திருமண மகிழ்ச்சி! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்
12.10.2021
----------------------
அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்றிரவு பிரன்ட்லைனில் அசாம் முஸ்லீம்கள் பற்றிய கட்டுரையைப் படித்தேன். அதில் அரசு நிலத்திலிருந்து அவர்களை எப்படி அரசு நிர்வாகம் ஒடுக்கி வெளியேற்றியது என்று எழுதியிருந்தனர். இதுபற்றிய கட்டுரையை தீஸ்தா செடல்வாட் எழுதியிருந்தார். அது உண்மையில் கோரமான நிகழ்ச்சி. 1800களிலிருந்து அசாமில் தங்கி வாழ்பவர்களை முஸ்லீம் என்ற காரணத்திற்காகவே வெளியேற்ற முனைகிறார்கள். இதில் குடியுரிமை பிரச்னை என்பது தனி விவகாரம்.
நீண்டநாள் நண்பரான கார்ட்டூன் கதிரை அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தேன். திருமணமான பிறகு, அவரை இப்போதுதான் பார்க்கிறேன். சிறிய வீடுதான். மனைவியோடு மகிழ்ச்சியாக இருக்கிறார். நன்றாக இருந்தால் சரிதான்.
எங்கள் பத்திரிகை இன்னும் சில வாரங்களில் தொடங்கிவிடும் என நினைக்கிறேன். கம்பெனி ஆச்சரியமாக போனஸ் பணத்தை போட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அடிப்படைச் சம்பளத்தை கொடுத்தார்கள். அதில் பலரும் இன்னும் கொடுத்திருக்கலாம் என்று புலம்பினார்கள்.
லாக்டௌனில் சம்பளத்தை பிடித்துக்கொண்டார்கள். அதை இப்போது போடுவதாக எனக்குத் தோன்றியது. நான் அதை சோதித்துக்கூட பார்க்கவில்லை. கொளத்தூர் மணி எழுதிய ஜாதியத்தின் தோற்றம் என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன். இது கார்ட்டூன் கதிரிடம் கடனாகப் பெற்றது.
நன்றி!
அன்பரசு
17.10.2021
--------------------------
everyday health |
அன்பிற்கினிய நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா? இன்று செருப்பு வாங்க பஜார் தெருவுக்கு சென்றேன். கடைக்காரர், ஜிஎஸ்டி வரி பற்றி வருத்தமாக சொல்லிக்கொண்டு இருந்தார். உடை, செருப்பு என அத்தியாவசியமான விஷயங்களும் வரி உயர்வை சந்திக்கவிருக்கின்றன.
பிரன்ட்லைனில் டி.கே.ராஜலட்சுமி எழுதும் கட்டுரைகளைப் பற்றி முன்னமே கூறியிருக்கிறேனா? அவர் எழுதும் வடிவம், விஷயம் என இரண்டுமே எனக்கு பிடித்தமானது. நிறைய தகவல்களைத் திரட்டி கட்டுரை எழுதி வருகிறார். இவர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் ஊழல் பற்றி எழுதிய கட்டுரையை நான் குங்குமத்தில் படுமோசமாக மொழிபெயர்த்தேன்.
இப்போது படித்துக்கொண்டிருப்பதும் அவர் எழுதிய கட்டுரை ஒன்றைத்தான். இதில் ரத்தசோகை பிரச்னையைத் தீர்க்க அரிசி, கோதுமையில் இரும்புச்சத்தை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதைப்பற்றி, ஏராளமான தகவல்களைச் சேகரித்து எழுதியுள்ளார். வாசிக்க சிறப்பாக உள்ள கட்டுரை இது.
நன்றி!
அன்பரசு
28.11.2021
அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? பிரன்ட்லைன் இதழின் கட்டுரையாளர் டி.கே.ராஜலட்சுமி அவர்களின் கட்டுரையைப் படித்துவிட்டு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினேன். இதழில், இவருடைய கட்டுரைகள் தனியாக தெரியும். ஏராளமான தகவல்களை சேகரித்து கட்டுரைகளாக எழுதுகிறார். அனைத்துமே சமூக அக்கறைக்கான கட்டுரைகள்தான். பிரன்ட்லைன் இதழுக்கான சந்தா, ஏழு இதழ்களோடு முடிகிறது. அடுத்து ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழை சந்தா கட்டி வாங்க நினைத்துள்ளேன். நிறைய பல்சுவை தகவல்களை தாங்கியுள்ள இதழ்.
நேற்று எழுத்தாளர் ஷோபாடே எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். இந்திய மக்களுக்கு நிறைய இந்தியாக்கள் உள்ளன. இதை சொல்வதற்கு எதற்காக அரசு வழக்குகளை தொடுக்கிறது என்று கேட்டிருந்தார். மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நேர்மறை விஷயங்களைப் பற்றி பேசியிருந்தார். பேச்சுரிமை , எழுத்துரிமை என ஜனநாயகத்தை நசுக்குவது தவறு என சுட்டிக்காட்டி எழுதியிருந்தார்.
30.11.2021
------------------
கருத்துகள்
கருத்துரையிடுக