மூளை குறைபாடு கொண்டவனை பலிகடாவாக்கும் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம்! - மிராக்கிள் இன் செல் நெம்பர் 7









Amazon.com: Watch Miracle In Cell No. 7 | Prime Video









மிராக்கிள் இன் செல் நெம்பர் 7 கொரியா

இயக்கம்  லீ ஹ்வான் கியூங்

கதை -Lee Hwan-kyung
Yu Young-a
Kim Hwang-sung
Kim Young-seok


ஒளிப்பதிவு Lee Dong-jun

இசை Kang Seung-gi


அண்மையில் இதுபோன்ற நெகிழ்ச்சியான படங்களை பார்க்கவில்லை என்று நினைக்கும்படியான படம் இது. 

மூளை குறைபாடு கொண்ட அப்பாவுக்கும், அவனது மகளுக்குமான உணர்ச்சிகரமான நெகிழ்ச்சி தரும் உறவுதான் படத்தின் கதை. 

வணிக வளாகத்தில் கார்களை பார்க்கிங் செய்யும் இடத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறான் லீ யோங். தன் மகள் யெ செங்கிற்கு பள்ளிக்குச்செல்ல அவள் விரும்பும் பை ஒன்றை வாங்கித்தர காசு சேர்த்து வருகிறான். அப்போது கடையில் லீ பார்த்து வைத்த பையை, போலீஸ் கமிஷனரின் மகள் வாங்கி விட, அந்தப்பை என் மகளுக்கு வாங்க நினைத்திருந்தேன் என லீ கடையில் வாதிட ரசாபாசமாகிறது சூழ்நிலை. கமிஷனர் லீயின் நிலைமை புரியாமல் அவனை கடுமையாக தாக்குகிறார். 

பின்னர் ஒருநாள் அவன் தன் மகளுக்கு பள்ளிக்கான பை வாங்க சேர்த்த காசை எண்ணிக்கொண்டிருக்கிறான் லீ. அப்போது அங்கு வரும் கமிஷனரின் மகள், அவனை பள்ளிக்கான பொருட்கள் விற்கும் கடைக்கு அழைத்துச் செல்கிறாள். ஆனால் போகும் வழியில் திடீரென அவள் கால் வழுக்கி விழுந்து இறக்கிறாள். லீக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனது நிறுவனத்தின் சொல்லிக்கொடுத்த சிபிஆர் டெக்னிக்கை பயன்படுத்தி அச்சிறுமியை எழ வைக்க முயல்கிறான். ஆனால் அதை பார்க்கும் பெண் ஒருவர் அவன் அச்சிறுமியை வல்லுறவு செய்கிறான் என தவறாக புரிந்துகொண்டு போலீசை அழைக்கிறான். 

காவல்துறை எப்போதும் ஆள் பார்த்துதானே வேலையை செய்யும்.? கமிஷனரின் பிள்ளை என்பதால் லீயை திட்டமிட்டு  குற்றவாளியாக்கும் வேலையை செய்கிறது. இதனால் அப்பாவியானா லீ, சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அவன் உண்மையை நிரூபித்து வெளியில் வந்தானா? காவல்த்துறையினர் உண்மையை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்களா என்பதுதான் படம். 

அதிகாரவர்க்கம் எப்படி அப்பாவிகளை எந்த குற்றவுணர்வுமின்றி தண்டிக்கிறது என்பதை நேர்த்தியாக காட்சிபடுத்தி இருக்கிறார்கள்.

ஆஹா

படத்தில் அப்பா, மகளாக நடித்த  ரியு சியுங் ரையோன், கல் சோ வோன் ஆகிய இருவரையும் பார்வையாளர்களால் மறக்கவே முடியாது. தான் பலிவாங்கப்பட்டோம் என்பதை மரணதண்டனை அளிக்கும் போது உணர்ந்து அலறும் காட்சியில் கண்கலங்காதவர்கள் குறைவு., சிறை வார்டனை நெருப்பு பற்றி கவலைப்படாமல் உள்ளே புகுந்து காப்பாற்றுவது, தன் அறையில் உள்ளவரை கத்தியால் குத்தவருபவரை தடுத்து தான் காயம்படுவது என வெகுளித்தனமாக அன்பை பிறருக்கு கொடுத்து  நம் கண்களில் கண்ணீர் பெருக்குகிறார் ரியு சியுங் ரையோன். 

மூளை குறைபாடு கொண்டவன் அனைவரின் மீதும் அன்பாக இருக்கிறான். ஆனால் அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்குபவர்கள் ஏன் மூர்க்கமாக , வன்மமாக நடந்துகொள்கிறார்கள் என்ற கேள்விதான் சிறை வார்டன் முதல் காவல்துறை கமிஷனர் வரை எழுகிறது. 

தன் மகள் இறந்துவிட்டாள் என்பதை மட்டுமே கவனிக்கும் கமிஷனர் அந்த இழப்பிற்கான வலியை இன்னொருவர் மீது சுமத்தி அதனை மறக்க நினைக்கிறார். அதில் பலியாடாக மாட்டுபவன்தான் லீ. அதனால்தான் வழக்கு விசாரணைக்கு வரும்போது, குற்றத்தை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால் உனது மகளை கொல்லுவேன் என மிரட்டி அடித்து சித்திரவதை செய்கிறார். தன் மகளின் வாழ்க்கையை பாதுகாக்க தன்னை மரணதண்டனைக்கு உட்படுத்திக்கொள்கிறான் லீ.

இந்த தண்டனை அறிவிக்கப்பட்டதும் கமிஷனரின் சொந்தங்கள், உறவுகள் மகிழ்ச்சியில் குதிப்பது பிறரை வதைப்பதில் மனித மனங்கள் எவ்வளவு இன்பம் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிற காட்சி. 

இறுதிக்காட்சியில் யெசங், தன் தந்தை குற்றவாளி இல்லை என நிரூபித்து கண்ணீர் சிந்துகிறாள். இந்த தீர்ப்பு மூலம் அவளது தந்தை உயிரோடு கிடைக்கப்போவதில்லை. ஆனால் ஒன்பது வயது சிறுமியை வல்லுறவு செய்து கொன்றவன் என்ற அவப்பெயர் அழிகிறதே? இதுதான் அவள் தன் தந்தைக்கு செய்யும் உதவி.  அவளது வாழ்க்கைக்காக தன்னையே தியாகம் செய்த ஒருவரான அவளது தந்தை நெகிழ வைக்கும் உருவாக மாறுகிறார்.. லீ பற்றிய உண்மை தெரிந்ததும் அவனை மெல்ல நேசிக்கத் தொடங்குகிறார் சிறை அதிகாரி,ஜாங் மின் வான்(ஜாங் யங்)  அவரே அவனது மகள் யெசங்கை தனது மகளாக வளர்க்கிறார். வழக்கு தொடர ஆவணங்களை சேகரித்து தருகிறார். அடக்கமான நடிப்பு என்றாலும் ஆழமாக நடித்திருக்கிறார். 

இப்படத்தில் ஐயையோ என்று சொல்ல ஏதுமில்லை. 



உணர்ச்சிகரான உண்மையைச் சொல்லுகிற படம். 

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்