பூமியில் கிடைக்கும் தங்கம் உருவான கதை!














விண்வெளியிலிருந்து உருவான உலோகம்! 

இன்று ஒருவரின் செல்வ வளம், நிலம், சேர்த்து வைத்துள்ள பல்வேறு நகைகளோடும் சேர்த்தே  அளவிடப்படுகிறது. அதிலும் அவர் தங்கத்தை சேர்த்து வைத்தால், அதன் மதிப்பு ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும்.   உண்மையில் இந்த தங்கம் எப்படி உருவானது? தங்கம் அரிதான உலோகம் என்பதோடு, அதன் உருவாக்கத்திற்கும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. 

நட்சத்திரங்களின்  இணைதலின்  விளைவாகவே, தங்கம் உருவாகியிருக்கும் என  அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். நட்சத்திரங்களில் உள்ள சிறு பகுதிகள் ஒன்றாக இணைவதன் வழியாக, அதிலிருந்து ஆற்றல் வெளிப்படுகிறது. நட்சத்திரங்களில் பெருமளவு உள்ள ஹைட்ரஜன் இதில் அதிக பங்களிப்பைத் தருகிறது.  

சிறு பகுதிகளின் இணைவு அல்லது மோதலின்போது வெப்பமும், அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாகவே, நட்சத்திரத்தின் அடிப்பகுதியில் ஹீலியம் உருவாகிறது.  இந்த செயல்பாடு சுழற்சியாக நடைபெறுகிறது. இச்செயல்பாடு, இரும்பு உருவாகும் வரை தொடர்கிறது. இரும்பு, வினையில் உருவாகும் ஆற்றலை பெருமளவு உறிஞ்சுகிறது. இதன் விளைவாக, நட்சத்திரம் மெல்ல சிதைவடைகிறது. அதிகரிக்கும் அழுத்தம், ஈர்ப்புவிசை காரணமாக நட்சத்திரத்தில் வெடிப்பு நடக்கிறது. வெடித்த நட்சத்திரங்களின் பாகங்கள் பூமியில் விழுந்துதான், தங்கம் உருவாகியுள்ளது என புவியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். 

விண்வெளியில், இந்தளவு ஆற்றலை வெளியிடும் இயல்புகொண்டவை, நியூட்ரான் நட்சத்திரங்கள் மட்டுமே. இவை  சிறிய வடிவில் இருந்தாலும் அடர்த்தியானவை. மோதலின்போது ஏராளமான ஆற்றலை வெளியிடுவதோடு, உலோகங்களையும் உருவாக்குகிறது. விண்வெளியில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக பல்வேறு உலோகங்களின் கலவையாக தங்கம் பூமிக்கு வந்து சேர்ந்தது. 

பூமியின் அடிப்பகுதி அதிக வெப்பம் கொண்டதால், தங்கம் உருகிவிட்டது.இதில் பெரும்பகுதி நிலத்திலும் நீரிலும் சேகரமானது. இதைத்தான் சுரங்கம், நீர்ப்படுகையிலும் மக்கள் தேடியெடுத்து பயன்படுத்துகிறார்கள் என அமெரிக்காவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் தகவல் கூறுகிறது.  

பயன்கள்

நிறம் மற்றும் அரிதான தன்மை, இணக்கமான தன்மை காரணமாக பல்வேறு வடிவங்களில் நகை, பதக்கமாக மாற்றப்படுகிறது. 

சிறந்த மின்கடத்தி, துருப்பிடிப்பதில்லை என்ற காரணத்தால் நவீன மின்னணு பொருட்களில் பயன்படுகிறது. 

பற்சிதைவு பாதிப்பில் பற்களில் நிரப்ப தங்கம் பயன்படுத்தப்படுகிறது. துருப்பிடிக்காது, நச்சற்றது என்பதால் தங்கமே முதன்மையான உலோகத் தேர்வாக உள்ளது. 

தங்கத்தில் இன்றும் மக்கள் அதிகளவில் முதலீடு செய்கிறார்கள். தொன்மைக் காலத்தில் வணிகரீதியாக நாணயம் பயன்படுத்தியது போல தங்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். 

தகவல்

How it works 2021

Gold: the rich element (james horton)

https://www.livescience.com/gold-the-rich-element

pinterest

கருத்துகள்