தனிப்பட்ட நேரத்தை பறிகொடுத்தேன்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்
மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம்.
எங்கள் நாளிதழ் அச்சு பதிப்பு வெளியாகத் தொடங்கிவிட்டது. கட்டுரைகள் முன்னமே எழுதிவிட்டேன். சிலவற்றை மட்டுமே புதிதாக எழுத வேண்டும். நேற்று பக்கத்து அறைக்காரரான சீனிவாசனுக்கு ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க முயன்றேன். ஆனால் இறுதி நேரத்தில் பிழைச்செய்தி வந்துவிட்டது. இரவு நேரத்தில் செய்த இந்த வெட்டி வேலையால் எனது எழுத்து வேலை தடைபட்டது. வேறு வழியில்லை. நீங்கள் இன்டர்நெட் கஃபேக்கு சென்று செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். நேற்று ஒருமணிநேரத்திற்கு மேல் இதற்காகவே செலவானது. இந்த நேரத்தில் சீனிவாசனுக்கு பிடிக்காத ரங்கன் என்பவரும் அவருடைய போனுக்கு பிரச்னை என வந்து பக்கத்தில் நின்றுவிட்டார். கடுப்பேற்றுவதுதான் நோக்கம். வேறென்ன?
சுப்ரதோ பக்ஷி எழுதிய நூலை மெல்ல வாசித்து வருகிறேன். நூலை எளிமையாக படிக்கும் வகையில் எழுதியுள்ளது ஆறுதலாக உள்ளது. மாலை முதல் வயிற்றுவலி தொடங்கிவிட்டது. மதியத்தில் சீனிவாசன் கொடுத்த உளுந்து வடை ஒன்றை தின்றுவிட்டேன். இரவில் எதையும் சாப்பிடமுடியவில்லை. அமேசான் நிறுவனம் நடத்தி வந்த வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் விரைவில் மூடப்படுகிறது. ஆங்கில நூல்கள் பெரிதாக விற்கவில்லை என்று ஒரு வித்தியாசமான காரணத்தை சொல்லுகிறார்கள். இப்பதிப்பகம், நிறைய நூல்களை தமிழிலும் பிற பிராந்திய மொழிகளிலும் உருவாக்கியுள்ளது. தொடக்கத்தில் வெஸ்ட்லேண்ட் என்பது டாடாவின் நிறுவனமாக இருந்து 2016இல் அமேசான் இதனை வாங்கி நடத்தி வந்தது. இப்போது மூடுவிழா நடத்திவிட்டது. கவிஞர் விக்கிரமாதித்தன் பற்றி ஜெயமோகன் பேசிய காணொலியை இணையத்தில் பார்த்தேன். நன்றி!
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக