இந்தியாவில் கொழிக்கும் லஞ்சம்!


லஞ்சம் ஒழியவில்லை!

ஊழலை, லஞ்சத்தை ஒழிப்போம் என அரசியல் கட்சிகள் மாறாத டெம்போவில் கூறினாலும் 56 சதவிகித இந்தியர்கள் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என கூறி இந்திய அரசுக்கு பொளேர் அதிர்ச்சியளித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரை 11 சதவிகதம் லஞ்சம் கைமாறி ஊழலின் அளவு 45 சதவிகிதமாக மாறியுள்ளதை ஜெர்மனியைச் சேர்ந்த டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்புகள் மேற்கொண்ட ஊழல் லஞ்ச ஆய்வு 2018 வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவிலும் லஞ்சம் வழங்குவதற்கு ரொக்கப்பணமே பலரின் விருப்ப சாய்ஸ்.

இந்தியாவின் 215 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கு அதிகமானோரிடம் ஆய்வு செய்ததில் 91 சதவிகிதத்தினருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் ஹெல்ப்லைன் எண் கூட தெரியவில்லை. 82% மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம், மாநில அரசு ஊழல் மற்றும் லஞ்சத்தை எதிர்க்க துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்ற கோபமும் கனன்றுவருவதை ஆய்வு காட்டியிருக்கிறது. ஊழல், லஞ்சத்தில் உத்தரப்பிரதேசம்(79%), பஞ்சாப்(56%), மத்தியப்பிரதேசம்(50) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. இவ்வாண்டின் ஜூலை 26 அன்று அறிமுகமான ஊழல் தடுப்புச்சட்டத்தில் லஞ்சம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம்.