ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் முயற்சி - ஒடிஷா மாநில அரசின் ஆமையைக் காக்கும் தடை!

 








pinterest



ஒடிசா மாநிலத்தின்  கேந்திரபாரா மாவட்டத்தில் கதிர்மாதா, எனும் கடல் உயிரினங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 1,435 சதுர கி.மீ.ஆகும். இதில் பாதுகாக்கப்பட்ட காடுகள், வண்டல்மண் பரப்பு, மணல் திட்டுகள் உள்ளன. இக்கடல்பரப்பை, 1997ஆம் ஆண்டு கடல் சரணாலயமாக ஒடிஷா அரசு அறிவித்தது. இங்கு அழிந்து வரும் நிலையிலுள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ஆலிவ் ரிட்லி ஆமைகள். ஆண்டுதோறும் முட்டைகளை இட அதிகளவு எண்ணிக்கையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இங்கு வருகின்றன. 

சரணாலயத்திற்கு வரும் ஆமைகளை பாதுகாக்கவென வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட வரும் இடங்களில் கதிர்மாதா கடற்புரமும் ஒன்று. ஆண் ஆமைகள், பெண் ஆமைகளுடன் இனப்பெருக்கம் முடிந்தவுடன் கடலுக்குள் திரும்பிச்சென்று விடுகின்றன. கருவுற்ற பெண் ஆமைகள் சூரியன் வானில் மறைந்தபிறகு மணல் பரப்பிற்கு முட்டையிட வருகின்றன. நெடுநேரம் யோசித்து முட்டையிடுவதற்கான இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. தோராயமாக ஒரு ஆமை,  மணலில் குழிதோண்டி 120 முதல் 150 வரையிலான  முட்டைகளை  இடும். பிறகு, திரும்பி கடலுக்குள் சென்றுவிடும்.  இப்படி ஆமைகள் முட்டையிடும் நிகழ்ச்சிக்கு அரிபாதா (Arribada) என்று பெயர். 

சிறிய பிங்பாங் வடிவ முட்டைகள் பொரித்து ஆமைக்குஞ்சுகள் வெளியே வர 45 முதல் 60 நாட்கள் ஆகின்றன. இதற்குள் ஆமையின் எதிரிகள் அதனை இரையாக கொள்ளவும், அலைகள் அதனை நீரில் அடித்துச்செல்லவும் வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் தப்பிப் பிழைக்கும் ஆமைக்குஞ்சுகள் முழு வளர்ச்சி பெற்றதும் கடல்நீருக்குள் செல்கின்றன. பெண் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் வயதை அடைய தோராயமாக 20 ஆண்டுகள் தேவை. 

ரிஷிகுலாயா, தேவி ஆகிய ஆறுகளிலிருந்தும்  ஏராளமான உயிரினங்கள் கதிர்மாதா கடற்கரைக்கு வருகின்றன. இங்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் உயிரினங்கள் பலவும் அழிந்து வருவதாக செய்தி வெளியானதையொட்டி இத்தடையை ஒடிஷா அரசு விதித்தது. இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் செவுள் வலை (Gillnet) என்ற மீன் வலையைப் பயன்படுத்துகிறார்கள். இதில் மாட்டி ஏராளமான கடல் உயிரினங்கள் இறக்கின்றன. இந்த வலை ஒற்றை இழையாலும், சட்டவிரோத அளவுகளிலும் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 

இனப்பெருக்கத்திற்காக வந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள், செவுள் வலையில் சிக்கி இறக்கும் நிகழ்ச்சிகள் அதிகரித்தன. இதன் காரணமாகவே ஒடிஷா அரசு மீன்பிடி தடையை விதிக்க நேரிட்டது. ஆலிவ் ரிட்லி என்ற பெயர், அதன் ஓடுகளின் காரணமாக வந்தது. வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி, அதிக அச்சுறுத்தல் உள்ள உயிரினமாக ஆலிவ் ரிட்லி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆதாரம்

Olive turtles spotted along Gathirmatha coast before the mass nesting

13.12.2021

HT school

https://www.downtoearth.org.in/news/wildlife-biodiversity/olive-ridley-arribada-at-odisha-s-gahiramatha-ends-70153

நன்றி

ஆர்.வெங்கடேஷ், பொறுப்பாசிரியர், பட்டம் மாணவர் மதிப்பு 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்