நேர்காணல்: "சிறுவர்கள் மீது அரசு நிகழ்த்துவது உளவியல் அநீதி"
முத்தாரம் நேர்காணல்
"சிறுவர்கள் மீது அரசு நிகழ்த்துவது
உளவியல் அநீதி"
லெடெடியா பேடர், ஆராய்ச்சியாளர்.
தமிழில்: ச.அன்பரசு
சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான அல்-ஷபாப், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கட்டாயப்படுத்தி
தன் படையில் இணைத்து வருகிறது. தற்போது இரண்டு ஆண்டுகளாக சோமாலியா
அரசுப்படை அல்-சபாப் ஆதரவாளர்களையும் வீரர்களையும் கைது செய்து
வருகிறது. உண்மையில் அங்கு நடப்பது என்ன? என உரையாடுகிறார் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளரான லெடெடியா பேடர்.
அல்-ஷபாப் குழந்தைகளை
தன் படையில் சேர்ப்பது பற்றி கூறுங்கள்.
அல்-ஷபாப் ஆயுதப்படை
குழந்தைகள் பல்வேறு கவர்ச்சி வாக்குறுதிகளை அளித்து அல்லது வற்புறுத்தி தம் அணியில்
சேர்த்து வருகின்றனர். குரானிக் பள்ளிகளிலிருந்து பல்வேறு சிறுவர்களை
துப்பாக்கி முனையில் கடத்தி வந்திருப்பது நான் அவர்களிடம் பேசியபோது தெரிய வந்தது.
குரான் போட்டியில் வென்ற ஒரு சிறுவன் வேறுபள்ளியில் சேரவிருந்த நிலையில்
அல்-ஷபாப் குழு, அவனை பயிற்சி முகாமுக்கு
கடத்திவிட்டனர். பின் பண்ட்லாந்து எனுமிடத்தில் சண்டையிடச் சென்றவன்
தற்போது சிறையிலுள்ளான். இளைஞர்கள், சிறுவர்களை
எவ்வித ஆதாரமுமின்றி அரசு படைகள் கைது செய்து சிறையிலடைக்கும் அநீதியும் தடுக்க முடியாதபடி
அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
அல்-ஷகாப் அமைப்பின்
உறுப்பினர் என அரசு படைகளால் கைது செய்யப்படும் சிறுவர்களின் நிலை என்ன?
மிகவும் கொடுமையானதாக இருக்கும். அல்-ஷகாப் ஆயுதக்குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கைதாகும்
சிறுவர்கள் பல மாதங்களுக்கு விசாரணையின்றி சிறையில் கழிக்க நேரிடும். இருள்சிறையில் படுத்து உறங்க கூட முடியாது. கொடும் குற்றவாளிகளோடு
அடைக்கப்படுவதும், வசதிகள் குறித்து புகார் சொன்னால் காவலர்களால்
தாக்கப்படுவதும் நிகழ்கிறது. வசதியான பெற்றோர் இருந்தால் சிறையிலும்
சொகுசாக இருக்க முடியும். சில சிறுவர்கள் விசாரணை என்ற பெயரில்
கடுமையாக தாக்கப்படுவதும் நிகழ்கிறது.
அரசின் வேலையே மக்களைக் காப்பதுதானே? எதற்காக சிறுவர்களை கைது செய்கிறார்கள்?
சிறுவர்கள் தீவிரமான குற்றத்தை செய்தாலும் கூட அவர்களுக்கு
பாதுகாப்பு அவசியம். சோமாலியா சட்டப்படி சிறுவர்கள்
தம் பெற்றோரையும் வழக்குரைஞர்களையும் சந்திக்கலாம் என்பதோடு அவர்களை சிறையில் தனியாக
அடைத்து வைக்கவேண்டும். பதினைந்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள்
தவறு செய்தால் தண்டனை உண்டு என்றாலும் வயது வந்தோருக்கும் சிறுவர்களுக்கும் வேறுபாடு
உண்டு. ஆனால் சட்டத்திலுள்ள எந்த விஷயங்களும் சோமாலியாவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இச்சட்டங்கள் காலத்திற்கேற்ப சீர்திருத்தப்படுவதும் மிக அவசியம்.
சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்டபின் அவர்கள் வாழ்க்கை எப்படியிருக்கிறது?
பள்ளி
படிப்பு பறிபோவதோடு உளவியல்ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அல்-ஷபாப், அரசுப்படை இரண்டும் கண்காணிப்பதாக உணரும் சிறுவர்கள் தம் வயதுக்கான சந்தோஷங்களை இழந்து தடுமாறிவருகிறார்கள். ஐக்கிய நாடுகளின் மறுவாழ்வு முகாமுக்கு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்கள்
250 பேரை அதிகாரிகளிடம் போராடி அனுப்பி வைத்தோம்.
சோமாலியா போன்ற தீவிரமான வாழ்வாதார பிரச்னை கொண்ட நாட்டில் எது உங்களுள்ளு நம்பிக்கை தருகிறது?
பல்வேறு
சிரமங்களை கடந்தும் தாக்குபிடித்து வாழ்ந்துவரும் மக்களின் கதைகள்தான். பள்ளி செல்ல முடியாமல் நண்பர்களை இழந்த பதினாறு வயது சிறுவன் சிறைவழியாக கல்வி கற்று எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகுவது என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அரசு பாதுகாப்பு என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டாலும் இங்கு பலரும் சிறுவர்களிடம் என்ன நடந்தது என
உண்மையை அறிய தயாராக இல்லை. அவர்களின் வாழ்வை வெளியுலகிற்கு சொல்ல நாங்கள் முயல்கிறோம். அதுவே எங்களுக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிக்கிறது.