என்றென்றைக்கும் உலகிற்கு தேவைப்படும் காந்தி! - உரையாடும் காந்தி - ஜெயமோகன்

 







காந்தி நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா


உரையாடும் காந்தி
ஜெயமோகன்






என்றைக்கும் இல்லாதபடி காந்தி இன்று மக்களுக்கு தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகள், ஆளுமை, ஊடக வெளிப்பாடு என அனைத்துமே இன்றுமே மக்களை வசீகரிக்கின்றன.

 நிறைய ஊடக ஆளுமைகள், வலதுசாரி கருத்தாளர்கள் காந்தியை அவதூறு, வசை செய்வதற்காக அவரது தனிப்பட்ட ஆன்மிக பரிசோதனைகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அப்படியும் கூட அன்றைய காங்கிரசிலும் இன்றும் கூட யாரையும் விட செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தது காந்தி மட்டுமே. 

இதை ஒத்துக்கொள்ள இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு கூட சங்கடங்கள் தயக்கங்கள் இருக்கலாம். 

உரையாடும் காந்தி நூலில் ஜெயமோகன், காந்தி மீது மக்களுக்கு உள்ள பல்வேறு சங்கடங்கள், தயக்கங்கள், கேள்விகள், அவதூறுகள், வசைகள் என அனைத்துக்கும் பதில் அளிக்கிறார். 

இந்த நூல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களைக் கொண்டதே. 

காந்தியைப் பற்றி எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என ஜெயமோகன் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதன்படி காந்தியைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் அறிய வந்த பொய், வதந்தி, அவதூறு, வசைகளுக்கு சலிப்பே இல்லாமல் பதில் சொல்லுகிறார். 

காந்தியை அறிவதற்கான முக்கியமான நூல் என்று உரையாடும் காந்தியை கூறலாம். எதிர்காலத்தில் நல்ல விஷயங்களை அடிக்கடி கூறவேண்டியிருக்கும் என்பதற்காகவே பேசுவதோடு 75 ஆயிரம் பக்கங்களை எழுதியும் வைத்துவிட்டு சென்றிருக்கிறார் காந்தி என ஜெயமோகன் ஒரு இடத்தில் சொல்லுகிறார். அதற்கு உண்மையிலேயே தொலைநோக்கான திட்டமிடல் இருந்தால்தான் சாத்தியம். 

காந்தி எப்படி தனது உடை, செயல்பாடு என அனைத்திலும் பாமரர், அறிவுஜீவி என அனைவருக்கும் புரிந்துகொள்ளும்படியான தன்மைகளை உருவாக்கினார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவின் பிரதிநிதியாக தன்னை எப்படி காட்டிக்கொள்வது காந்தி அரையாடையை அணிந்து உலகின் முன் நிற்பது சாதாரணமல்ல. இங்கிலாந்து மன்னர் முன்பே, அரையாடையை அணிந்து நின்ற சம்பவத்தை கற்பனை செய்து பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி தெளிவான கருத்து காந்திக்கு இருந்திருக்கிறது. 

இதோடு அன்றைய வைஸ்ராய்கள், கவர்னர் ஜெனரல்கள் பஞ்சத்தைப் பற்றி கவலைப்படாமல் விருந்துகளை வைத்துக்கொண்டிருந்தனர். அதற்கு ஆங்கிலேயர்களின் உத்தரவுப்படி அவர்களின் பணியாளர்களின் உடையை மன்னர்கள் அணிந்து நின்றதைப் பற்றி காந்தி பதிவு செய்திருக்கிறார். உடை என்பது முக்கியமான வெளிப்பாடு என்பதை காந்தி உணர்ந்தேயிருக்கிறார் என ஜெயமோகன் கூறுகிறார். 

 இன்று கப்பல்படை புரட்சி பற்றி ஊடகங்களில் எழுதப்படுவது பற்றியும் குறிப்பிட்டுள்ளார் ஜெயமோகன். கப்பல் படை புரட்சியால்தான்  ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தனர் என்று கூறப்படும் சித்திரத்தை வலுவான ஆதாரத்துடன் மறுக்கிறார் ஜெயமோகன். தற்போது பல்வேறு ஆங்கில நூல்கள் கப்பல்படை புரட்சி பற்றி விதந்தோந்தி எழுதி வருகின்றனர். இப்படி எழுதுவதற்கு முக்கியமான காரணம், இந்திய சுதந்திரத்தில் காங்கிரஸ் மற்றும் காந்தியின் பங்களிப்பை குறைத்துக் காட்டுவது என நேரடியாகவே ஜெயமோகன் நூலில் கூறியுள்ளது முக்கியமானது. 

ஜெயமோகன் படம்: காமன்ஃபோக்ஸ்



அமெரிக்காவில் இருந்து வந்து காந்தி பற்றி ஆராய்ச்சி செய்தவர்களான இவான் இலியிச் பற்றி கூறப்படும் இடம் முக்கியமானது. இவர்களே ஆங்கில உலகம் காந்தியைப் பற்றி தெளிவாக அறிந்துக்கொள்ளும்படியான நூல்களை எழுதி வெளியிட்டவர்கள். ஆனால் அவர்களை தமிழ்நாட்டில் உள்ள காந்தியவாதிகள் என கூறப்படுபவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடுபவன் என ஒற்றை வார்த்தையில் விமர்சித்து நிறுத்திக்கொண்டனர். எப்படிப்பட்ட மனது என ஜெயமோகன் கூறுவது முக்கியமானது. 

காந்தி பற்றிய நிறைய விஷயங்களை வாசிப்பவர்கள் பெறமுடியும். அதில் அவரின் குண இயல்பும் ஒன்று. இதைப்பற்றி இங்கு அதிகம் கூறமுடியாது. நூலை வாசிக்கும்போது, காந்திய செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக ஏன் உருவாகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும். 

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள், அவராகவே மாறிவிட வேண்டும் என அவசியமில்லை. இதற்கு இவான் இலியிச், லாரிபேக்கர் ஆகியோர் வாழ்க்கை, கூற்றுகளை கூறுகிறார். அதுவும் கூட ஏற்கும்படியாகவே இருக்கிறது. பொருள் சார்ந்த உலகில் காந்தியின் இடம் என்ன, அவரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் எப்படி செயல்படுவது என புரிந்துகொள்ள உரையாடும் காந்தி நூல் உறுதியாக உதவும் என கூற முடியும். 


கோமாளிமேடை டீம் 
 




கருத்துகள்