ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமயமாதல் விளைவுகள்!
ஆர்க்டிக்கில் தீவிரமாகும் பருவச்சூழல் விளைவுகள்!
சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் வெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடியுள்ளதை ஐ.நா அமைப்பு, சுட்டிக்காட்டியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை உலக தட்பவெப்பநிலை அமைப்பு (WMO) வெளியிட்டது. ஆர்க்டிக் பகுதியில் இம்முறையில் அதிகரித்துள்ள வெப்ப அளவு, கடந்த கோடைக்காலத்தை விட அதிகம். இப்படி வெப்பம் அதிகரிப்பது காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றை நிகழ்ச்சிகளை அதிகரிக்கக்கூடும்.
கடந்த ஆண்டு சைபீரியாவில் செய்த ஆய்வில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே சமகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான அதிக வெப்பநிலை ஆகும். பருவச்சூழல் மாறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஐ.நா அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்ய நகரமான வெர்க்கோயான்ஸ்க் (verkhoyansk)என்ற இடத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நகரம் ஆர்க்டிக் பகுதியிலிருந்து 115 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தட்பவெப்பநிலை கணக்கீடு 1885ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.
2020ஆம் ஆண்டு, உலகளவில் அதிக வெப்பநிலை நிலவிய மூன்று ஆண்டுகளில் ஒன்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இக்காலகட்டங்களில் உருவான வெப்ப அலை முக்கியமான காரணம். அன்டார்டிகா பகுதியில் 18.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது தட்பவெப்பநிலையில் முக்கியமான நிகழ்ச்சி. இதைப்போலவே கலிஃபோர்னியாவின் டெத்வேலி எனும் இடத்தில் 54.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதற்கான காரணத்தை உலக தட்பவெப்பநிலை அமைப்பு தேடிக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இத்தாலித் தீவான சிசிலியில் (Sicily) 48.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்கான காரணங்களையும் ஆராய்ந்து வருகிறார்கள்.
அதிக வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை, மழைப்பொழிவு, வறட்சி, புயல், மின்னல், தட்பவெபநிலை சார்ந்த இறப்புகள் என அனைத்தையும் ஆய்வாளர்கள் சேகரித்து ஆவணப்படுத்தி வருகின்றனர். உலக நாடுகளில் வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. உலக நாடுகளை விட வெப்பத்தின் தீவிரம், ஆர்க்டிக் பகுதியில் தீவிரமாகி வருகிறது.
2007ஆம் ஆண்டிலிருந்து உலக தட்பவெப்பநிலை அமைப்பு, துருவப் பகுதிகளின் வெப்பநிலையையும் கண்காணிப்பு பட்டியலில் இணைத்து கண்காணித்து வருகிறது. ஆவணக்காப்பகத்தில் துருவப்பகுதிகளுக்கென தனிப்பகுதி தொடங்கியதிலிருந்து 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை இதுவரை தாண்டியதில்லை. இதற்கு முன்னர் நடந்திருந்தாலும் அதற்கான பதிவுகள் இல்லை. எனவே இப்போதுள்ள தகவல்படி 38 டிகிரி செல்சியஸ் என்பதுதான் அதிகம். குறைந்தபட்சமாக ஆர்க்டிக் பகுதியில் -69.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இந்த வெப்பநிலை 1991ஆம் ஆண்டு, டிசம்பர் 22 அன்று கிரீன்லாந்தில் பதிவாகியுள்ளது.
source
alarm bells as UN validates record arctic temperature
HT school
15.12.2021
கருத்துகள்
கருத்துரையிடுக