உலகளவில் அழியும் நிலையிலுள்ள உயிரினங்களில் முக்கியமானவை.....

 















அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள்!

கடந்த பத்தாண்டுகளாக பருவச்சூழல் மாறுபாடுகளால் ஏராளமான உயிரினங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களை காக்காவிட்டால், காடுகளின் பல்லுயிர்த்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

தந்த மூக்கு மரங்கொத்தி (ivory billed woodpecker)

அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளின் ஊசியிலைக் காடுகளில் காணப்படும் மரங்கொத்தி. மரங்களின் பட்டைகளை இடைவிடாமல் அலகால் கொத்துவதால், இதனை நெசவாளர் என பறவையியலாளர்கள் செல்லமாக குறிப்பிடுகின்றனர். 1800 களிலிருந்தே காடுகள் அழிக்கப்பட்டதால் வாழிடம் இன்றி தந்த மூக்கு மரங்கொத்தி அழியத்தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டில் எண்ணிக்கை மிகவும் குறைந்து அழியும் நிலையில் உள்ளது. இறந்துபோன பைன், சிவப்பு மேபிள் மரங்களில் கூட்டை அமைக்கிறது.  வண்டுகளின் லார்வா புழுக்கள், பழங்கள், பருப்புகள் முக்கியமான உணவு. உலகளவில் 1-49 வரையிலான பறவைகள் மட்டுமே இருப்பதாக, சர்வதேச இயற்கைவள பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் (IUCN redlist) தகவல் தெரிவிக்கிறது. 

ஸ்பிக்ஸ் மக்காவ் (Spix macaw)

அண்மையில் அழிவின் விளிம்பில் உள்ள பறவை என மக்காவ் கிளி இனத்தை சூழலியலாளர்கள் அறிவித்துள்ளனர். பிரேசில் நாட்டின் பாஹியாவின் ரியோ சாவோ பிரான்சிஸ்கோவில் வாழ்கிறது.  நீலநிறம் கொண்ட ஸ்பிக்ஸ் மக்காவ் பறவை, அமேசானின் மழைக்காடுகளில் காணலாம். வாழிடம் அழிக்கப்படுவது, சட்டவிரோத கடத்தல் காரணமாக இப்பறவையின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. 1638ஆம் ஆண்டு ஜார்ஜ் மார்க்கிரேவ் (George marcgrave) என்ற சூழலியலாளர், ஸ்பிக்ஸ் மக்காவ் கிளியை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தினார். ஆண், பெண் கிளிகள் நிறத்தில் ஒன்றாக இருந்தாலும் உருவ அளவில் பெண் பறவை சற்றே சிறியது.

ஸ்ப்ளென்டிட் பாய்சன் ஃபிராக் (Splendid poison frog)

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் காணப்படும் சிறிய சிவப்பு நிற தவளை. அந்நாட்டில் உள்ள மான்டேன் காடுகளில் வாழ்கிறது. இந்த விஷத்தவளைக்கு செல்லப்பிராணி சந்தையில் ஏக கிராக்கி. எனவே, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு விற்கப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே அழிவின் விளிம்பில் உள்ளதாக சூழலியலாளர்களால் கூறப்பட்ட தவளை இனம் இது. கைட்ரியோமைகோசிஸ் (Chytridiomycosis) எனும் நோயும்  விஷத்தவளையின் எண்ணிக்கை குறைய காரணமானது. இதே குடும்பத்தைச் சேர்ந்த (Dendrobatidae) தங்க விஷத்தவளை, அதன் விஷத்திற்காக புகழ்பெற்றது. 

ஸ்மூத் ஹேண்ட்ஃபிஷ் (Smooth Handfish)

ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியா கடல் படுகையில் காணப்பட்ட மீன் இனம். அழிவின் விளிம்பில் உள்ளதாக சர்வதேச இயற்கைவள பாதுகாப்பு சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் முறையில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் மீன் இனம் ஹேண்ட் ஃபிஷ்தான். கடலின் ஆழமற்ற பகுதியில் உலவும் மீன் இது. 1802ஆம் ஆண்டு பிரெஞ்சு இயற்கையியலாளர் பிராங்கோய்ஸ் பெரோன் (François Péron), ஹேண்ட்ஃபிஷ் மாதிரியை எடுத்து ஆவணப்படுத்தினார். இன்றைய வரைக்கும் அதுதான் சூழலியலாளர்களுக்கு ஆய்வில் உதவுகிறது. 

ஜல்பா ஃபால்ஸ் ப்ரூக் சாலமண்டர் (Jalpa False Brook Salamander)

மத்திய அமெரிக்காவின் குவாத்திமாலா நாட்டில் வாழ்ந்த உயிரினம். கடந்த பத்தாண்டுகளாக இந்த இருவாழ்வியை ஆய்வாளர்கள் பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள். கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற உடலைக் கொண்டது. காடுகள் அழிப்பால் வாழிடம் இழக்கப்பட்டு எண்ணிக்கை குறைந்தது.   

 தகவல்

https://www.outlookindia.com/website/story/india-news-year-ender-2021-species-that-went-extinct-this-year/407169

https://www.allaboutbirds.org/guide/Ivory-billed_Woodpecker/lifehistory#food

https://www.iucnredlist.org/species/22681425/182588014

https://en.wikipedia.org/wiki/Spix%27s_macaw

https://easciences.org/endangered-species-spotlight-splendid-poison-frog/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்