கல்வியைக் கற்கும் பெண்களே திருமண வயதைத் தீர்மானிக்கவேண்டும்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்
அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? இன்று நான் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு நண்பர் சக்திவேலைப் பார்க்க சென்றேன். படம் பார்க்கலாம் என்றார். தினசரி மூன்று படங்களைப் பார்க்கும் சினிமா விரும்பி அவர். நான் உங்களுடன் பேசினாலே போதும் என்றேன். மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் மனிதர்.
திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பேய்க்கதை. தியாகு என்பவர் கதையை சொல்கிறார். நல்ல ஆவி, அதை முடக்கும் கெட்ட ஆவி என கதை சுவாரசியமாக செல்கிறது. நண்பர் சக்திவேலிடம் சுவிசேஷங்களின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய் எழுதிய நூலை படிக்க வாங்கி வந்தேன். நேரம் ஒதுக்கி படிக்கவேண்டும். மனம் முழுக்க வேலை பற்றிய அலுப்பு உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.
கணினி பழுதாகிவிட்டது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இப்போதுதான் நூல்களை ரிலாக்ஸாக படிக்க முடிகிறது.
நன்றி!
அன்பரசு
11.12.2021
------------------
அன்பு நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா?
வீட்டில் உள்ளோரையும் கேட்டதாக சொல்லுங்கள். சுவிசேஷங்களின் சுருக்கம் நூலை 50 பக்கங்கள் படித்துள்ளேன். நீங்கள் தாராபுரத்தில் ஒருமுறை பைபிள் பற்றி பேசியிருக்கிறீர்கள். அதில் இயேசு கூறிய வாசகங்கள் முக்கியமானவை. இப்போதுதான் அதைப்படித்துப் புரிந்துகொள்ளும் நூல் கிடைத்துள்ளது. தெய்வத்திற்கு பலியிடும் ஆட்டை விட, கொடுக்கும் காணிக்கைகளை விட சக மனிதர்களை அன்பு செய்வது முக்கியம். இப்படி செய்தால், கடவுள் களிப்பு கொள்வார் என்ற வாசகங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்துக்கொண்டிருந்தேன். ஆச்சரியமாக இருந்தது. மறக்க முடியாத வாசகம்.
எங்கெங்கு காணினும் நெகிழ்ச்சியான ஆறுதலாக, தேற்றும் வாசகங்கள் கிறிஸ்தவத்தை நோக்கி இயேசுவைப் பற்றிக்கொள்ள காரணமா என்று தெரியவில்லை. நகர வாழ்க்கைக்கு இழுபட்டு அலைவுறும் மனிதர்களைக் கூட தேவாலய சுவர்களிலிருந்தே ஆற்றுப்படுத்துகிறார் ஆண்டவர்.
பாப் பிஸ்வாஸ் என்ற ஜீ5 இல் வெளியான படம் பார்த்தேன். அபிஷேக் பச்சன் சிறப்பாக நடித்திருக்கிறார். 2012இல் வெளியான கஹானி படத்தில் உள்ள பாப் என்ற பாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் முன்கதையை சொல்லியிருக்கிறார்கள். இதனை ஸ்பின்ஆப் என்று குறிப்பிடுகிறார்கள். நினைவுகளை இழந்தவராக சூழலைப் புரிந்துகொண்டு ரத்தம் தெறிக்க நல்லது எது அல்லவை எது என அபிஷேக் கண்டுபிடிப்பதுதான் கதை.
நன்றி!
அன்பரசு
12.12.2021
------------------
அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.
நலமா? மாலை 6 மணி ஆனாலே பனி கொட்டத் தொடங்கிவிடுகிறது. கண்ணில் பார்க்க முடியாவிட்டாலும் உடலில் பனியின் ஜில்லிப்பை உணர முடிகிறது. பெண்களின் திருமண வயது 21 சர்ச்சையில், கல்விதான் தீர்மானிக்க வேண்டும் என அவள் விகடனில் தலையங்கம் எழுதியிருந்தார்கள். முக்கியமான விஷயம் அது. திருமணம் தனிப்பட்ட உரிமை. அதை பெண்களே தீர்மானிக்க வேண்டும் என ஆசிரியர் ஸ்ரீ எழுதியிருந்தார்.
ரா.கி.ரங்கராஜனின் தாரகை நாவலை வாசித்து வருகிறேன். சமூகவலைத்தள பதிவுகளை வைத்தே கூட போலீசார் ஒருவரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மெல்ல கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டு சர்வாதிகாரப் போக்கு அதிகரித்து வருகிறது. நீதிபதிகள், சட்டத்திற்கு உட்பட்டு நீதி சொல்லாமல் தங்களது மனதில் உள்ள அழுக்கு கருத்துகள், விக்டோரியா கால ஒழுக்கவியலையெல்லாம் பேசி வருகிறார்கள். சந்திப்போம். நன்றி!
அன்பரசு
22.12.2021
கருத்துகள்
கருத்துரையிடுக