விலங்குகளுக்கு செயற்கைக் கால்களைக் கிடைக்கச் செய்யும் மருத்துவர்!

 


மருத்துவர் தபேஷ் மாத்தூர்










2014ஆம் ஆண்டு மருத்துவர் தபேஷ் மாத்தூர், ஹிங்கோனியா பசு மறுவாழ்வு மையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த பசு அமைவிடம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ளது. இங்கு அதிகளவு பசு இறப்பு நடந்ததால், அதனைக் குறைக்கவே மருத்துவர் அழைக்கப்பட்டார். 

பசுக்கள்,  ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டிருந்தன. அதுதான் இறப்பிற்கான முக்கியமான காரணம்.  எனவே, அவற்றைக் காப்பாற்ற தினசரி ஏதேனும் ஒரு பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து வந்தார் மருத்துவர் தபேஷ். இதனால் பசுக்களின் இறப்பு பெருமளவில் குறைந்தது. அத்தோடு பசுக்களின் பிரச்னை முடியவில்லை. விபத்துக்குள்ளாகி கால்கள் முடமான பசுக்களின் இறப்பு பற்றியும் புகார்கள் வந்தன. 

விபத்துக்குள்ளாகி அகற்றப்பட்ட கால்களால் முடமாகிப் போன பசுக்களின் வாழ்நாள் குறைந்து வந்தது. அதனை சரிசெய்ய, செயற்கைக் கால்களை பொருத்த மருத்துவர் முடிவு செய்தார். எனவே, கிருஷ்ணா லிம்ப் என்ற பிராண்டின் பெயரில் இவரே கால்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். இன்றுவரை 160 செயற்கைக்கால்களை உருவாக்கி பொருத்தியுள்ளார். இதனால் பசுக்களின் வாழ்நாளும் நீண்டுள்ளது. 

செயற்கைக் கால்களை பொருத்துவதற்கான நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார். வேலைக்கான கட்டணம் என்பது ஏதுமில்லை என்றாலும் அர்ப்பணிப்பாக பணியாற்றி வருகிறார். செயற்கைக் கால்களை ஜெய்ப்பூரில்தான் உருவாக்கி வருகிறார். பெருந்தொற்று நடுவில் குறுக்கிட, தனது செயற்கைக் கால் பொருத்தும் பணியை டிஜிட்டலில் செய்யத் தொடங்கினார். 

வீடியோ அழைப்பு மூலமாக, செயற்கைக் கால்களை பொருத்தும் பணியை செய்துவருகிறார். இவரது வழிகாட்டலை பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் மருத்துவர்கள் செயற்கைக் காலை பசுக்களுக்குப்  பொருத்தி வருகின்றனர். காலைப் பொருத்தினால் மட்டும் போதாது, பொருத்தப்பட்ட காலை பசு ஏற்றுக்கொண்டு பழகவும் பயிற்சி தேவை. இதெல்லாம் உரிமையாளர்களின் மனநிலையைப் பொறுத்தது.

பசுக்களை சிலர் கைவிடுவதை அறிந்து மருத்துவர் தபேஷ், பசுக்களை கைவிடக்கூடாது என உறுதிமொழி பெற்று தனது வேலையை விலையின்றி செய்துகொடுக்கிறார். மருத்துவர் தபேஷ் இப்போது பசுக்களுக்கு மட்டுமல்ல ஒட்டகத்திற்கும் செயற்கை கால்களைப் பொறுத்தி வருகிறார். இவரது செயலைப் பார்த்து ஈடுபாடு கொண்ட மனைவி ஷிப்ரா, தனது ஆசிரியர் தொழிலைக் கூட கைவிட்டு இவரோடு இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இந்தியாடுடே 

 







கருத்துகள்