பேசுகிறது. ஏறத்தாழ பின்னர் வந்த சோழ அரசு, பல்லவ செல்வங்களை கைப்பற்றி தன்னை வளமாக்கி கொண்டதை  ஆசிரியர் மிக பிரமாதமாக விளக்கியுள்ளார். பல்லவர்களை போல சோழர்களுக்கு விரிவான விளக்கங்கள் இந்த பாகத்தில் இல்லை. அடுத்த பாகத்தில் சோழ அரசர்களைப் பற்றி நரசிம்மா நிறைய விஷயங்களை சொல்ல நினைத்திருக்கலாம்.

தமிழகத்திலுள்ள பல்வேறு எழுத்தாளர்கள் சோழர்கள், பாண்டியர்கள் பற்றி எழுதியிருக்கலாம். ஆனால் பல்லவ சாம்ராஜ்யம் பற்றி நரசிம்மா போல இந்தளவு விளக்கமாகவும், சற்று புனைவு கலந்து சுவாரசியமாக வந்துள்ள நூல்கள் குறைவு.

 நூல் முழுக்க ஏராளமான கல்வெட்டு செய்திகள், தனக்கு சந்தேகமான சம்பவங்கள் பற்றியும் கூறியிருக்கிறார். 

பல்லவ நந்தி வீழ்ந்த கதையின் கடைசி அத்தியாயம்

கோமாளிமேடை  டீம்


கருத்துகள்