ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயத்தில் முந்தும் சீனா!

 









ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயம்!

கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனா, ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்த்தது. இதைப்பற்றி ஃபினான்சியல் டைம்ஸில் கட்டுரை வெளியானது. அதில், இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை கொண்டு செல்ல முடியும் என்று கூறப்பட்டது. இதுபற்றிய கேள்விக்கு சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈடுபாடு காட்டி வருகின்றன. 

ஒலியை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்டவை ஹைப்பர் சோனிக் ஆயுதங்கள். மாக் (mach ) என்ற அலகில் இதனை அளவிடுகிறார்கள். மாக் 1  என்பது ஒலியின் வேகம், மாக் 1லிருந்து மாக் 5 வரை சூப்பர் சோனிக், மாக் 5க்கும் அதிகமான வேகம் கொண்டவை ஹைப்பர்சோனிக் என்று வல்லுநர்கள் வரையறுக்கின்றனர். 

கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகளுக்கு குறிப்பிட்ட இலக்கு உண்டு. அதற்கான வழிமுறையில் பயணிக்கும். இதை ரேடார்களால் கண்டுபிடிக்க முடியும். தாக்கப்படும் நாட்டின் பாதுகாப்பு ரேடார்கள், ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் ஹைப்பர் சோனிக் ஆயுதங்களை அருகில் வந்தபிறகே கண்டுபிடிக்க முடியும். இவற்றில் இரு வகைகள்(HGV,HCM) உண்டு. ராக்கெட்டிலிருந்து ஏவுகணைகளை அல்லது ஆயுதங்களை ஏவுவது ஹைப்பர்சோனிக் கிளைட் வெகிள்ஸ் (hypersonic glide vehicle) எனலாம். ஏவுகணைகள் எஞ்சின்களை பொருத்தி இலக்கை நோக்கி ஏவப்படுவதை ஹைப்பர்சோனிக் க்ரூஸ் மிசைல்ஸ் (hypersonic Cruise missile) எனலாம். மணிக்கு 5 ஆயிரம் கி.மீ. தூரத்தை கடக்கும் என்பதால், இதனை எதிர்கொண்டு அழிப்பது பல்வேறு நாடுகளுக்கும் கடும் சவாலாகவே இருக்கும். 

கடந்த அக்டோபர் மாதம், ரஷ்யா ட்ஷிர்கோன் (tsirkon) என்ற ஹைப்பர்சோனிக் ஆயுதம் ஒன்றை சோதித்தது. கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஆயுதம், 350 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கியது. நடப்பாண்டின் இறுதிக்குள் கடற்படை ஹைப்பர்சோனிக் பரிசோதனைகளை வெற்றிகரமாக முடிக்கும். "இத்தொழில்நுட்பம் மூலம்  பிற நாடுகளின் ராணுவ  அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும்  "என ரஷ்ய அதிபர்  புதின் கூறினார்.  அமெரிக்கா, ஹைப்பர்சோனிக் ஆயுத ஆய்வில் நிதி பற்றாக்குறையால் பின்தங்கியுள்ளது. இந்தியா 2019, 2020 ஆண்டுகளில் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன.  


தகவல்

the arms race towards hypersonic weapon

தி எகனாமிஸ்ட்


கருத்துகள்